ஒரு மகா கலைஞனின் ஆசி - காட்பாதர் தருணங்கள்


ரம்மியமான மாலைப்பொழுது.

நூற்றாண்டு கண்ட கல்வி நிறுவன வளாகம்.

இந்திய திரையுலகின் பல முத்துக்களை தந்த கலைக்கடல் அந்த அறிவகம். நடைபெற்றுக் கொண்டிருந்த குறும்படவிழா ஒத்த அலையியக்கத்திற்கு வலு சேர்த்துக்கொண்டிருந்தது. எனது ஆதர்சன கலைஞனை மிக அருகில் நின்று பார்க்கிறேன். இதற்கு முன்பு அவரை பலமுறை பார்த்திருந்தாலும் இப்போது அவரை ஒரு விசேஷ காரணமுடன் நோக்குகிறேன்.

எனக்கே அவரைப் பார்ப்பதில் கொஞ்சம் பிரம்பிப்புதான். அரை டிரவுசர் பொடியனாக நானிருந்த காலத்தில் ஒரு படத்தில் அவர் “ பீடா சேட்டாக” வந்த அவதாரத்தை கண்டு மிரண்டு இருக்கிறேன்.

அவ்வை சண்முகியில் ஊமை பிராமண சமையல்காரனாக அவரின் சேஷ்டைகளை கண்டு குலுங்கி குலுங்கி சிரித்திருக்கிறேன்.

எது தேவையோ அதுவே தர்மம் என்கிறது கீதை.

திரைத்துறையில் எது தேவையோ அதனை கொடுத்து அதன் தர்மத்திற்கு வாழும் மகா கலைஞன் நாசர் தான் அவர்.
                                                                 Selfie with Nasser Sir

அவரிடம் ஆசிபெற எனது காட்பாதர் திரைக்கதை தமிழாக்க நூலின் ஒரு பிரதியை கொடுத்தேன்.

நல்ல படங்களின் திரைக்கதைகள் ஆவணமாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். படத்தினை உருவாக்க காண்பித்த நேர்த்தியை அவரின் அவதாரம் படத்தின் திரைக்கதையை நூலாக கொண்டு வருவதிலும் வெளிப்படுத்தியவர்.

நாமும் ஒருநாள் திரைக்கதைகளை புத்தகமாக கொண்டு வரவேண்டும் என்ற உத்வேகத்தை உண்மையில் அவதாரம் திரைக்கதையை படிக்கும்போது எனக்கு ஏற்பட்டது.

ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தார்.
ஊடுருவி நிற்கும் ஆழ்ந்த பார்வை
வினாடியில் அவரின் முகத்தில் புன்னகை கமழ்ந்தது.

நல்ல முயற்சி...முழுமையா படிச்சிட்டு நிச்சயம் உங்களிடம் பேசுகிறேன்”

என்னை நிமிர்ந்துபார்த்து என் கண்களை நோக்கினார்.அந்த பார்வை என்னுள் ஊடுருவி ஒரு சிலிப்பை தந்தது. துரோணர் ஏகலைவனைப் பார்த்தபோது இப்படிதான் ஏகலைவனுன் இப்படிதான் உணர்ந்திருப்பானோ ?

அல்பாசினோவையும்,மார்லன் பிராண்டோவையும் சில நிமிடங்களை லயோலாவின் வளாகத்திற்கு கொண்டுவந்துவிட்டார். அவருடனான சில நிமிட உரையாடலில் ஒரு திரைக்கதை வகுப்பில் கலந்துகொண்ட அனுபவங்கள் என்னுள் பதிந்துகொண்டன. அவரிடம் நூலினை கொடுத்து ஆசிபெறவேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. சுற்றிலும் ஊடக மாணவர்கள் புடைசூழ அவர் நூலினை பெற்றுக்கொண்டு சொன்ன நம்பிக்கைகள் அது இன்னொரு வெளியீட்டு விழாவாகவே மாறிவிட்டது.

காட்பாதர் திரைக்கதை அமைப்பு என்பது வெறும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றல்ல, அதனுள் ஒரு ஆழமான உளவியல் கோட்பாடு ஒளிந்துகொண்டிருக்கிறது. வெற்றியை சுவைக்க தவிக்கும், முன்னனியில் நிற்க துடிக்கும் இயல்புதான் மனிதனின் உளவியல் பண்பு. அவன் ஜனித்து உருப்பெற்ற்றதின் அடிப்படையே அந்த யத்தனிப்புதான். கோடிக்கணக்கான உயிர்செல்களுள் ஒருவனாக இருந்த அந்த வினாடியில் அத்தனை கோடிசெல்களையும் முந்திக்கொண்டு கருமுட்டையை ஊடுருவி நின்றதினால்தான் அவன் மனிதனாக உருப்பெற்று புவியின் தரிசனத்திற்கு தகுதியாக முடிந்தது. காட்பாதரின் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்குள்ளும் இந்த யுக்தி வெளிப்படும். காட்பாதரை திரும்ப திரும்ப படிக்கும் போது இதனை உறுதியாக உணரமுடியும்.

இது வெறும் திரையுலக பாத்திரங்களுக்கு மட்டும் பொருந்தாது நிஜத்திலும் ஒவ்வொருவரின் வேட்கையும் இதுதான். ஒன்றில் ஒன்றி நிற்பதற்கு உறுதியான மனோநிலை வேண்டும். அதுவே உங்களை முதன்மையாக முன்னிறுத்தும்.

திரைக்கலைஞனாக தனியாட்டம் ஆடினாலும் சரி, சிவாஜிகணேசன், கமல் போன்ற பெரும் கலைஞர்களோடு கூட்டாட்டம் ஆடினாலும் அவர்களுள் அடக்கி வாசித்துக்கொண்டே தனக்கான முன்னிலைபடுத்தலை சாத்தியமாக்கிய பெரும் கலைஞன் நாசர்.

காட்பாதரை இன்றைய தேதிக்கு அப்படியே தமிழில் எடுத்தால் மார்லன் பிராண்டோவை ஈடுசெய்யக்கூடிய கலைஞர் நாசர் மட்டுமே. அதனாலேயே அவரிடம் இந்நூலை சேர்ப்பிக்கவேண்டும் என்பதில் ஆவலுடன் இருந்தேன்.
இவ்வாண்டின் சின்ன சின்ன கனவுகள் நிறைவேறிக்கொண்டிருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியே !

நன்றி நாசர் சார் !Comments

Popular posts from this blog

கல்யாணம் ஆனவர்களுக்கும் கல்யாணம் ஆகாதவர்களுக்கும்

ஆழியாறு வாங்க ! ஆனந்தம் வாங்க !

கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும் !