Saturday, September 15, 2012

பரவசவெளியில் பதினான்கு நாட்கள் – 2
ஒரு (LIVE ) தொடர்

எப்போது உறங்கினேன். எப்போது விழித்தேன் என்று தெரியவில்லை. இரண்டு நாட்கள் இரண்டு நொடிகள் போல பறந்துவிட்டன.நேற்று  சென்னையில் விமானம் பிடித்து, டில்லி வந்து அங்கிருந்து பேருந்தின் மூலம் இன்று காலை ரிஷிகேஷில்  காலடி எடுத்து வைத்தாயிற்று.

சென்னையில் இருந்து ரிஷிகேஷ் சுமார் 2380 கிலோ மீட்டர் .  வீட்டை விட்டு புறப்பட்டு இரண்டு நாட்கள் ஆனாலும் பயண செய்ததோ கொஞ்ச நேரம்தான்.

சென்னையில் இருந்து டில்லி இரண்டரை மணி நேர விமானப் பயணம். டில்லியில் இருந்து ரிஷிகேஷ் எட்டு மணிநேர பேருந்து பயணம்.

சுமார் பத்து மணி நேரத்தில் என் வீட்டில் இருந்து ரிஷிகேஷை என்னால் தரிசிக்க முடிகிறது.
என்னே அறிவியலின் அற்புதம் !

இது அறிவியலின் அற்புதம் மட்டுமல்ல மனித அறிவின் அற்புதம் தான் !

இந்த அறிவியல் அற்புதமும்,அறிவின் வெளிப்பாடும் நமக்கு முன்பு இங்கு தரிசித்த எண்ணற்ற ஞானியர்கள் நமக்களித்த பிச்சை ! விமான வசதியும், பிற வாகன வசதியும் இருப்பதால் நம்மால் சில மணி நேரத்தில் இங்கு வர முடிகிறது. இத்தகைய வசதியில்லாத காலத்தில் இங்கு நம் முன்னோர்கள் எவ்வளவு சிரமப் பட்டிருக்க வேண்டும். அப்போதெல்லாம் அவர்கள்  இமய தரிசனம் மிகவும் சுலபமாக மாறவேண்டும் என்று தங்களின் வலிமையான புனிதமான எண்ணங்களை விதைத்து இருப்பார்கள் தானே !. அவர்கள் இப்பிரபஞ்சத்தில் விதைத்த எண்ணங்களே இன்று நமக்கு வசதி வாய்ப்பாக மாறியிருக்கிறது. நம் தலைமுறையில் அனுபவிக்க முடியாவிட்டாலும்,அடுத்த தலைமுறை நலம் பெற பிராதித்து, எண்ணங்களால் சாதித்த, அவர்களை இந்த கண நேரத்தில் நினைத்து அவர்களின் பொற்பாதங்களை பணிவதே நாம் அவர்களுக்கு செய்யும் பெரும்பேறு.

பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான,இமயம் இன்றுவரை எண்ணிலடங்கா  ரிஷிகளும், மகான்களும் தரிசித்து  புனிந்தமடைந்த பிரதேசம். இமயத்தின் ஓவ்வொரு துளியும் அப்பழுக்கற்ற புனித தன்மை உடையது. இங்கு தோன்றும் நதிகளும், அருவிகளும் நேரிடையாக பரிசுத்தமான பனிமலைகள் உருகி வழிவதின் மூலம் உற்பத்தி ஆனவை. இவ்வாறு மலைகளினூடே குதித்து வரும் போது பல அரிய மூலிகைகளோடு கலந்து அதன் அற்புத மருத்துவத் தன்மையை சுமந்து வருவதால், இங்கு  வழியும் ஒவ்வொரு துளியும் ஜீவிதம் மிக்கது. நோயற்ற வாழ்வையும், நோய்களை தீர்க்கவும் வல்லது. ஏன் நீங்கள் இங்கு சுவாசிக்கும் காற்றும் அத்தகைய ஆற்றல் மிக்கதே !

ஆன்மிக சாதகர்களுக்கு இமயம் தான் உச்சகட்ட இலக்கு. அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களின் வாழ்நாள் நோக்கம் இமயத்தை ஒருமுறையாவது தரிசிக்கவேண்டும் என்பதே !

இந்துக்களுக்கு இங்கு சிவனும் பார்வதியும், மகாவிஷ்ணுவும்,பிரம்மனும் எண்ணற்ற ரிஷிமுனிகளும் வசிப்பதான நம்பிக்கை. புத்த மதம் சார்ந்தவளுக்கும், ஜைனர்களுக்கும் இது ஒரு புனித தளம். தென்னிந்தியாவில் காலடியில் பிறந்த ( கி.மு 788 – 820 ) ஆதிசங்கரர் பல இடங்களில் சுற்றித் திரிந்து இறுதியில் இறைவனோடு கலந்த இடம் இமயத்தின் உச்சியான கேதார்நாத்.

சீக்கியர்களின் மத குருவான குரு நானக் க  தமது வாழ்நாளில் பல இடங்களில் இமயத்தின் பல பகுதிகளை தரிசித்து இருக்கிறார். உத்ரகண்ட் மாநிலம் சீறிநகரில் சீக்கியர்களின் குருதுவராக்கள் அமைந்துள்ளன.
இயேசு கிறிஸ்து தனது இறுதிநாட்களை காஷ்மீரில் கழித்ததாக ஆதரங்களுடன் பலநூல்கள் வெளியாகி வருகின்றன.முகமது நபியவர்களின் புனித முடியை தாங்கி நிற்பதால் காஷ்மீரில் ஹசரத்பால் மசூதி சிறப்பம்சம் பெறுகிறது.இப்படி மதம் அடிப்படையில் பார்த்தாலும் இமயம் அனைத்து சமயத்திற்கும் ஊற்றாக இருக்கிறது.

சரி ! இப்படி பல மதங்கள், பல இனங்களை ஈர்க்கும் வகையில் இமயத்தில் அப்படி என்னதான் இருக்கிறது ?

இன்றிலிருந்து பதினான்கு நாட்கள் பயணம். ரிஷிகேஷ், கெளரிகுண்ட், கேதார்நாத்,ஜோஷிமத்,பத்ரிநாத், மணா என்று எங்களின் அடுத்த இரண்டு வார வாழ்க்கை இமயத்தோடு மட்டும். திரும்பும் போது ஹரித்தவாரில் தங்கி கங்கா ஆரத்தியுடன் இந்த இனிய இமயப் பயணம் முடிகிறது.

இந்த பதினான்கு நாட்களும் இமயம் என்ற இந்த பரவசவெளியில் தான் உலாவப் போகிறோம். இமயத்தின் சிற்ப்புகளை  பக்திமார்க்கம் வழியாக மட்டுமல்ல,ஞானமார்க்கமாக, அறிவியல் பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் அணுகுவோம்.
இன்று ரிஷிகேஷில் இனிமையுடன் கழிந்தது இனிய இமயத்தின் முதல் நாள். நாளை காலை சீறிநகர் நோக்கிப் பயணம்.

ரிஷிகேஷின் அனுபவத்துடன் மீண்டும் சந்திப்போம் !

வாழ்க வளமுடன் !

Thursday, September 13, 2012

பரவச வெளியில் பதினான்கு நாட்கள் ( ஒரு  LIVE  தொடர் )
இனிய இமயம் !

எனக்கும் இமயத்திற்கும் அப்படி என்ன பந்தம் என்று புரியவில்லை. நான்கு வாரம் முடிவதற்குள் இன்னொரு இமயப் பயணம்.

பரவசமாக தான் இருக்கிறது !

மழைப் பிடிக்கும் ! மலையும் பிடிக்கும் !

மலைகளும் மழையும் இணைந்த இமயம் எப்போதும் பிடிக்கும் !

எனக்கு சுமார் மூன்று வயதிருக்கலாம். எங்கள் வீட்டில் ஒரு ரேடியோ பெட்டி.அதில் பாட்டுக் கேட்பதற்கு எனது சொந்த பந்தங்கள் எல்லாம் எப்போதும் கூடி  நிற்கும். இலங்கை கூட்டு ஸ்தாபன வானொலியில் அப்போது பிரபலமான பாடல் ஒன்று. என்ன படம் என்று தெரியவில்லை. அதன் பாடல் தொடக்க வரி இது தான். “ ஈரமான ரோஜாவே…என்னை பார்த்து மூடாதே !” எனப் போகும் அந்தப்பாடல்.

என் ஒன்றுவிட்ட அண்ணன்களும் அக்காக்களும்  கொஞ்சம் மாற்றி ‘ஈனமான ரோஜாவே….என்னைப் பார்த்து மூடாதே ! என்று பாடி திரிவார்களாம்.

எனக்கு என்னமோ அந்த பிஞ்சு வயதில் அந்த பாடல் பிடிக்காதாம். அந்த பாடலை யார் பாடினாலும் ஒரே கத்தல் தான். அர்த்தம் புரியாவிட்டாலும் எனக்கு என்னவோ அந்த பாடலைக் கேட்டால் ஒரு வெறுப்பு.

ஆனால் அதே பருவத்தில் என்னை கவர்ந்த பாடல் ஒன்றிருக்கிறது. நீங்களே எதிர்பார்க்க மாட்டீர்கள்.ஒரு மூன்று வயது பிள்ளைக்கு இந்த பாடல் பிடிக்கும் என்று. அது என் முப்பாட்டன் பாரதியின் பரவச வரிகள்.


வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் அடி
மேலைக் கடல் முழுதுங் கப்பல்விடுவோம்
பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்கு வோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் !

அந்த பருவத்தில் இந்த பாட்டுக்கும் அர்த்தம் தெரியாதது தான். ஆனால் இதன் தாளம், சங்கீத மாமேதை டி.ஆர். மகாலிங்கத்தின் கம்பீரக் குரல், கொஞ்சும் வயதிலேயே என்னை தஞ்சம் அடைய செய்துவிட்டது. ( எல்லாம் எங்கம்மா சொல்லி கேட்டதுதான் ! ).நாளடைவில் அர்த்தம் புரிந்து இமயம் குறித்து காட்சிகள் கண்டு, கற்பனையில் விரிந்து இமயம் எனக்கு ஒரு கனவு பிரதேசமாகவே மாறிவிட்டது.

இமயம் என்பது வெறும் மலை அல்ல. அது ஒரு மாபெரும் இயக்கம். ஆதிகாலத்தில் எரிமலையாக இருந்து புவியீர்ப்பு விசையின் நகர்தாலால் பொங்கி எழுந்து நெருப்பு குழம்பாய் வெளிப்பட்டு, பின்னர் தணிந்து ,குளிர்ந்து இறுகி இப்போது பனிமலையாய் பரவி நிற்கிறது என்பது புவியியல் கோட்பாடு. இமயத்தின் எழுச்சியின் அழுத்தத்தால் லெமூரியா கடலில் புதைந்து போனதாக கூறப்படும் தகவல்களும் உண்டு.

இமயம் ஆசியாவின் பத்து நாடுகளுக்கு எல்லையாக நிற்கும் ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். இப்போதே பல்வேறு ஈகோக்களில் சிக்கி தடுமாறும் நாடுகள், இமயம் என்றொரு அரண் இல்லாவிட்டால் இந்த நேரம் அடித்து கொண்டு அழிந்திருக்கும்.

இமயம் பல்வேறு மதங்களின் புனித பூமியாகவும் திகழ்கிறது. இமயத்தின் சாரலில் ரிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத்,முக்திநாத்,கேதார்நாத்,கங்கோத்ரி,யமுனோத்ரி என  பக்தி பரவசமாக ஆன்மிக தேடலுக்கும் வழியுண்டு. இன்னொரு புறம் ஜாலியாக குடும்பத்தோடு சென்று ஜல்லிடித்து வர குலு, மணாலி, சிம்லா, லே,லாடக் போன்ற இடங்களும் உண்டு.
ஆன்மிக பழமாக ருத்ராட்சமும் உண்டு. ஆப்பிள் தோட்டங்களும் உண்டு.

எந்த ஒரு பயணத்தையும் விட இமயத்தின் மீது எனக்கொரு தீராத காதல் உண்டு.

கடந்த மாதம்  ஆகஸ்ட் பன்னிரெண்டாம் தேதி.இமயத்தின் உச்சியில் ஜம்சம் விமானநிலையத்தில் மாட்டிக்கொண்டோம். தொடர் பனிக் காரணமாக விமானம் இயக்கம் ஒரு வாரத்திற்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நாங்களோ இன்னும் நாற்பத்தெட்டு மணிநேரத்தில் காத்மண்டுவில் இருக்க வேண்டும். ஜம்சம்மில் இருந்து  காத்மண்டிற்கு வாகனம் பிடிக்கவேண்டுமானால் கூட சுமார் 155 கிலோ மீட்டர் பயணிக்கவேண்டும்.

அது சாதாரண பயணம் அல்ல. ஜம்சம்மில்(Jomsom) இருந்து பென்னி ( Beni )என்ற இடத்திற்கு வந்தால் தான் பேருந்து. மலைச்சரிவுகளுக்கிடையே கிடைத்த வாகனத்தில் தொத்திக் கொண்டும், கடும் மழையில் நனைந்தபடியும்  இருபது மணிநேரத்தில் பென்னியை வந்தடைந்தோம்.
video

இமயத்தின் மிக உயரமான மலைத்தொடர்கள் இரண்டு. ஒன்று அன்னப்பூரணா தொடர். இன்னொன்று கஞ்சன் ஜங்கா.இறைவனின் திருவிளையாடலால் அன்னபூரணாவில் கால் வைத்த நாங்கள் கண்டகி நதியோரமாகவே கஞ்சன் ஜங்கா மலைத்தொடரில்  பென்னி எனும் இடத்தை வந்தடைந்தோம்.

சாதரணமாக ஒரு மழை அடித்தாலே நாம் வெளியே வர அச்சப்படுவோம். ஆனால் முன்பின் பழக்கம் இல்லாத மண்ணில் எப்படி அச்சமின்றி நம்மால் நடக்க முடிகிறது.
அதுதான் இமயம்.

இமயம் ஒரு தாயின் மடியைப் போன்றது.

நீங்கள் இமயத்தில் காலடி எடுத்து வைத்த வினாடியில் தாயின் மடியில் தவழும் குழந்தையின் மனோநிலைக்கு ஆட்படுவீர்கள்.இதோ இன்னொரு முறை என் தாயின் மடியில் தவழப்போகிறேன். இந்த முறையும் ரிஷிகேஷ்,ஹரித்துவார், கேதார்நாத், பத்ரிநாத் என்ற பரிச்சயப்பட்ட இடங்கள் தான்.ஆனால் பயணம் அப்படி இருக்காது என்று உணர்ந்தே இருக்கிறோம். ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு அற்புதம். ஒவ்வொரு நகர்தலிலும் ஒரு அனுபவம். அடுத்த நிகழ்ப்போவதை அறிந்துகொண்டால் அதில்  ஒரு சுவரஸ்யம் இருக்காது.

அந்த நொடியை அதே கணத்தில் வாழும்போது தான் அதில் ஒரு இன்பம். இந்த வினாடியில் இருந்து இமயத்தில்  எனது அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல் கொண்டுள்ளேன்.

எழுதி பலநாட்களான நிலையில் என் விரலுக்கும் சிந்தனைக்கும் இடையே ஒரு இடைவெளியை உணர்கிறேன். எனினும் என்னுள் எழுதவேண்டும் என்ற ஆவல் குறையவில்லை.

நாளை காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து பரவசவெளிக்கான எமது பயணம் தொடர்கிறது. எனது குரு சத்குரு டி.கே.எஸ்.சுப்ரமண்யன், எனது சொந்தங்கள்  தாமிரபரணி ஆசிரமத்தின் தலைவர் பி.ஆர்.சந்திரன் உட்பட நூறுக்கும் மேற்பட்டவர்கள் என்னோடு பயணிக்க உள்ளார்கள்.

நாளை முதல் தினமும் இமயத்தின் அனுபவங்கள் உங்களோடு…

இப்போது உறங்கச் செல்கிறேன். வாழ்க வளமுடன் !