சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும் ; அஜயன் பாலாஒரு நல்ல புத்தகம் நூறு நல்ல அனுபவங்களுக்கு சமமானது.

பல அனுபவங்களே தொகுப்பாக வந்தால் எப்படியிருக்கும் ?

அது தான் “ சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்” கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாளரான அஜயன்பாலா தன் வாழ்வில் நிகழ்ந்த சுவரஸ்யமான தகவல்களை அழகான கட்டுரைகளாக வடித்திருக்கிறார்.

ஒல்லி பெல்லி நடிகை சிம்ரன் மீதான் ஆரம்பகால ஈர்ப்பு, பின்னாளில் அதே சிம்ரன் குண்டு பூசனையாக இருக்க யாரென்றே சரியாக அடையாளம் தெரியாமல் அவர் முன் உட்கார்ந்து,சந்தேகமுடன் கதை சொல்லிவிட்டு ஆமா ! நீங்கள் சிம்ரன் தானே என்று அவரிடமே கேட்ட அப்பாவித்தனம் என நகைச்சுவையுடன் ஆரம்பிக்கிறது முதல் கட்டுரை.

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரவேசம் அவரின் வாழ்வில் எத்தகைய தன்னம்பிக்கையை விதைத்தது என்பதை விவரித்து, அவரின் ரசிகனாக உருமாறி, இப்போதைய நாட்களில் ரஜினியின் செயல்பாடுகளின் தெளிவின்மையை அவரின் கோடனான கோடி ரசிகர்களின் முதல்வராக முன்னின்று கேள்வி கேட்கிறார் எழுத்தாளர் அஜயனபாலா.

ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு தனித்துவம் உண்டு. ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் வாய்ந்த இன்னொரு மனிதனுடனான தனது வாழ்வு முழுவதும் பயணித்துகொண்டே இருக்கிறான். இதுதான் சமூகத்தின் செயல்பாடு.

ஒரு சராசரி மனிதன் தன் வாழ்வில் நிகழ்வுகளை கவனிப்பதை விட ஒரு எழுத்தாளன் கவனிக்கும் போது அது முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. அவ்வகையில் எழுத்தாளர் அஜயன் பாலாவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் அவரின் அனுபவங்களாக பல்வேறு இதழ்களில் வெளியாகின. அவற்றின் தொகுப்பே சுமார் ”எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்”

இது வெறும் நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல. சமூகத்தின் பிரதிபலிப்பு.

சினிமா, அரசியல், பெண்ணியம், கலை, இலக்கியம் என வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு மனிதர்களுடனான தனது பிரதிபலிப்புகளை எளிய எழுத்துநடையில் நகைச்சுவையும் சுவரஸ்யமும் பொங்க விவரிக்கிறது இத்தொகுப்பு.

பாலுமகேந்திரா மற்றும் பாலச்சந்தரை நினைவு கூறும் அவரின் கட்டுரைகள் மனதில் இனம்புரியாத கனம் சேர்க்கின்றன. பிரபலங்கள் மட்டுமின்றி முகம் தெரியாத எளிய மனிதர்களின் வாழ்வியலையும் இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர்.

பிரபல கலை இலக்கிய விமர்சகர்  வெளி ரங்கராஜனின் பார்வையில் இந்நூல்

தன்னுடைய அழகியல் ஈடுபாடுகளின் பல திறப்புகளைப் பகிர்ந்து கொள்வதின் மூலம் அவருடைய பல்வேறு மன எழுச்சிகள் பார்வைக்கு வருகின்றன . வாசிப்புகள் அவதானிப்புகள், நட்புகள் , மற்றும் பயணங்களின் ஊடக அவர் பெறும் படைப்புப் பொறிகள் அவரைப் பல இடங்களுக்கு அழைக்கின்றன். நடைமுறையில் உலகின் ஏமாற்றங்களும் இரவுபொழுதுகளும் நண்பர்களின் உரையாடல்களும் அவருக்கு பல செய்திகளை சொல்லியபடி உள்ளன. தேடல்கள் மேலும் கூர்மைப்படுகின்றன. பிரமிள், ஸ்ரீராம் மற்றும் மருது போன்ற படைப்பாளிகளின் ஆழ்ந்த அழகியல் சித்திரங்களை இனம் காண்பது சாத்தியமானதாக இருக்கிறது “

ஒரே நூலில் ஒன்பான் சுவையையும் அனுபவிக்க விரும்பும் வாசகர்களுக்கு சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்  நல்ல பொங்கல் விருந்து.

நாதன் பதிப்பகத்தின் வெளியீடான இந்நூல் புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ், எதிர் வெளியீடு, டிங்கு புக்ஸ், பரிசல், பனுவல் இன்னும் பல கடைகளில் கிடைக்கிறது.

Comments

Popular posts from this blog

கல்யாணம் ஆனவர்களுக்கும் கல்யாணம் ஆகாதவர்களுக்கும்

ஆழியாறு வாங்க ! ஆனந்தம் வாங்க !

கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும் !