Saturday, February 13, 2016

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


இது இந்தியா !
சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் வந்த ஒலி ஒளிக் காட்சி. அது ஒரு அடர்ந்த வனப்பகுதி. நடுவில் பெரும் சாலை. புகையைக் கக்கிகொண்டு ஒரு கார் அந்த சாலையில் விரைகிறது. திடீரென்று விர்ரென்று ஒரு சத்தம். காரின் பின்புலத்தில்  இருந்து புகை காற்றில் கரைய அந்த காட்சி நம் இதயத்தில் இரத்த ஓட்டத்தை உறைய செய்கிறது.
பிறந்து சில வாரங்களே ஆன பால்மனம் மாற சிறிய குரங்கு குட்டி. மூக்கில் இருந்து இரத்தம்  கசிய கண்கள் விண்ணை நோக்கி அசைவற்று நிற்க சிறிது சிறிதாக அடங்கிகொண்டிருந்தது. அதன் பார்வை என்னை ஏன் இந்த மண்ணில் படைத்தாய் இறைவா என்று பார்ப்பது போல் ஒரு பாவனை.
ஒரு சில வினாடிதான் தாய் குரங்கு எங்கிருந்தோ குதித்தது. சிறிதுசிறிதாக அடங்கிகொண்டிருந்த பிள்ளைக்குரங்கினை இரு கைகளால் அணைத்து இதயத்தோடு இதயமாக தன் இதய துடிப்பை அதனுடன் பாய்ச்ச முயன்றுகொண்டிருந்தது. பாவம் அது ஒன்றும் தெய்வபிறவியில்லையே. கேவலம்  ஒரு குரங்கு ! அதனால் தன் இதயத்துடிப்பை தந்து தன் பிள்ளையின் இதயத்துடிப்பை உயிர்ப்பிக்க முடியவில்லை.  சினம் கொண்டு எழமுடியவில்லை.  கும்பல் சேர்த்து அடுத்து வரும் வாகனத்தின் மீது கல் எறியவோ, கொளுத்தவோ தெரியவில்லை.
குந்தி தேவி தன் மகன் கர்ணனின் உடலை மடியில் கிடத்தி கதறுவதை போல, அந்த குரங்கும் தன் மடியில் உயிர்துறக்கும் பிள்ளையை கையாலாக தாயாக கண்களில் நீர் துளிர்க்க சுற்றும் முற்றும் பரிதவிப்புடன் பார்க்க தூரத்தில் விரைந்த வாகனம்  எதைப்பற்றியும் கவலையின்றி கார் ஜன்னல் வழியாக குடித்து முடித்த பீர் பாட்டில்களை இரைத்தபடி அகோரமான ஓசையுடன் விரைந்து மறைந்தது.
இதுதான் நாம் நம்முடன் வாழும் விலங்குகளுக்கு தரும் மரியாதை.

இது சிங்கப்பூர்
சிங்கப்பூர் மத்திய வனப்பகுதியையும் புக்கிட் திமா வனப்பகுதியையும் இணைக்கும் விரைவு சாலை.  சாலையில்   அதிவேகமாக வாகனங்கள் விரைந்து கொண்டிருக்க சாலையின் மேற்பகுதியில் இயற்கையோடு இயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும் பசுமைபாலம். அதன் மீது எந்தவித அச்சமும் இன்றி இயல்புவாழ்க்கை பாதிக்காத வகையில் விலங்கினங்கள் விளையாடி செல்கின்றன. சாலை விபத்தில் ஒரு விலங்கும் இறந்ததாக குறிப்புகள் இல்லை.
சீனர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூரில் அசைவ உணவு என்பது மிக சாதாரணம். உணவுக்காக உயிரைகொல்பவர்களாக இருப்பினும் பிற உயிரின் மதிப்பை உணர்ந்தவர்களாதலால் சுமார் 17  மில்லியன் டாலர் மதிப்பில் அதாவது நூற்றி இருபது கோடி செலவில் இப்படி அற்புதமான ஏற்பாட்டை செய்துள்ளனர்.
சிங்கப்பூர் மட்டுமல்ல ஐரோப்பா ,அமெரிக்கா போன்ற மேனாடுகளில் இத்தகைய பாலங்களை அதிகம் காணலாம். ஆனால் இந்த நாடுகளை விட  இந்தியாவிற்கு பல சிறப்புகள். உலகிலேயே அரிய விலங்கினங்களும், பறவைகளும் நிறைந்த நாடு. ஆனால் இதனை எப்படி பாதுகாப்பது என்பது நமக்கு தெரியாமல் இருப்பதுதான் நம் பலவீனம்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு தினமணியில் வந்த ஒரு செய்தி. அதாவது 2013 ல் மட்டும் சுமார் 1600 விலங்குகள் திருச்சியை சுற்றிய  பகுதிகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.  இது திருச்சிக்கு மட்டுமேயான புள்ளிவிவரம் இந்த மூன்றாண்டுகளில் மாநிலம் முழுவதும் ஏன் நாடு முழுவதும் கணக்கிட்டு பாருங்கள். இதையெல்லாம் கணக்கிட்டு பார்க்க கூட நம் ஊரில் நாதியில்லை.
பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதியில் ஆற்றுக்கு குறுக்கே ஒரு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் ஏரிகள் இருக்க, பாம்போ ,பல்லியோ, தவளையோம்ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு போகவேண்டுமெனில் இந்த சாலையை தான் கடக்க வேணும். அதிகாலையில் நீங்கள் இங்கு பயணித்தால் எத்தனை உயிர்கள் இங்கு அடிப்பட்டு கிடக்கின்றன என்பதை காணமுடியும்.
தவளையும் பாம்பும் இறந்தால் நமக்கென்ன என்று நினைக்கவேண்டாம். இவை எல்லாம் சுற்றுசூழலின் பாதுகாவலர்கள். இவற்றின் எண்ணிக்கை குறைய குறைய மனிதனின் ஆயுள் நிலையும் குறைந்துகொண்டே வரும். ஏன் இந்த பூமியின் தட்பவெட்பநிலையும் கூட மாறும்.
இவற்றை மாற்றி அமைக்க ஒரே வழி. நமக்குள் நாமே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான். முடிந்தவரை காடுகளில் ஊடே பயணிக்கும் போது மிகவும் கவனமாக பயணிப்பது. வாய்ப்புள்ள பெருநகரங்களில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது. பெரும் கார்பரேட் நிறுவனங்கள் மனசு வைத்தால் இத்தகைய பாதைகளில் சிங்கப்பூரிலும் ஐரோப்பாவில் இருப்பதை போன்று நம்மூரிலும் பாலம் அமைத்து விலங்குகளுக்கு உதவலாம்.
பள்ளிக்கரணை பகுதியை சுற்றி எத்தனையோ மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. அந்த பகுதி நிறுவனங்களும், ஏன் மென்பொறியாளர்களும் மனது வைத்தால் இயற்கையை துண்டாடி  உயிரனங்களை துண்டாடிக்கொண்டிருக்கும் அந்த சாலையின் மத்தியில் ஒரு இயற்கை பாலம் அமைக்க முடியும்.
இத்தகைய விடயங்களை முன்னிறுத்தி நாடு முழுவதும் விழிப்புணர்வு செய்ய கோவையை சேர்ந்த Environmental Conservation Group  முகம்மது சலீம் என்பவரின் தலைமையில் நாடெங்கும் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. பள்ளிக்கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல். காடுகளில் விளம்பர தட்டிகள் வைத்தல் என தொடர்கிறது இவர்களின் பயணம். இது ஒரு சிறு தீப்பொறிதான். இது மேலும் மேலும் பரவி வெளிச்சமாக வேண்டும் அந்த வெளிச்சம் நாம் ஒவ்வொருவரின் இதயத்தில் இருந்தும்  ஒளிரவேண்டும்.
No comments:

Post a Comment

மொழி வழி !

மொழி சார்ந்த அரசியல்தான் தமிழ்நாட்டின் உயிர் நாடியாக இருந்திருக்கிறது. ஒரு மொழியை எதிர்த்தே ஒரு கட்சி ஆட்சியை பிடித்தது. நாற்பது ஆண்...