Friday, February 19, 2016

மொழி வழி !மொழி சார்ந்த அரசியல்தான் தமிழ்நாட்டின் உயிர் நாடியாக இருந்திருக்கிறது. ஒரு மொழியை எதிர்த்தே ஒரு கட்சி ஆட்சியை பிடித்தது. நாற்பது ஆண்டுகாலமாக உயிர்துடிப்புடன் இருக்கிறது. ஹிந்தி மொழி திணிப்பை பற்றி சொல்லத்தான் கேட்டிருக்கிறேன். அப்பொழுது பிறக்கவில்லை என்பதால் அதை பற்றி முழுமையாக கருத்து சொல்லமுடியாது. கண்ணால் காண்பதும் பொய் ! காதால் கேட்பதும் பொய் ! தீர விசாரிப்பதே மெய் ! என்று சொல்வார்கள்.     
ஹிந்தி மொழி திணிப்பு பற்றி மூத்தவர்களை கேட்டால் அவர்கள் சொல்வதும், நூல்களை புரட்டினால் அதில் சொல்லப்பட்டு இருப்பதும் மாறுபட்டு நிற்கிறது. வரலாறு கொஞ்சம் திரிபுகள் கொண்டதுதான். தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பை காண்பித்த அதே வேளையில் ஒவ்வொருவரும் கட்டாயம் ஹிந்தி படிக்கவேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். 

இந்தி மட்டுமல்ல பிறமொழி கற்கும் ஆர்வம் நம் மக்களிடையே இல்லாதது மிக ஆச்சர்யமாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒரு சில குழந்தைகளுக்கு மட்டும் கூடுதல் மொழியாக பிரெஞ்சு, இந்தி, ஜெர்மன், ஜப்பனீஸ் போன்றவை படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. கிராம குழந்தைகளுக்கு ஆங்கிலமே தகினத்தோம் தான்.

ஒருவனுக்கு எத்தனை மொழிகள் தெரியுமோ அவன் அத்தனை மனிதனுக்கு சமம் என்றார் பாரதிதாசன். தமிழை உயிராக பாடிய பாட்டன் பாரதிகூட வங்கமொழி கற்று பல பாடல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளான்.
இந்தி எதிர்ப்பு என்ற ஒரு நிகழ்வால் தமிழ் வளர்ந்ததோ இல்லையோ தமிழனின் தேசிய அளவிலான வளர்ச்சி மிகவும் குறைந்துவிட்டது.மத்திய அரசுப்பணிகளின் தமிழர்களின் பங்கேற்பு அருகி வருகிறது.

நமது மொழியின் சிறப்புகளை பிற மொழியில் பரப்ப வேண்டுமெனில் அம்மொழி தெரிந்திருக்கவேண்டும். ஒன்றை செயலிழக்க செய்ய வேண்டுமெனில் அதனுள் ஊடுருவ வேண்டும். ஊடுருவி நின்று பின்னர் நம் எதிர்ப்பு அலையை காண்பிக்க வேண்டும்.

இந்தியாவில் ஒரு அங்கமாகதான் தமிழ்நாடு இருக்கிறது. முடிந்தவரை பிற மாநில மொழிகளை நாம் பேசவும் எழுதவும் கற்றுக்கொள்வது அவசியம்.நாம் சுலபமாக நம் மொழியினை அவர்களுக்கு  போதிக்க, சிறப்புகளை சொல்ல முடியும். நான் பெங்களூரில் வசித்த சமயம். அங்கே திருவள்ளுவர் சிலையையும் இங்கே சர்வக்ஞார் சிலையையும் நிறுவ இருமாநில அரசியல்வாதிகளும் செயல்பட்டனர். இதன் பின்புலத்தில் பெரும் அரசியல் இருந்தது. அப்பொழுது கர்னாடாகவில் மூத்த செய்தியாளராக இருந்த ராஜாராவ் என்பவர் என்னை அழைத்தார். மூத்த என்றால் மிகவும் மூத்தவர். இதில் என்ன காமெடி என்றால்  ராஜா ராவ் தீவிர கன்னட மொழி வெறியர். பல மொழி போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். ஆனால் என்னிடம் தமிழில்தான் பேசுவார். அவர் தமிழர்களிடம் தமிழில்தான் பேசுவார்.அப்பொழுதுதான் நான் கன்னடம் பேச கற்றுக்கொண்டிருந்தேன். நான் ராஜாராவிடம் கன்னடததில் தான் பேசுவேன். என் மழலை கன்னடத்தை மிகவும் ரசிப்பார். அவ்வப்பொழுது திருக்குறள் பற்றி கேட்பார். நான் அவருக்கு முடிந்தவரை கன்னடத்தில்  விளக்கம் சொல்வேன். திருக்குறள் கன்னடத்தில் இருக்கிறது. ஆங்கிலத்திலும் படிக்க முடியும். இருந்தாலும் அந்த ஊர்க்காரன் சொல்ல கேட்கணும் அதில் ஒரு உண்மை இருக்கும் என்பார்.
      இன்று நம்ம ஊர் ஊடகத்துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. நல்ல திறமையான ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்தி மொழி பிரச்சனையாக இருப்பதால் சென்னையை தாண்டி போகமுடியவில்லை. திரைப்பட துறையில் ஒளிப்பதிவு, எடிட்டிங் என பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இது பொருந்தும்.  ஊடகப் பணி மட்டுமல்ல இன்னும் பல பணிகளில் நம் மக்களால் ஊடுருவ முடியவில்லை. ஆனால் ஹிந்தி படித்த  கேரள, கன்னட, தெலுங்கு பேசும் மக்கள் இத்தகைய பணிகளில் சிறப்பாக இடம்பெற்றுள்ளனர்.

யார் எல்லாம் இந்தி தமிழை அழிக்கும் என்று போராடினார்களோ அவர்கள் எல்லோரும் தங்கள் வாரிசுகளை ஹிந்தியில் படிக்க வைத்துவிட்டார்கள். தயாநிதி மாறனுக்கு ஏன் டில்லியில் இந்த பிரதிநிதித்துவம் என்று கருணாநிதியிடம் கேட்டபோது அவர் சொன்னது இதுதான் “ …..ஏனென்றால் தயாநிதிக்கு ஹிந்தி தெரியும் ! “

ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் தமிழர்கள் இந்தியா முழுவதும் ஊடுருவும் வாய்ப்பை முற்றிலும் தடுத்துவிட்டனர். திணிப்பை தடுப்பது வேறு மொழியை கற்றுக்கொள்வது வேறு.  இச்செயல் முற்றிலும் நம் மக்கள் மத்திய அரசின் பல்வேறு பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பை குறைத்துவிட்டது. அங்கொன்று இங்கொன்றுமாக இருக்கும் சிலர் கூட  பிராமணர்கள். அவர்களின் வலிமை சமஸ்கிருதம். எனவே சுலபமாக அவர்களால் இப்பணிகளில் சேரமுடிகிறது.
நாட்டில் மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறோம். மாற்றத்தை உருவாக்கும் வலிமை மிக்கவர்கள் அரசு பணியில் இருப்பவர்கள்தான். மத்திய அரசுப் பணியில் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு  கால் ஊன்றி நிற்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் நம் மண்ணிற்கு தொண்டாற்ற முடியும். காமராஜர் காலத்தில் மத்திய அரசியல் தமிழன் கையில் இருந்தது. சுயநலம் இல்லாத சூழலில் எல்லா நன்மைகளையும் செய்ய முடிந்தது. இன்று மத்திய அரசியல் தமிழன் கையில் வந்தாலும் சுயநலமிகு அரசியலால் தமிழ்நாட்டிற்கு பலன் ஏதுமில்லை. தமிழ்நாட்டை முன்னேற்ற இன்னொரு வழி தமிழர்கள் மத்திய ஆட்சிப்பணிகளில் அதிகரிக்கவேண்டும். அரசு பணிகுறித்து உயரிய விழிப்புணர்வும் ஆர்வமும் மக்களிடையே பரவ வேண்டும். அரைகாசு உத்யோகம் என்றாலும் அரசு உத்யோகம் என்பார்கள். அரைகாசு இல்ல அரசாட்சியின் இதய துடிப்பே அரசு உத்தியோகம்தான்.


No comments:

Post a Comment

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...