Saturday, February 7, 2015

டாஸ்மாக்கும் - ரியல் எஸ்டேட்டும்குடிப்பழக்கத்தில் இருந்து மீளமுடியாமல் இரண்டு மாணவர்கள் தற்கொலை என்ற செய்தியின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்குள் இன்று என்னை டாஸ்மாக் ஒன்றிற்கு விஜயம் செய்யும் வாய்ப்பை வழங்கிவிட்டது இறைநிலை.

இதை மக்கள் முதல்வரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில் மதியும் விதியும் இணைந்து  எனக்கு எதிராக செய்த சூழ்ச்சி இது !


தமிழனையும் சினிமாவையும் எப்படி பிரிக்க முடியாதோ அதே போன்று டாஸ்மாக்கையும் ரியல் எஸ்டேட்டையும் பிரித்துப் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.

ஒன்று உடல்நலத்தை அழிக்கிறது.
இன்னொன்று வேளாண்மையை அழிக்கிறது. இரண்டிலும் சம்மந்தப்பட்ட உறவுகளும்,நட்புகளும் நம்மை சூழ்ந்து வாழ்வதால் இவ்விடங்களுக்கு சந்தர்ப்ப சூழலினால்  போக வேண்டியிருக்கிறது.
ரியல் எஸ்டேட்டின்பெரும்பாலான முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தைகள் டாஸ்மாக் வளாகத்தில் தான் முடிவாகின்றன. ரியல் எஸ்டேட் மட்டுமல்ல பல வர்த்தக முடிவு மையங்கள் டாஸ்மாக்கு தான்.

எனக்கும் பெரியபாளையம் வழிச் சாலைக்கும் கிட்டத்தட்ட பத்தாண்டுக்கு மேலான தொடர்பு இருக்கின்றது. எனக்கு வேண்டிய முக்கிய நபர் ஒருவர் அங்கு இறால் பண்ணை வைத்திருந்தார்.

சனி ஞாயிறு மாலை வேளைகளில் இறால் பண்ணை தான் என் பொழுது போக்கு. அப்போது அந்த நிலத்தை சுற்றி பெரும் பசுமைவெளி படர்ந்திருக்கும். பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும். இப்போது அந்த நிலங்கள் எல்லாம் முற்றிலும் அழிந்துவிட்டன. பல பசுமைவெளிகள் காம்பவுண்ட் சுவருக்குள் கிடங்குகளாக சுருங்கிவிட்டன.

அதன் நிலப்பிரபுக்களாக, உரிமையாளர்களாக வலம் வந்த விவசாயிகள் இருப்பதையெல்லாம் தொலைத்துவிட்டு டாஸ்மாக் வளாகத்தில் சுருண்டு கிடப்பதை நேரிடையாக பார்க்கிறேன்.

வேளாண்மை அழியும் போது அந்த தேசமும் அழிந்துகொண்டிருக்கிறது என்பதற்கு டாஸ்மாக்கினுள் விழுந்து கிடக்கும் இந்த மக்களே சாட்சி.


குடி என்பது கொண்டாட்டமான நிகழ்வாகதான் உலகமெங்கும் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் குடியை கெடுக்கும் கேடான செயலாக மாறியிருக்கிறது.

எனது பத்தாண்டிற்கு மேலான பெங்களூர் வாசத்தில் சொன்னால் நம்ப மாட்டீர்கள், Bar புகழும் பெங்களூரில் ஒருவரை கூட குடித்துவிட்டு பாரில் விழுந்து கிடந்து பார்த்தது இல்லை.

குடிப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்ற பிம்பத்தை உடைத்தது பெங்களூர்தான். அதுவும் கெட்டப்பெண்கள் தான் குடிப்பார்கள் என்று சினிமாவை பார்த்து நம்பிக்கொண்டிருந்தேன். குடிப்பதற்கும் குணாதிசயத்திற்கும் தொடர்பில்லை என்று தெளிவானது இங்குதான்.

நான் பெங்களூருக்கு சென்ற நான்காவது மாதமே எனக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. எனது பிறந்த நாளை தெரிந்துகொண்டு வாழ்த்து சொன்ன என் ஜூனியர் பெண்ணொருத்தி “ சார் ! எப்போ எங்களுக்கு ட்ரீட் ! “ என்றாள்

மதியம் ! என்றேன் “

மதியமாவே...நோ....நோ...சார்..... ஆபிஸ் முடிஞ்சி ஆறுமணிக்கு மேலே “ என்றாள்.

கிராமத்து அப்பாவியான எனக்கு மதியம்னா நல்லாவே வயிறு நிறைய ஒரு பிரியாணி வாங்கி கொடுத்துவிடலாம். ஆறுமணிக்குன்னா டிபன் தானே இருக்கும் ,பாவம் அந்த புள்ளைக்கு வயிராற சோறு போட முடியாதே ! என்ற யோசனை.

ஆறு மணி ஆனதும் தான் உண்மை தெரிந்தது.

நான் பக்கத்தில் இருக்கும் சாகர் ஹோட்டலுக்கு போகலாம் என்று சொல்ல, அவள் என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி

சார் ! சாகர்ல பீர் கிடைக்காது....Will go to beer cafe mg road or to pressclub cubbon park “ என்றாள்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சே...சே....பொம்பளை புள்ளைங்க குடிப்பதா ? “

இன்னும் நான்கு ஐந்து ஆட்கள் ( அதில் மூன்று பெண்கள் ) என கூட்டம் சேர அவர்களின் நக்கலுக்கு பயந்து வற்புறுத்தலுக்கு இணங்க,அங்கு போனபின்புதான் தெரிந்தது .

பெண்கள் பீர் மட்டும் அல்ல தம்மும் அடிப்பார்கள் என்று.

முதலில் குழப்பமும் உதறலும் இருந்தாலும். பின்னர் Socialismத்தில் ஐக்கியமாக கற்றுக்கொண்டேன்.

நாளடைவில் நான் எங்கு நிற்கவேண்டும் என்ற தெளிவுடன் நின்றதால் யாரும் என்னை எதற்கும் நிர்பந்திப்பதில்லை.

பெங்களூர் மட்டுமல்ல. இந்தியாவிற்கு வெளியேவும்,நான் பார்த்தவரை குடி என்பதை ஒரு கொண்டாட்ட அளவிலோ, அல்லது உணவின் ஒரு பகுதியாகவோ தான் பல நகரங்களில் பாவிக்கின்றனர்.

அதன்பின் பெங்களூரில் பல கொண்டாட்டங்கள், விழாக்கள்.

சூப்பர் மார்கெட்டுகளில் கூட மதுபானங்கள் விற்கப்படுவது எனக்கு வியப்பைத் தரும். விதவிதமான வடிவமைப்புள்ள பாட்டில்களில் புது புது நிறங்களில் பார்ப்பதற்கு உண்மையில் அழகாகவே இருக்கும். குடிப்பழக்கம் இல்லாதவர்கள் கூட அதனை ரசிக்கும் வகையில் இருக்கும். நண்பர்களுடன் செல்லும்போதெல்லாம் அதனை பார்த்து பார்த்து பல பிராண்டுகளின் பெயர், விலை, வகை எனக்கு அத்துபடி.

பெங்களூரின் படுமட்டமான கடைகள் கூட ஓரளவு காற்றோட்டமும் சுகாதாரமும் உள்ளதாக இருக்கும்.

தமிழ்நாட்டுக் கடைகளின் நிலை வெட்ககேடு.

சில மாதங்களுக்கு முன்பு நக்கீரன் வார இதழ் வெளியிட்ட உண்மைநிலை. தமிழ்நாட்டு பார்களில் விற்கபடுவது முழுவதும் எரிசாராயம் என்ற தகவல் அதிர்ச்சியை தந்தது.

மது தயாரிக்கபடுவதற்கென கடுமையான வழிமுறைகள் உண்டு. பெரும்பாலும் மலரில் இருந்தோ, பழத்தில் இருந்தோ குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்படவேண்டும்.

ஆனால் இந்த முறைகளில் எல்லாம் தயாரிக்க காலமும் அதிகமாகும் செலவும் அதிகமாகும், அதனால் நேரிடையாக எரிசாராயத்துடன் உரிய அளவில் ஒவ்வொரு மதுவகைக்கு உரிய வாசனை வஸ்துவைக் கலந்து நேரிடையாக புட்டிகளில் அடைக்கப்படுவதாக சொன்னது நக்கீரன் வார இதழின் அந்த கட்டுரை.
முறையாக தயாரிக்கப்பட்ட மதுவை அளவோடு பருகும்போது பெரும் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால் இதுபோன்ற வகைகளை அருந்தும்போது நிச்சயம் கல்லீரலை கரைக்கும். உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்க்கும் பணியில் கலந்துகொண்ட அத்தனை பேரும் சொத்தையாக போனது இதனால்தான்.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுஷனை கடித்த கதையாக, நேற்று முன் தினம் இரண்டு மாணவர்களின் தற்கொலை இன்றைய தமிழ்நாட்டின் நிலையை மேலும் மோசமாக வெளிப்படுத்துகிறது.

உண்மையில் தமிழகத்தின் நிலை படுமோசமாக போய் கொண்டிருக்கிறது. வாழ்வின் அடிப்படையான விளைநிலங்களும் , உடல் ஆரோக்கியமும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துகொண்டிருக்கின்றன.

உரிய மாற்றங்கள் உடனடியாக தேவை.

மதுக்கடைகளை ஒரே நாளில் மூடிவிட முடியாது. அப்படி மூடும் போது குடித்து பழகியவர்களின் உடல்நல மனநல சிக்கல்களை சமாளிப்பது என்பதும் இயலாத காரியம்.

உடனடி தேவை குடியைப் பற்றிய விழிப்புணர்வு. அடுத்து மோசமான பராமரிப்பு மற்றும் சூழல்களுக்கு காரணம் அதில் புழங்கும் பணமும் அரசியலும். அரசியலில் இருப்பவர்கள் தான் பெரும்பாலும் மதுக்கடைகளின் அருகே பார் நடத்துகிறார்கள்.
அதனால் அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றிருக்கிறது. அவர்களிடம் இருந்து பிடுங்கி, ஆண்களுக்கு சுய உதவிக்குழுக்கள் அமைத்து ஒரே கண்காணிப்பில் கீழ் கொண்டு வரவேண்டும். இவர்களுக்கு சுகாதார பயிற்சி மற்றும் முதலுதவி பயிற்சிகள் அளிக்கபடவேண்டும். இப்படி சொல்வது சிரிப்பு வரவழைக்கலாம். அல்லது குடிக்கு பரிந்துரை செய்வதை போல் தோன்றலாம். குடிப்பவனே நினைத்து திருந்தும் வரை குடியை முற்றிலும் ஒழிக்க முடியாது.எனினும் குறைந்தபட்சம் வாக்களிக்கவாவது அவன் உயிருடன் இருக்க வேண்டும் என்பதால் அரசு அவன் நலத்தில் அக்கறை கொள்ளவேண்டும்.

அடுத்து ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வருவோம்

பெருகிவரும் மக்கள் தொகைக்கு நல்ல குடியிருப்புகள் அவசியம்.  இதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை.ஆனால் அது முறைப்படுத்த ஒன்றாக நிகழ்வதாக தெரியவில்லை.

சிங்கப்பூரில் ஒரு அடியை கூட அரசின் அனுமதியின்று வாங்க முடியாது. அப்படி உரிமை கொண்டாடினாலும் 99 வருடத்திற்கு பிறகு அது மீண்டும் அரசுக்கு சென்றடைந்துவிடும்.

இங்கு நினைத்தவன் எல்லாம் பிளாட் போடலாம் என்ற நிலை. அப்பாவி விவசாயிகளை மூலை சலவை செய்து அவர்களிடம் நிலங்களை வாங்கி கொள்ளை அடித்துகொண்டிருக்கிறார்கள்.

சொந்தவீட்டு கனவுடன் அலையும் மாதாந்திர சம்பளக்காரர்கள் தான் இவர்களின் இலக்கு. அஞ்சு லட்சம் பத்து லட்சம் கொடுத்து எதிர்காலத்தில் உயரும் என்ற நம்பிக்கையில் ஒரு மனையில் முதலீடு செய்வதை விட, விவசாய நிலங்களில் முதலீடு செய்யுங்கள்.ஒரு விவசாயிக்கு வாழ்வுகொடுங்கள் . அவருடன் இணைந்து வேளாண்மை செய்து உங்களுக்கான உணவு தானியங்களை நீங்களே உற்பத்தி செய்துகொள்வதுடன், விற்பதின் மூலம் பணமும் சம்பாதிக்க முடியும். வார விடுமுறைகளில் அங்கு சென்று இயற்கையான சூழலிலும் கொஞ்சம் வாழ்ந்து வரலாம்.
ஒரு நாட்டை காப்பாற்றுவது அரசிடம் மட்டுமல்ல. மக்களிடமும் தான் இருக்கிறது. மக்களால் ஆனதுதான் அரசு. முதலில் மக்கள் என்னவேண்டும் என்பதை தெளிந்துகொள்ளவேண்டும். வாழ தெரியாதவர்கள் வாழும் நாட்டில் ஆளத் தெரியாதவர்களின் ஆட்சி நடக்கும் என்பார் வேதாத்ரி மகரிஷி.

மேற்கண்ட இரண்டு கேடுகளையும் மக்களே தவிர்க்க முடியும். ஆள்பவர்கள் முறையாக ஆள மக்கள் வாழ தெரிந்துகொள்ளவேண்டும்.


என்னை அறிந்தால் - ஷமிதாப்பிரபலமானவர்களின் பங்கேற்பு இருக்கிறது என்பதால் ஆஹா ! ஓஹோ ! என்று புகழும் கலாச்சாரம் பெருகி வருகிறது. இது சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் என்னை அறிந்தால் மட்டும் ஷமிதாப் படங்களுக்கும் பொருந்தும்.

என்னை அறிந்தால் ;
முந்தைய அஜித் படங்களோடு ஒப்பிடும் போது மகா மோசம். ஆனால் வயதுக்கேற்ற வேடங்களை விரும்பி செய்யும் இயல்பான அஜித்தின் நிஜமான தயாள குணத்தை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்

ஷமிதாப் :
முந்தைய பால்கி படங்களோடு ஒப்பிடும் போது கொஞ்சம் குழப்பம்தான். ஆனால் நடிப்பில் பூந்து விளையாடும் தனுஷ் மற்றும் அமிதாப்பிற்காக ஓகே சொல்லலாம்.


என்னை அறிந்தால் :

தன் காதலியை கொன்றவனை பழிவாங்கத் தேடி அலையும் ஒரு போலிஸ் ஆபிசர், முயற்சியின் ஊடே ஒரு உறுப்புதிருட்டு கும்பலை கண்டுபிடித்து எப்படி அழிக்கிறார் என்பதுதான் கதை.

இதனை காக்க காக்க படத்தின் சீகுவலாக எடுத்திருந்தாலே கூட போதும், தெளிவாக திரைக்கதை எழுதி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கமுடியும்.

ஆனால் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, இன்னொரு மிஷ்கின் படம் என்று கலந்துகட்டி நமக்குள் ஒரு புத்துணர்வு எழாத சூழலை தந்திருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். திரைக்கதை உறுதுணை எனும் டைட்டிலில் ஆரண்ய காண்டம் இயக்குனரின் பெயரும் வருகிறது. யூ டூ தியாகராஜன் குமார ராஜா !

வழக்கமாக கவுதம் மேனன் படம் என்றால் இசையில் படமாக்கலில் ஒரு துள்ளல் இருக்கும். வா ராஜ வா வா என்ற ஒரே ஒரு பாடலைத் தவிர மற்றதெல்லாம் ஜவ்வடிக்கின்றன. இந்நிலையில் பழைய புராணப்படம் போன்று அடிக்கடி பாடல்கள் வந்து பொறுமையை சோதிக்கின்றன.

அருண்குமாருக்கு இதில் வில்லன் அவதாரம்.

அஜித்துக்கு வில்லன் என்பதாலே ஒப்புக்கொண்டு திறம்பட செய்திருக்கிறார். எனினும் காக்க காக்கவில் வில்லன் ஜீவனுக்கு இருந்த அழுத்தம் இதில் இவருக்கு இல்லை என்பதுதான் உண்மை.

அனுஷ்காவும் - திரிஷாவும் அழகு.

டான்ஸ் டீச்சராக வரும் த்ரிஷாவின் உடல்மொழி ஏனோ காக்க காக்க ஜோதிகாவை நினைவுப்படுத்துகிறார்.

மிகச் சிறந்த இயக்குனரான கவுதம் மேனன் அரதபழசான இந்த களத்தை அதுவும் முன்பு பயன்படுத்திய யுக்திகளையே மீண்டும் ஏன் இதில் பயன்படுத்தியுள்ளார் என்பது புரியவில்லை.

எனினும் அஜித்தை பெரும் திரையிலும். கவுதம் மேனனின் படமாக்க அழகியலையும் பார்த்து ரசிக்க ஒருமுறை பார்க்கலாம்.
ஷமிதாப் :

அட்டகாசமான பிரீமைஸ் பிடித்தும் திரைக்கதையில் கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர் பால்கி.

ஊமை ஒருவனுக்கு சூப்பர் ஸ்டாராக ஆசை. அவன் குரல் கொடுக்கும் ஒரு குடிகார கிழவன். எண்ணியவண்ணம் அவன் சூப்பர் ஸ்டாராக வெற்றிப்பெறுகிறான். அவனுக்கு தனது நடிப்புதான் தனது வெற்றிக்கு காரணம் என்ற எண்ணம் ஏற்பட, தன் குரல் தான் அவனின் வெற்றிக்கு காரணம் என்று கிழவன் நினைக்க, இவர்களின் வாழ்வியல்  முரண்பாடுகள் தான் கதை.

அமிதாப் எனும் மகாகலைஞனின் அசத்தலான பர்பார்மன்ஸும், தனுஷ் எனும் சுள்ளானின் துள்ளலான நடிப்பும் ஷமிதாப்பை ரசிக்க வைக்கின்றன. தனுஷ் சில இடங்களில் அமிதாப்பை அசத்தலாக தாண்டி பரிமளிக்கிறார்.

அக்‌ஷரா ஹாசன் குட்டி சரிகா

பூனைக் கண்ணுடன் அலட்டிக்கொள்ளாமல் நடிக்கிறார். அமிதாப் - தனுஷ் எனும் பயிற்சிப் பெற்ற நடிகர்களுடன் போட்டிப் போட்டுக்கொண்டு அவருக்கு நிகராக நிற்கும் அக்‌ஷரா எனும் இந்த குட்டிப் பூவிற்கு நிச்சயம் ஒரு பூங்கொத்து தரவேண்டும்.

சண்டைக்கோழியாக நிற்கும் அமிதாப் - தனுஷ் இருவரையும் ஒரு கிண்டர்கார்டன் பள்ளியில் உட்காரவைத்து சமாதான பாடமெடுக்கும் அந்த காட்சி அக்‌ஷரா ! யூ ஆர் கிரே குட்டிப் பாப்பா !

மிகப்பெரிய துருவங்கள் இணைந்து பணியாற்றி  இருக்கிறார்கள், இருப்பினும், காட்சிகள் மெதுவாக நகர்ந்து சலிப்பை வரவழைக்கின்றன.

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு பற்றி சொல்லத்தேவையில்லை. ஒவ்வொரு பிரேமும் கண்களை பிரமிக்க செய்கின்றன.

ஷமிதாப்பின் எதிர்பார்ப்பே இளையராஜாதான்.

எனினும் இது ராஜா சாரின் இசையா என்று யோசிக்க வைக்கிறது ? சீனி கம்மில் தபு - அமிதாப் ரொமன்ஸ் காட்சிகளின் போது விளையாடிய அவரின் பின்னனி இசை ஷமிதாப்பில் ஏனோ தோய்ந்து ஒலிக்கிறது. இப்படி சொல்வது இளையராஜா வின் ரசிகர்களுக்கு முரணாக படலாம். ஆனால் எல்லோரையும் விட இளையராஜாவின் முதன்மையான ரசிகன் நான். எனகு தோன்றியது இது.


புத்தாண்டு, பொங்கலுக்கு பின்பு எதிர்ப்பார்ப்பைத் தந்த இரண்டு படங்கள் இவை. இவை இரண்டுமே முழுமையான திருப்தி தரவில்லை .

பார்ப்போம் அடுத்து என்ன நல்ல படங்கள் வருகிறது என்று. இல்லையெனில் இருக்கவே இருக்கிறது புத்தகங்களும் ஊர் சுற்றல் திட்டங்களும்.

ஒரு மகா கலைஞனின் ஆசி - காட்பாதர் தருணங்கள்


ரம்மியமான மாலைப்பொழுது.

நூற்றாண்டு கண்ட கல்வி நிறுவன வளாகம்.

இந்திய திரையுலகின் பல முத்துக்களை தந்த கலைக்கடல் அந்த அறிவகம். நடைபெற்றுக் கொண்டிருந்த குறும்படவிழா ஒத்த அலையியக்கத்திற்கு வலு சேர்த்துக்கொண்டிருந்தது. எனது ஆதர்சன கலைஞனை மிக அருகில் நின்று பார்க்கிறேன். இதற்கு முன்பு அவரை பலமுறை பார்த்திருந்தாலும் இப்போது அவரை ஒரு விசேஷ காரணமுடன் நோக்குகிறேன்.

எனக்கே அவரைப் பார்ப்பதில் கொஞ்சம் பிரம்பிப்புதான். அரை டிரவுசர் பொடியனாக நானிருந்த காலத்தில் ஒரு படத்தில் அவர் “ பீடா சேட்டாக” வந்த அவதாரத்தை கண்டு மிரண்டு இருக்கிறேன்.

அவ்வை சண்முகியில் ஊமை பிராமண சமையல்காரனாக அவரின் சேஷ்டைகளை கண்டு குலுங்கி குலுங்கி சிரித்திருக்கிறேன்.

எது தேவையோ அதுவே தர்மம் என்கிறது கீதை.

திரைத்துறையில் எது தேவையோ அதனை கொடுத்து அதன் தர்மத்திற்கு வாழும் மகா கலைஞன் நாசர் தான் அவர்.
                                                                 Selfie with Nasser Sir

அவரிடம் ஆசிபெற எனது காட்பாதர் திரைக்கதை தமிழாக்க நூலின் ஒரு பிரதியை கொடுத்தேன்.

நல்ல படங்களின் திரைக்கதைகள் ஆவணமாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். படத்தினை உருவாக்க காண்பித்த நேர்த்தியை அவரின் அவதாரம் படத்தின் திரைக்கதையை நூலாக கொண்டு வருவதிலும் வெளிப்படுத்தியவர்.

நாமும் ஒருநாள் திரைக்கதைகளை புத்தகமாக கொண்டு வரவேண்டும் என்ற உத்வேகத்தை உண்மையில் அவதாரம் திரைக்கதையை படிக்கும்போது எனக்கு ஏற்பட்டது.

ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தார்.
ஊடுருவி நிற்கும் ஆழ்ந்த பார்வை
வினாடியில் அவரின் முகத்தில் புன்னகை கமழ்ந்தது.

நல்ல முயற்சி...முழுமையா படிச்சிட்டு நிச்சயம் உங்களிடம் பேசுகிறேன்”

என்னை நிமிர்ந்துபார்த்து என் கண்களை நோக்கினார்.அந்த பார்வை என்னுள் ஊடுருவி ஒரு சிலிப்பை தந்தது. துரோணர் ஏகலைவனைப் பார்த்தபோது இப்படிதான் ஏகலைவனுன் இப்படிதான் உணர்ந்திருப்பானோ ?

அல்பாசினோவையும்,மார்லன் பிராண்டோவையும் சில நிமிடங்களை லயோலாவின் வளாகத்திற்கு கொண்டுவந்துவிட்டார். அவருடனான சில நிமிட உரையாடலில் ஒரு திரைக்கதை வகுப்பில் கலந்துகொண்ட அனுபவங்கள் என்னுள் பதிந்துகொண்டன. அவரிடம் நூலினை கொடுத்து ஆசிபெறவேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. சுற்றிலும் ஊடக மாணவர்கள் புடைசூழ அவர் நூலினை பெற்றுக்கொண்டு சொன்ன நம்பிக்கைகள் அது இன்னொரு வெளியீட்டு விழாவாகவே மாறிவிட்டது.

காட்பாதர் திரைக்கதை அமைப்பு என்பது வெறும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றல்ல, அதனுள் ஒரு ஆழமான உளவியல் கோட்பாடு ஒளிந்துகொண்டிருக்கிறது. வெற்றியை சுவைக்க தவிக்கும், முன்னனியில் நிற்க துடிக்கும் இயல்புதான் மனிதனின் உளவியல் பண்பு. அவன் ஜனித்து உருப்பெற்ற்றதின் அடிப்படையே அந்த யத்தனிப்புதான். கோடிக்கணக்கான உயிர்செல்களுள் ஒருவனாக இருந்த அந்த வினாடியில் அத்தனை கோடிசெல்களையும் முந்திக்கொண்டு கருமுட்டையை ஊடுருவி நின்றதினால்தான் அவன் மனிதனாக உருப்பெற்று புவியின் தரிசனத்திற்கு தகுதியாக முடிந்தது. காட்பாதரின் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்குள்ளும் இந்த யுக்தி வெளிப்படும். காட்பாதரை திரும்ப திரும்ப படிக்கும் போது இதனை உறுதியாக உணரமுடியும்.

இது வெறும் திரையுலக பாத்திரங்களுக்கு மட்டும் பொருந்தாது நிஜத்திலும் ஒவ்வொருவரின் வேட்கையும் இதுதான். ஒன்றில் ஒன்றி நிற்பதற்கு உறுதியான மனோநிலை வேண்டும். அதுவே உங்களை முதன்மையாக முன்னிறுத்தும்.

திரைக்கலைஞனாக தனியாட்டம் ஆடினாலும் சரி, சிவாஜிகணேசன், கமல் போன்ற பெரும் கலைஞர்களோடு கூட்டாட்டம் ஆடினாலும் அவர்களுள் அடக்கி வாசித்துக்கொண்டே தனக்கான முன்னிலைபடுத்தலை சாத்தியமாக்கிய பெரும் கலைஞன் நாசர்.

காட்பாதரை இன்றைய தேதிக்கு அப்படியே தமிழில் எடுத்தால் மார்லன் பிராண்டோவை ஈடுசெய்யக்கூடிய கலைஞர் நாசர் மட்டுமே. அதனாலேயே அவரிடம் இந்நூலை சேர்ப்பிக்கவேண்டும் என்பதில் ஆவலுடன் இருந்தேன்.
இவ்வாண்டின் சின்ன சின்ன கனவுகள் நிறைவேறிக்கொண்டிருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியே !

நன்றி நாசர் சார் !குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...