ஆனந்த விகடனின் விருது பெற்றது - அசதாவின் நீலநாயின் கண்கள் சிறுகதை தொகுப்பு

ஆனந்த விகடனின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றுள்ளது நீலநாயின் கண்கள் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு. வெளியீட்டாளர் எழுத்தாளர் அஜயன் பாலா. வெளியீடு : நாதம் பதிப்பகம்.

பேராசை, கடுஞ்சினம், கடும்பற்று,முறையற்ற பால்கவர்ச்சி, வஞ்சம் எனும் பஞ்சமா பாதகங்கள்தான் பிரபஞ்சவெளியில் மானுவியலை இயக்குகின்றன. இவற்றை கட்டுப்படுத்துபவன் மனிதனாக வாழ்கிறான். மட்டுப்படுத்தி முன்னிற்பவன் தெய்வமாகிறான். உலகின் படைப்பிலக்கியங்கள் எல்லாம் மனித மனதை, வாழ்வியலை செம்மைப்படுத்தவே உருவாகின்றன. அவ்வகையில் பல தேசத்தில் பிறந்திருந்தாலும் உலகின் மூத்த மொழியாக கொண்டாடப்படும் தமிழில் உருமாறி ஜொலிக்கும் பல அழகான சிறுகதைகள் அடங்கிய அறிவுப் பெட்டகம் நீலநாயின் கண்கள்.

இத்தொகுப்பில் ஒன்பது சிறுகதைகளும், இரண்டு நாவல் பகுதிகளும் உள்ளன. உலகின் வெவ்வேறு படைப்பாளிகளின் உணர்வுகள், தமிழ்மொழி பெயர்ப்பில் கணையாழி உட்பட பல்வேறு இதழ்களில் வெளியாகி பரவசப்படுத்தியவை. அவையணைத்தும் ஒரே நூலில் புதைந்து வருவது பொக்கிஷம்தான்.

ஒன்பான் சுவை என்று அழைக்கப்படும் நவரசங்களில் ஏதேனும் ஒரு உணர்வை தரவேண்டும் ஒரு படைப்பு. அபூர்வமாக இவையனைத்தும் ஒரே படைப்பில் அடங்குவதுண்டு. அவ்வகையில் நீலநாயின் கண்கள் சிறப்பான படைப்பாக இருக்கிறது.

முதல் கதையே மானுவிடவியலின் தன்மையையும் அதனை பன்படுத்தும் உளவியல் சூழலையும் பேசுகிறது. நம்மிடம் தினந்தோறும் ஜல்லியடிக்கும் வானொலியில் திடீரென கடவுள் தோன்றி பேசினால் என்ன நிகழும் ? இத்தகைய கேள்விகள் நம்புவதற்கு சிரமமான ஒன்றாகினாலும் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கும் வாய்ப்புதான். ஒரு ரேடியோ அறிவிப்பாளரை போல் கடவுள் அணுகுவதற்கு சுலபமானவராக இருக்கவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறோம்.
அவ்வாறு ரேடியோவில் வந்து பேசும் கடவுளால் என்ன நிகழ்த்தமுடிகிறது என்ற அழகியலை பேசுகிறது முதல் கதையான அடுத்து நீங்கள் கேட்கவிருப்பது.

ஜார்ஜ் சம்னர் ஆல்பி எனும் அமெரிக்க எழுத்தாளர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த சிறுகதையை அழகிய தமிழில் மொழி பெயர்த்துள்ளார் எழுத்தாளர் அசதா. இதுபோன்று உலகின் தலைசிறந்த ஒன்பது எழுத்தாளரின் கதைகள் அடங்கியுள்ளன நீலநாயின் கண்கள் தொகுப்பில்.

இயங்காத மனம் ஒரு குப்பை தொட்டி போன்றது. அதனை இயக்குவதற்கு தியானம், அப்பியாசம் இருப்பது போன்றதற்கு நிகரானது நல்ல நூல்களின் வாசிப்பனுபவம்.
நீல நாயின் கண்கள் அத்தகைய உளவியல் சுத்திகரிப்பு முயற்சிகளுக்கு அரும்பெரும் உதவிபுரியும் மென்மையான படைப்பு. ஒரு நூலை படித்தவுடன் உங்களுக்குள் இருக்கும் உணர்ச்சி பிழம்புகள் வெடித்து வெளியேறி உங்களுக்கு ஒரு ஆசுவாசத்தை தரவேண்டும். உங்களுக்குள் புதிய சிந்தனைகளை கிளர்ந்தெழ செய்ய வேண்டும். இச்செயல் நீல நாயின் கண்களை வாசித்து முடிக்கும் போது உங்களுக்குள் நிகழும்.

அசதாவின் இந்த அசத்தல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .


Comments

Popular posts from this blog

கல்யாணம் ஆனவர்களுக்கும் கல்யாணம் ஆகாதவர்களுக்கும்

ஆழியாறு வாங்க ! ஆனந்தம் வாங்க !

கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும் !