Saturday, January 17, 2015

புத்தக திருவிழா - எந்த வகை வாசிப்பாளர் நீங்கள் ?

புத்தக கடைகளை பார்த்தவுடன் பலகார கடைக்குள் நுழைந்த சின்ன பையன் மாதிரி அது வேண்டும் இது வேண்டும் என்று மனம் ஆர்ப்பரிக்க தொடங்கிவிடும். படிக்கிறமோ இல்லையோ ஏதாவது ஒரு தலைப்பு மனசை சுண்டியிழுத்தால் உடனே  கடன் அட்டை தேய்ந்துவிடும்.

எனக்கு பெரும்பாலான சந்திப்புகள் அண்ணாசாலை பக்கம் தான். ஒரு சந்திப்புக்கும் இன்னொரு சந்திப்புக்கும் இடையே நேரம் கிடைத்தால் லேண்ட் மார்க்கில் தஞ்சம் அடைவேன். நேரம் கடத்தவே உள்ளே நுழைந்து இருக்கிறோம். சும்மா வேடிக்கைப் பார்த்துவிட்டு போகவேண்டும் என்று உறுதியான சங்கல்பம் ஏற்று உள்ளே நுழைந்தாலும் அது நிலைத்து நிற்காது. பத்து நிமிடம் உலாத்திக்கொண்டு இருந்தால் போதும் ஏதோ ஒரு தலைப்பு அல்லது புத்தகவாசனை விழியில் விழுந்து இதயம் நுழைந்து கடன் அட்டை தேயும். லேண்ட் மார்க் மூடிய கொஞ்ச நாட்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இப்போது எக்ஸ்பிரஸ் அவன்யூவில் ஸ்டார் மார்க் தொடங்கியபின் மீண்டும் அந்த பழக்க தொற்றிக்கொண்டது.

புத்தகம் படிப்பது என்பது ஒரு பழக்கமோ இல்லையோ புத்தகம் வாங்கி குவிப்பதும் ஒரு போதையாக மாறிவிட்டது. என்னைப் போல எத்தனை பேர் இந்த பழக்கத்தில் வீழ்ந்துகிடக்கிறார்கள் என்று தெரியவில்லை.

வாசிப்பாளர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.

தீவிர வாசகர்கள். தொடர்ந்து வாசித்துகொண்டே இருப்பார்கள். ஒரு நூலை எடுத்தால் படித்து முடித்துவிட்டு. அடுத்த நூலை எடுத்து படித்துகொண்டு இருப்பார்கள். அல்லது பாத்ரூமில் ஒன்று,பெட்ரூமில் ஒன்று ( சில வீட்டில் இங்கு இவர்களால் படிக்கப்படவேண்டிய புத்தகம் சும்மனே தூங்கிக்கொண்டிருக்கும் ), காபி டேபிளில் ஒன்று, காரில் ஒன்று, பால்கனியில் ஒன்று என இரைந்து கிடக்கும். மாற்றி மாற்றி படித்துக்கொண்டிருப்பார்கள்.

படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். பிடித்தமான நூல்களை வாங்கிவைத்துகொண்டு நேரம் கிடைத்தாலோ, நேரம் ஒதுக்கி வைத்துக்கொண்டோ படிப்பவர்கள்.

பொழுதுபோக்கு வாசகர்கள். நேரத்தை கடத்த புத்தகத்தை படிப்பார்கள். இவர்கள் தீவிர வாசகர்கள் போல் நிறைய அழுத்தம் கொடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

இப்படி வகைப்படுத்தினால். மாதம் எத்தனை நூல்கள் படிக்கிறோம் அல்லது எத்தனை பக்கம் படிக்கிறோம் என்று கணக்கு வரும். ஒரு தீவிர வாசகனாக நாளொன்று நூறுபக்கம் என்ற கணக்கில் மாதம் 3000 பக்கங்கள் படித்துவிடுபவராக இருந்தால். ஆண்டுக்கு 35000 முதல் 50000 பக்கங்கள் வரை படிப்பவராக இருப்பார். இவர்கள் நூறு முதல் இருநூறு புத்தகங்கள் வரை 100 பக்கத்தில் இருந்து 500 பக்கங்கள் உடையதாக வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

இதே போல் கணக்கு போட்டு அவரவர் படிக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப வாங்கி வைத்துகொள்ளலாம். ஆண்டுக்கு வெறும் 3000 பக்கங்கள் மட்டுமே படிப்பேன் என்பவர்கள் நூறு புத்தகங்கள் வாங்கி வைப்பதால் அறை நிறையுமே தவிர மனம் நிறையாது.

இப்போதெல்லாம் சமையல், ஜோதிடம் போன்ற நூல்களே அதிகம் விற்பனையாகின்றன. நவீன இலக்கியம் என்ற புனைவில் திகட்ட திகட்ட செக்ஸ் இருந்தால் இளந்தாரிப்புள்ளைகள் ( நமக்கு தியரி சரிபட்டு வராது ) எல்லாம் விழுந்தடித்து வாங்கிக்கொள்கின்றன. சில சில்வண்டுகள் திருட்டு விசிடி திருட்டு டிவிடி போல் pdf எப்பில் தரவிறக்கம் செய்கின்றன. பெருமாள் முருகனின் மாதொருபாகன் பிரச்சனைப் பற்றி எல்லோரும் ஒப்பாரி வைத்துகொண்டிருந்த போதே சிலர் லஷ்மிமேனன் புது வீடியோ வந்திருக்கு வேணுமா என்கிற ரீதியில் pdf இருக்கு அனுப்பவா என்று கேட்கிறார்கள்.

காசுக்கொடுத்து வாங்குங்க சுவாமி பதிப்பாளர் பாவம் பொல்லாது !

இது இப்படி இருக்க சில பதிப்பகங்கள் செய்யும் அட்டூழியம் கேட்க மாளாது. புத்தக கண்காட்சிக்கு முன்னால் எனக்கு இரண்டு நூல்கள் தேவைப்பட்டன. ஒன்று சிறுபாணற்றுப்படை, இன்னொன்று பெரும்பாணாற்றுப்படை. இதனை தேடி அலைந்த போது ஒரு பதிப்பகத்தை சொன்னார்கள். அங்கு வாங்க சென்றேன். நான் கண்ட காட்சி பதிப்பக தொழிலில் இப்படியும் நடக்குமா என்று அதிர்ச்சி தந்தது. அட்டையே இல்லாமல் உள்ளடகத்தை மட்டும் அடித்து வைத்துகொள்கிறார்கள். புத்தக திருவிழா நெருங்கும் போது மட்டும் விலையை கூட்டி தேவையான அட்டையை அடித்து ஒட்டி அதனை கண்காட்சியில் வைத்துவிடுகிறார்கள். உதாரணமாக இருபது ரூபாய்க்கு அடிக்கும் புத்தகம் கடையில் நாற்பது ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதில் கடை விற்பனை கழிவு இதர செலவுகள் என பாதி போய் லாபம் குறைவாகத்தான் கிட்டும். புத்தக கண்காட்சிக்கு வரும் போது அதே புத்தகம் அறுபது ரூபாய் விலை தாங்கி வரும். அதில் பத்து சதவீதம் கழிவுப் போனால் கூட ஐம்பத்து நாலு ரூபாய்க்கு விற்கப்பட்டு நேரடியாக பதிப்பாளருக்கு முப்பத்திநாலு ரூபாய் லாபம் கிடைக்கிறது. இது எல்லோரும் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. வித்தை தெரிந்தவர்களின் வியூகம் இது. இதை எல்லோராலும் செய்யவும் முடியாது. பெரும்பாலும் சமையல், ஜோதிடம், தந்திர கதைகள், பாலியல் கதைகளில் இது நிகழ்கிறது.

ஆனால் நல்ல சில புத்தகங்கள் குறைந்த அளவே அச்சடிக்கபடுகின்றன. அதை வாங்கி வைத்துகொண்டு படிக்காமல் இருப்போம். இன்னொருவர் அந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்று அலைந்துகொண்டிருப்பார். இப்படி ஒரு பாவத்திற்கு ஆளாகாமல் இருக்க, தேவையான புத்தகங்களை மட்டுமே வாங்குவது உத்தமம்.

ஐபோன் டேப்லெட் என்று வந்தபின்பு புத்தகம் வாங்கு பழக்கம் குறைந்துவிட்டது என்று ஒரு பொதுவான கருத்து பரவுகிறது. என்னைப் பொறுத்தவரையில் அப்படி ஒரு நிலை ஏற்பட்டு மீண்டும் புத்தகத்தை நோக்கிய பயணம் திரும்புகிறது என்று நினைக்கிறேன். சமீப மலேஷிய பயணத்தின் போது KLCCயில் கினோ கின்யா ( Kinokunya ) எனும் ஜப்பானிய புத்தக கடைக்கு சென்றேன். பெரும் பிரமாண்டம். உலகம் முழுவது தொடர்கடைகள் அமைப்பதில் மும்முரமாக உள்ளார்கள். இந்தியாவில் டில்லிக்கும் வந்துவிட்டதாக கூறினார்கள்.

நம்ம ஊரில் லேண்ட்மார்க் போன குறையை ஸ்டார்மார்க் வந்து நிரப்புகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் கடைகள் பாதிப்பதாக கூறுவதும் ஏற்புடையது அல்ல. ரஜினிப்படம் ரிலீஸ் மாதிரியான பாவனைகளால் தான் இது. நியாயமாக 100ரூபாய்க்கு விற்க வேண்டிய டிக்கெட்டை 1000 த்திற்கு விற்றால் என்ன நிகழுமோ அதுதான் இங்கும் நிகழும். ஆன்லைன் வர்த்தகத்தின் வீச்சை புரிந்துகொண்டு சில பதிப்பகங்கள் குறைந்த செலவில் ஆன்லைனுக்கும் தரமுடன் அழகான காகிதத்தில் கடைக்களுக்கும் அச்சடிக்க தொடங்கிவிட்டன.

சமீபத்தில் நான் Badluck Good Luck என்றொரு புத்தகம் ஆன்லைனில் வாங்கினேன். நூற்றி ஐம்பது ரூபாய் புத்தகம் ஆன்லைன் ஆபர் எழுபத்தி ஐந்து என்றார்கள். ஆனால் கடையில் இருக்கும் புத்தக தரத்திற்கும் ஆன்லைனிற்கு இடையே நூறு வித்தியாசங்கள் இருந்தன. ஜெரக்ஸ் எடுத்து கலர் அட்டை போட்டு தந்தது போல இருந்தது.

அச்சடித்த காகிதத்தில் படிக்கும் ஆனந்தம் வேறு எதிலும் இல்லை.  நாம் விரும்பிய நிலையில்  இருந்து படித்துக்கொள்ளலாம். எத்தனை கேரண்டி கொடுத்தாலும் எலக்ட்ரானிக் பொருளில் இருந்து வெளிப்படும் ஒளி கண்களுக்கு உகந்ததா இல்லையா என்ற பட்டிமன்றம் நடந்துவரும் நிலையில்  Tablet,Ipad யோசிக்கவேண்டிய ஒன்றுதான்.
        ஆயிரம்தான் நவீனங்கள் புகுந்தாலும் கையால் எழுதுவதும் காகிதத்தில் படிப்பதுமான பழக்கங்களை அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியாது. புத்தக திருவிழா நேற்றுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. இன்னும் இரண்டுநாளில் முடிய போகிறது.

     போனவருஷம் வரை வாசகனாக இருந்த நான் இந்த வருஷம் நாதன் பதிப்பகம் புண்ணியத்தில் ஒரு எழுத்தாளனாக களம் இறங்கியிருக்கேன். இன்னைக்கு நல்ல பதிப்பகங்கள் படும் பாட்டிற்கு எல்லோருக்கும் Compliment copy எல்லாம் அனுப்ப முடியாது. அதனால் ஒழுங்கா கடையில் வாங்கி படிச்சிட்டு ரிவீயூ எழுதுங்க.


1 comment:

  1. மிக எதார்த்தமான பதிவு .

    ReplyDelete

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...