காட்பாதர் தமிழ் திரைக்கதை வெளியீடு - என்னை பத்திரிகையாளனாக ஆக்கிய எனது வாத்தியார் ஜி.கெளதம்

நூல் அறுந்த பட்டம் போல் ஆரம்பமானது வாழ்க்கை. இப்படி திரிந்த பட்டத்தை பிடித்து வியூகம் அமைத்து போட்டிகளில் கலந்துகொள்ள செய்து ஒரு அடையாளத்தை தந்தவர் ஜி.கவுதம்.


பன்னிரெண்டு வகுப்பு முடிந்தவுடன் எல்லோரையும் போல மென்பொருள் படிக்கதான் எனக்கு விருப்பமாக இருந்தது. கலந்தாய்வு முடிந்து ஒரு பிரபல ஆன்மிக மையம் நடத்தும் பொறியியல் கல்லூரியிலும் இடம் கிடைத்தது.கலந்தாய்வில் சொன்ன கட்டணத்தைவிட கல்லூரி வளாகம் சொன்ன கட்டணம் அதிகமாக தெரிந்ததாலும் அதனை கட்டும் சூழல் அன்றைய தினத்தில் என் குடும்பத்தில் இல்லாததாலும் என் பொறியியல் கனவு தகர்ந்தது.
நண்பர்கள் எல்லோரும் ஏதோ ஒரு கல்லூரிக்கு படிக்கப் போக எனக்கு வீட்டில் இருப்பது கூச்சமாக இருந்தது. நண்பர் ஒருவர் உதவியுடன் சென்னைக்கு ஒரு எண்ணெய் கடைக்கு கணக்கெழுத வந்துவிட்டேன். தி.நகர் கண்ணாம்மாபேட்டை சுடுகாட்டு பின்னால் அந்த கடை. அங்கேயே அறைகொடுத்து இருந்தார்கள். முதல் மாடி அறையை திறந்தால் சுடுகாட்டில் பிணம் எரிவது தெரியும். ஜன்னல் கதவை மூடிவிட்டாலும் பிணவாடை வீசும். ஆறுமாதம் இப்படிதான் போனது சென்னை வாழ்க்கை. இங்கிருந்து ஒரு எஸ்டிடி பூத்திற்கு தாவினேன். இந்த நிகழ்வும் என் வாழ்வில் முக்கியமானதுதான். இதுபற்றி பின்னர் சொல்கிறேன்.
எஸ்டிடி பூத் கொஞ்சம் சாவகாசமாக இருந்தது. அங்கிருந்து நந்தனத்திற்கு மாதம்தோறும் தொலைபேசி பில் பணம் கட்ட செல்லவேண்டும். அப்போதுதான் எனக்குள் ஒரு புது மன அழுத்தம் உருவானது. எஸ்டிடி பூத் வைத்திருப்பவர்கள் பணம் கட்ட வருபவர்கள் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகள். கையும் காலும் நன்றாக இருக்கும் நான் ஒரு எஸ்டிடி பூத்தில் இருப்பது எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சியை தோற்றுவித்தது. இருப்பினும் உடனடியாக என்ன வேலை தேடுவது என்று தெரியவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவனுக்கு என்ன வேலை கிடைக்கும்.அங்கிருந்தபடியே பொறியியல் கல்லூரியில் இருந்து திருப்பி பெற்ற என் சான்றுகளை வாங்கி அஞ்சல் வழியில் பி.பி.. அப்ளை செய்துவிட்டு எப்படியாவது வாழ்க்கையில் சாதித்துவிடவேண்டும் என்ற ஆவலுடன் காத்திருந்தேன்.
அப்போது இயற்கை அறிமுகப்படுத்திய முக்கிய நபர் தான் கவுதம் சார். இவருக்கு நான் வைத்திருக்கும் செல்லப்பெயர் வாத்தியார்.
அப்போது அவர்கள் ஆனந்தவிகடன் பத்திரிகையில் இல்லை. கவுதம் சார், திருப்பதிசாமி சார், சுபாக்கா இன்னும் சிலர் இணைந்து தொலைக்காட்சி ஊடகத்தில் ஒரு பரிசோதனை முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அது ஒரு செய்திமலர் போன்றது. நிஜம் என்ற தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிகொண்டிருந்தது. Reality Show அல்லது Current Affairs என்று சொல்லமுடியாத சுவரஸ்ய கலவை. அதன் படத்தொகுப்பு கே.பி.சுனில் சாரின் டெலிஜூம் ஸ்டியோவில் நடக்கும். அது நான் பணிபுரிந்த எஸ்டிடி பூத்தில் அருகில் இருந்தது. தொலைபேசி செய்ய குழு இந்த கடைக்கு வரும். அப்போது அந்த வார தொகுப்பு பற்றி காரசாரமான விவாதங்கள் நடக்கும். அப்படி அங்கு அறிமுகமானவர் தான் கவுதம் சார். சிறிது காலத்தில் நான் எஸ்டிடி பூத் பணியை விட்டுவிட்டேன்.
எனக்கு பத்திரிகையில் சேரும் ஆர்வம் இருந்தது. ஊருக்கு சென்று சிறிது காலம் இருந்துவிட்டு திரும்பி வந்து கவுதம் சாருக்கு போன் செய்தேன். அப்போது விகடனில் அவர் இல்லை எனினும் என்னை உதவியாளராக சேர்த்துகொண்டார். கவுதம் சார் விகடனில் இல்லையெனினும் ஆனந்தவிகடனின் இணைப்பாக வந்துகொண்டிருந்த Shopping Plus இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். உண்மையில் அங்குதான் எனக்கான இதழியல் பாலப்பாடம் ஆரம்பித்தது. அதற்கு முன்பே பாக்யாவில் ஒரு சிறுகதை எழுதிவிட்டு எழுத்தாளன் என்ற கெத்தில் திரிந்துகொண்டிருந்த எனக்கு இதழியலின் யதார்த்தங்களை புரியவைத்தது கவுதம் சார்தான். நாம் எழுதுவதெல்லாம் எழுத்தல்ல, ஒவ்வொரு வரியும் ஒன்றை உணர்த்தவேண்டும். வார்த்தை பிரயோகம், வரிகள் பிரயோகம் என்று எல்லாம் அவர் கற்றுத் தந்ததுதான். நாம் எழுதும் எழுத்து பக்கமாகி, அச்சாகி புத்தமாக பார்க்கும் அந்த ஆச்சர்ய தருணங்கள் எனக்கு ஆனந்தவிகடனில் நிகழ்ந்தது. இப்படி ஆனந்தவிகடனின் தத்துபிள்ளையாக என்னை சுவகரித்து விகடன் பேப்பரில் செய்தியாளனாக சேர்த்துவிட்டு எனக்கான ஊடக வாழ்வை தொடங்கிவைத்தவர் கவுதம்.
அவரை சந்திக்கவில்லையெனில் நான் என்ன ஆகியிருப்பேன் என்று தெரியவில்லை. ஊடக வாழ்க்கையில் இருந்திருப்பேனா ? இல்லை எஸ்டிடி பூத், பேன்சி கடை அல்லது ஊருக்கு திரும்பி இருப்பேனா என்பது தெரியவில்லை. முழுக்க முழுக்க ஒரு பத்திரிகையாளனாக என்னை உருமாற்றியது கவுதம் சார்தான். ஆனால் எப்போது அவருடன் பல நேரங்களில் முரண்பட்டவனாகவே இருந்திருக்கிறேன்.
காட்பாதர் நூல் வெளியீட்டு விழாவில் கவுதம் சார் என்னைப்பற்றி பேசும் போது எனது பாஸிடிவ் பக்கங்களை மட்டுமே பேசினார். எப்படி ஒரு அண்னன் தன் தம்பியை பிறரிடம் பரிந்துரைக்கும் போது அவனின் நல்ல குணங்களை மட்டும் பரிந்துரைப்பாரோ அதே பாவனை. எழுத்து ஆர்வமும் வார்த்தை ஜாலமும் அவர் கற்று கொடுத்த வித்தை. இன்னும் மேலும் உயர்ந்து அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பை அவரின் பேச்சுக்கு பின்னர் உணர்கிறேன்.
கவுதம் சார் பத்திரிகையாளனாக ஆக்கியபின்பு அதன் மீது சிரத்தையின்றி திரிந்த எனக்குள் ஒரு தூண்டுதலை விதைத்து எழுத்தாளன், மொழிபெயர்ப்பாளன் எனும் தனி அடையாளம் தந்திருக்கிறார் அண்ணன அஜயன் பாலா. வாழ்க்கை எந்த திட்டமிடலும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அவ்வப்போது குறுக்கிடும் நிஜ மனிதர்கள். வாழ்வில் நிஜ உயரத்தில் அமர்த்தி வழிகாட்டிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்Comments

  1. அற்புதம் .நினைவு கூறல் என்பதே அழகானது .அதை மிக அழகாக்கியது உங்கள் இடம் .பொதுவாகவே நல்ல மனம் எப்போதும் நேர்மறை எண்ணங்களை உன்னிப்பாக கவனித்து அல்லாதை விட்டு விட மட்டும் கற்று கொள்ளும் .நீங்கள் வலிகளை பின்னுக்கு தள்ளி வெற்றிகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் பலருக்கும் நம்பிக்கை தந்து இருக்கிறீர்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கல்யாணம் ஆனவர்களுக்கும் கல்யாணம் ஆகாதவர்களுக்கும்

ஆழியாறு வாங்க ! ஆனந்தம் வாங்க !

கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும் !