Thursday, January 15, 2015

விவசாயத்திற்கு திரும்பலாம் வாங்க


சென்னையில் கடும் புகைமூட்டத்தால் ஐம்பதிற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக
புறப்பட்டது என்ற செய்தி பொங்கல் திருவிழாவின் சந்தோஷத்தை கொஞ்சம் தொந்தரவு செய்ததது.
வழக்கமாக பனிமூட்டமிருந்தால்தான் இப்படி நடக்கும். போகியை முன்னிட்டு சென்னையில் எரித்த புகையின் தாக்கம் பனியுடன் கலந்து புகைமூட்டமாக நகரை சுழ்ந்துகொண்டது. தரையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் பனிபடந்திருந்தால் விமானங்களை இயக்கமுடியும். நேற்று இது 50 அடி உயரத்திலேயே வலிமைப் பெற்று நின்றுகொண்டிருந்ததால் விமானத்தை இயக்கமுடியவில்லை.

பூமி வெப்படைதல் பற்றி வாய் கிழிய பேசிக்கொண்டிருக்கிறோம். அதனை தடுக்க உலக நாடுகள் கோடிக்கணக்கில் கொட்டிக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அர்த்தமற்ற சம்பிரதாயங்களால் பூமியை இன்னும் வெப்பமாக்கும் சூழலைதான் உருவாக்கிகொண்டிருக்கும். கடந்த ஆண்டிற்கு இந்த ஆண்டிற்கும் இடையேயான சுற்று சூழல் மாசுபாட்டின் விகிச்சாரத்தை நீங்கள் அறிந்தால் நீங்கள் வெப்பமடைவீர்கள். இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் போட்டிருக்கும் இந்த சிறிய அட்டவனையைப் பாருங்கள்.

நேற்று பூமியின் மாசு இயல்புநிலையைவிட பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இதில் நகைச்சுவை என்னெவென்றால் பொங்கல் திருவிழா என்பது இயற்கையை போற்றும், இயற்கைக்கு நன்றி சொல்லும் திருவிழா. இயற்கைக்கு நன்றி சொல்கிறேன் என்ற பெயரில் இயற்கையை கொன்றுகொண்டிருக்கிறோம்.

போகியில் புகை கூட்டும் பழக்கம் எப்படி மாறிவிட்டது ? போகியின் அடிப்படை மறுநாள் புதியமாதம் பிறக்கும் சூழலில் பழையனவற்றைக் கழிந்துவிட்டு புதியவற்றை தொடங்கவேண்டும் என்பது. பழையன என்பது பழைய பொருட்கள் அல்ல, பழைய பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், செயல்கள், திட்டமிடல்கள் இதனை கழிந்துவிட்டு புதியதை போற்றத்தொடங்குகள் என்பதுதான். இதில் கொஞ்சம் மாற்றம் வந்தது.

போகி தான் மார்கழியின் கடைசி நாள். பெரும்பாலும் மார்கழியில் குளிர் அதிகமாக இருக்கும். அதிகாலை எழுந்திருப்போர் இதனை சமாளிக்க விறகு சல்லிகளை போட்டு எரித்து தனப்பு ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கம் கிராமங்களில் உண்டு. அது போகியன்று பழைய பாய், முறம் என்று மாறியது. பின்னர் நவீன உபரகரணங்கள் வர சைக்கிள் டயர், பிளாஸ்டிக் பொருட்கள், நைலான் புடவை என்று எரிந்து இன்று சுற்றுசூழலுக்கு கிலி ஏற்படுத்திகொண்டிருக்கின்றன.

உண்மையில் உழவர்களுக்கான திருவிழா பொங்கள். இன்று எத்தனை பேர் உழவர்கள். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 75 லட்சம் ஏக்கர் உழவுநிலம் இருக்கின்றன. அவற்றில் பல நேடுஞ்சாலைகள் அமைக்க கபளீகரமாகிக்கொண்டிருக்கின்றன. நெடுஞ்சாலை வந்த வேகத்தில் அதன் இருபுறமும் இருக்கும் நிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. நெடுஞ்சாலைகள் போக்குவரத்திற்கு உதவுகின்றன என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாறுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளகூடிய ஒன்றில்லை.

இன்று நன்றாக சம்பாதிக்கும் பலரின் முதலீடு இத்தகைய பிளாட்டுகள் மீதுதான். ஏக்கர் மூன்று நான்கு லட்சத்திற்கு வாங்கி பிளாட் போட்டு , ஒரு பிளாட் ஆறு,ஏழு லட்சம் என்று கொழுத்த லாபம் பார்க்கின்றனர். ஒரு இரண்டாயிரத்து சதர அடிக்கு ஏழு எட்டு என அழுதுவிட்டு பின்னர் அதன் விலையும் ஏறாமல், அங்கு குடிபோகவும் முடியாமல் எத்தனையோ பேர் தவித்துகொண்டிருப்பதை பார்க்கும் போது எரிச்சலும் மன அழுத்தமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

நகரத்தில் வசிக்கும், நவீன பணியாற்றும் பலரும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். நம்மில் பெரும்பாலோரின் முன்னோர்கள் வேளாண்மையை தொழிலாக கொண்டவர்கள்தான்.

இப்படி முதலீட்டுக்கு ஏதோ ஒரு பிளாட்டில் பணத்தை முதலீடு செய்வதைவிட, ஒரு பத்து லட்சத்தில் இரண்டில் இருந்து ஐந்து ஏக்கர்வரை நிலம் வாங்கலாம். அங்கு ஒரு அழகான பண்ணைவீடு அமைக்கலாம். ஒரு ஏக்கரிலேயே பண்ணைவீடு சாத்தியம். தமிழ்நாட்டின் நீளம் வெறும் 800 கிலோ மீட்டருக்குள்தான் எப்படி சென்றாலும். அதிகபட்சம் எட்டு மணிநேரப் பயணத்தில் எங்கும் அடைந்துவிடலாம். பண்ணைவீட்டில் இயற்கை விவசாயம், அழகிய குடில் அமைத்து விடுமுறை தினங்களில் அங்கு சென்று உங்களை நீங்களே ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். ஆடு, மாடு, கோழி, மீன், பட்டு பூச்சி, தேனீ வளர்ப்பு,மா,பலா, கொய்யா, வாழை என பழமரங்கள், விதவிதமான பூக்ககள்,பாரம்பர்ய பொருட்கள் என ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டம் செய்ய அரசும் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறது. இதனை உள்ளூரில் ஒரு விவசாயியின் கண்காணிப்பில் அழகாக செய்து உங்களாலும் பொருளீட்ட முடியும், ஒரு விவசாய குடும்பத்திற்கும் உதவி செய்யமுடியும்.

சனி ஞாயிறுகளில் அருகில் உள்ள பப்புகளிலும், விடுதிகளிலும் தங்கி பொழுதை கழிப்பதைவிட இது வாழ்க்கைக்கு மேலும் வளம் தரும்
கண்களை மூடி அமர்ந்து ஒரு சின்ன கற்பனை உலகில் சஞ்சரித்துப் பாருங்கள்.
ஒரு மூன்று நிமிடம் உங்கள் உடலையே கவனியுங்கள்.
அடுத்து மூன்று நிமிடம் உங்கள் மூச்சை கவனியுங்கள்.
இப்போது வாருங்கள் புதிய உலகிற்கு.
அழகான இயற்கை எழில் கொஞ்சும் பண்ணை வீடு.
காண்கிரீட் சுவர் இல்லை, இயற்கையில் அமைந்த மண் குடில்
பிளாஸ்டிக் எவர்சில்வர் பாத்திரமில்லை எல்லாம் மண் பண்டங்கள்.
வாகன இரைச்சல் இல்லை, சுற்றிலும் பறவைகள், அணில் குட்டிகளின் இன்ப ஒலி
பேன், ஏசியின் கார்பன் கலந்த காற்றில்லை, இயற்கை சுமந்த தழை இலையுடன் மண்மணம் சார்ந்த காற்று. இப்போது உங்கள் மனதை உணருங்கள். உங்களுக்குள் ஒரு மென்மையான தன்மை ஊடுருவுகிறதா.?
அழுத்தம் குறைகிறதா ? 
நினைத்தாலே இனிக்கிறதே !
வாழும் போது எப்படி இன்பமாக இருக்கும் ? 
யோசித்து முடிவெடுங்கள்.
இந்த பண்ணைவீடு வாரத்தில் இரண்டு நாட்கள் என்று கணக்கிட்டால் ஆண்டிற்கு ஏறத்தாழ 100 நாட்கள்  அதாவது சராசரியாக மூன்றில் ஒரு பங்கு உங்களை இயற்கையோடு இருக்க வழிவகை செய்யும்.  நோயும் இருக்காது மன அழுத்தமும் இருக்காது. அலுவலக பணிக்கு திரும்பும் போது உங்களுக்குள் ஆற்றல் பெருக்கெடுக்கும். பிள்ளைகளின் வாழ்விலும் மனதளவில், உடலளவில் மாற்றம் தரும்.
பிள்ளைகளுக்கு இயற்கையோடு இயற்கையாக வாழவும் வாய்ப்பைப் பெற்றுத் தரும்
அதுமட்டுமா ?

ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டத்தை துல்லியமாக கையாண்டால் ஆண்டிற்கு பத்து லட்சம் வரை பணமீட்ட முடியும் என்பதை சாதித்தவர்கள் சொல்கிறார்கள்.

வேளாண்மை உண்மையில் உத்வேகமூட்டும் தொழில். உலகின் மிகப்பெரும் செல்வந்தர்கள் இன்னும் விடாமல் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஏர் டெக்கான் விமான சேவை வழங்கிய கேப்டன் கோபிநாத் விமான சேவைக்கும் முன்பு பெரும் விவசாயம் தான் செய்தார். விகடனை ஊடகத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற அய்யா பாலசுப்ரமண்யன் வேளாண்மை செய்வதில் தான் உற்சாகமும், உத்வேகமும் பெற்றதாக கூறினார். பாரதிராஜாவின் ஒளிப்பதிவாளர் கண்ணன் சாரை வீன்ஸ் காலனி வீட்டைவிட திருவள்ளூர் பண்ணைவீட்டில் அரை டிராயர் டீ சர்ட்டுடன் மண்வெட்டிக் கையுடன் பார்க்கமுடியும்.

இனி நீங்கள் இன்சுரன்ஸ்,மெடிக்கல், என செலவு செய்வதுடன் ஒரு திட்டமிடுங்கள். ஊரில் சொந்தமாக குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் வாங்கவேண்டும். விவசாயம் செய்யவேண்டும் என்பதை கனவாக கொள்ளுங்கள். இனி சனி, ஞாயிறு விவசாயப்பண்ணையில்தான், திங்கள் ஊருக்கு திரும்பும் போது என் தோட்டத்தில் விளைவித்த பயறுடன் திரும்புவேன் என்பதை சங்கல்ப்பமாக கொள்ளுங்கள்.

ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம்.
ஆனந்தத்திற்கு உத்திரவாதம்.
போகியன்று புகை பெருகாது.

எந்த தொழில் செய்தாலும் ஒரு உழவனாக பொங்கலை முழுமையுடன் கொண்டாடும் மனதிருப்தியும் ஒரு முழுமையையும் உங்களால் எட்டமுடியும். வாங்க விவசாயம் செய்யலாம் !

No comments:

Post a Comment

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...