Wednesday, February 17, 2016

மனம் நிறைய மகிழ்ச்சி !என்னை யார் சந்தித்தாலும் உடனே வெளிப்படுத்தும் விருப்பம் “ எனக்கும் யோகா கத்துக்கணும்னு ஆசையா இருக்கு, ஆனா டைம் இல்லை “. நான் பெரும்பாலும் இத்தகைய மனிதர்களுக்கு புன்னகையதான் பரிசளிப்பேன். அடுத்து எதற்கு யோகா கற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டால் அவர்களிடம் சரியான பதில் இருக்காது. அவர்கள் யோகா கற்றுக்கொள்ள விரும்பும் காரணம்
ஒன்று அதிக வேலை பளு அல்லது மன அழுத்தம் என்றிருக்கும்.
நான் செய்கின்ற வேலையில் திருப்தி இல்லை என்பதாக இருக்கும்.
அல்லது யோகா கற்றுக்கொண்டால் செல்வமும் , வசதியும் வந்து குவியும் என்ற நம்பிக்கை.
மூன்றுமே மனம் சம்மந்தமான பிரச்சனைதான். மனதிற்கும் உடலுக்கும் தொடர்பிருக்கிறது. நீங்கள் உடலை உற்சாகப்படுத்த செய்யும் பயிற்சி மனதை உற்சாகமூட்டும். அதற்கு யோகா உதவுகிறது. ஆனால் எனக்கு நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே யோகா கற்றுக்கொள்ள விரும்புவர்களை என்ன செய்ய முடியும்.
உண்மை இதுதான் ! யோகம் என்று தனியே எதுவுமில்லை. அந்த காலத்தில் வாழ்வில் உயரிய நிலையான ஞானமார்க்கத்தை தேடி அலைந்த யோகிகள் யோகம் மட்டுமே கதியென கிடந்தார்கள். ஆனால் மன்னர்களும், வணிகர்களும், இயல்பான குடிமக்களும் தங்கள் வேலையை மட்டுமே செய்துகொண்டே இருந்தனர். ஏனெனில் நமக்கு பணிக்கபட்ட பணியை செவ்வனே செய்துகொண்டிருப்பதும் சிறந்த யோகமே !

ஒரு அழகான கதை சொல்வதுண்டு.

சிவனை வேண்டி ஒரு சிவனடியாரும் அதே நேரமும் மீன்காரனும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். சிவனடியார் சிவாய நமஹ ! எனும் போதெல்லாம் புத்தியை எங்கோ வைத்துக்கொள்வார். மீன்காரன் மீனை வெட்டும் போதெல்லாம் மிகவும் லயித்து சிவாய நமஹ என்பான். இறுதியில் மீன்காரனுக்கு சிவனின் கிருபை கிடைத்தது.

தமக்கு விதிக்கப்பட்ட, தாம் செய்கின்ற செயலை யாரெல்லாம் விருப்பமுடன் உயிர்கலப்பு பெற்று செய்கின்றனரோ அவர்கள் எல்லாம் பொருள்துறையிலும், தொழில்துறையிலும், அருள்துறையிலும் உயர்ந்துகொண்டே இருக்கின்றனர்.

யோகா என்பது இப்பொழுது ஒரு வியாபாரபொருளாகி விளம்பரபடுத்தப்பட்டு வருவதால், இதன் மூலம் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்றால் நிச்சயம் நிகழும்.

உண்மையில் மற்றவர்களின் யோகா விருப்பம், திடீரென ஏற்படும் பணிச்சுமையும் மன அழுத்தமும்தான். அதற்கு காரணம் நமது மன அலைச்சூழலில் ஏற்படும் மாற்றம். அதாவது பீட்டா நிலைக்கு மனம் தள்ளப்படுவது. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் மன அலைச்சூழல் 13 CPS க்கு மேல் போகும் போது இந்த பதட்டம், விரக்தி, பயம், வருத்தம், கவலை, பொறாமை, எல்லாம் வரும். நீங்கள் மன அலைச்சூழலை 8 க்கு கீழே அதாவது ஆல்பா நிலைக்கு கொண்டுவந்தால் போது போயே போய்விடும். அதற்கு மிக சுலபமான வழி யோகம். யோகம் செய்ய நேரம் இல்லை என்பவர்களுக்கு சுலபமான சில பயிற்சிகள்

பயிற்சி : 1

உங்களுக்கு பிடித்தமான பாடலை ஒரு பத்து நிமிடம் கேளுங்கள். அப்பொழுது வாழ்வில் நிகழ்ந்த மகிழ்ச்சியான சம்பவங்களை அசைப்போடுங்கள். பாடலை கேளுங்கள் என்பது எல்லோரும் சொல்வதுதானே இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா ? அவ்வாறு கேட்கும் போது உங்கள் உடலோடு அதன் அதிர்வுகளை கலந்து உணருங்கள். தடாலடியான இசையாக இல்லாமல் கொஞ்சம் மென்மையான இசையாக இருந்தால் சிறப்பு.

பயிற்சி : 2

முடிந்தவரை நீலவானத்தை தினம் ஒரு பத்து நிமிடமாவது பார்க்க பழகுங்கள். வானிற்கு அதீத ஆற்றல் உண்டு, நாம் வானத்தை உற்றுப்பார்க்கும் போது நமக்கும் வானத்திற்குமிடையே ஒரு இணைப்பு ஏற்படும். நம் உடலில் உள்ள அழுத்தங்கள் கரைந்து கரைந்து உடலும் மனமும் மென்மையாய மாறும். விண்ணின் காந்த ஆற்றல் அப்படி.

பயிற்சி : 3

எதுவும் இல்லையெனில் கண்களை மூடி மூச்சையே இயல்பாக எந்தவித அழுத்தமும் தராமல் கவனியுங்கள். பிறகு கொஞ்ச நேரம் கழித்து உடலில் ஒவ்வொரு அங்கமாக நினைவுக்கு கொண்டு வாருங்கள். அவ்வாறு செய்யும் போது மூச்சையும் சீராக இழுத்தபடி நினைவில் கொண்டபடி செய்யுங்கள்.

இது எதுவுமே  ஒர்க் அவுட் ஆகவில்லையா பைக்கை எடுத்துகொண்டோ அல்லது ஒரு பத்து நிமிட நடை பழகுங்கள்.  நாம் அலுவலகம் என்ற பெயரில் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் அழுந்திகிடப்பதும் கூட இந்த பிரச்சனைக்கு காரணமாகிறது. எதை செய்தாலும் விருப்பமுடன் செய்யும்போது மன அலைச்சூழல் குறையும். ஈர்ப்பு சக்தி மேம்படும். திறன் அதிகமாக வெளிப்படும். அப்புறம் என்ன உயர்வும் பாராட்டுக்களும்தான். உயர்வு என்றால் பொருளாதாரத்தையும் சேர்த்துதான்.


.

No comments:

Post a Comment

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...