Saturday, March 31, 2012

மனம் நிறைய மகிழ்ச்சி – பகுதி மூன்று

மனம் நிறைய மகிழ்ச்சியின் இரண்டு பதிவேற்றி மூன்றாவது பதிவிற்குள் இத்தனை இடைவேளை. ஏற்கனவே கடவுள் பற்றியும். ஹிப்னோபர்த்திங் பற்றியும் தொடங்கி அது பாதியில் உருப்படாமல் நின்று விட்டது.

இதற்கெல்லாம் பெரிய காரணம் ஏதுமில்லை. மனம் ஒத்துழைக்கவில்லை.

அவ்வளவுதான்.

எந்த ஒரு செயலுக்கும் மனதின் ஒத்துழைப்பு அவசியம். எந்த ஒரு செயலும் அதனை செய்யும் நேரத்தை கணக்கிட்டுக்கொண்டால் மிகவும் குறுகிய ஒன்றாக தான் இருக்கும்.

ஆனால் திட்டமிடுகிறேன் பேர்வழி என்று நாம் அதற்கு கொடுக்கும் பில்டப்புகளிலேயே காலம் கரைந்தோடிவிடும். இதற்கு இன்வால்மெண்ட் (Involement ) இல்லாமையோ, கான்சண்ட்ரேஷன் ( Concentration ) இல்லாமையோ காரணம் அல்ல.

இது ஒருவித சோம்பல். சோம்பல் என்பது ஒருவித மனவியாதி.

சோம்பல் என்ற மனவியாதிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் முக்கிய காரணம் உடலியல் சார்ந்த ஒன்று. மனதை உற்சாகமூட்டும், மனதை சுறுசுறுப்பாக வைத்துகொள்ளவும் போதிய சக்தியை உடல் உற்பத்தி செய்யவில்லை என்றால் சோம்பல் வரும்.

சரி உடல் ! ஏன் மனதிற்குரிய சக்தியை உற்பத்தி செய்யவில்லை. அதற்கும் காரணம் மனம் தான்.

என்ன குழப்புகிறாய் என்கிறீர்களா ?

குழப்பவில்லை. மனம் சோம்பலில் விழக்காரணம் எப்படி போதிய சக்தியை உடல் உற்பத்தி செய்யாமல் காரணமாக அமைகிறதோ, அதே போல் மனம் உடலுக்கு எனக்கு இவ்வளவு சக்தி வேண்டும் உற்பத்தி செய்து தா என்று ஆணையிடாமல் இருப்பதுதான்.

மனதின் சக்தி உடலின் சக்தியோடு இணைந்த ஒன்று.அதற்கு மனதும் உடலும் சேர்ந்து செயல்பட வேண்டும்.

உடலின் சக்தி அவசியமா ? மனோசக்தி அவசியாமா என்றால். சாதிக்க மனோசக்தி தான் முதலில் நிற்கும், ஆனால் அதன் பின்னால் உடல்சக்தியும் இருக்கும்.

எப்படி கணவன்மார்களின் வெற்றிக்கு மனைவி துணை நிற்கிறார்களோ அப்படி. கல்யாணம் ஆகாதவர்களுக்கு காதலோ, கேர்ள் பிரண்டோ, பாய் பிரண்டு அல்லது முகம் தெரியாத ஆணோ, பெண்ணொ யாரோ ஒருவர் ஊக்கசக்தியாக இருக்கிறார்களே ! அதே போல உடலும் மனமும் ஒன்றையொன்று உற்சாகப்படுத்திகொள்ளவேண்டும்.

சரி ! மனதால் உடலை உற்சாகப்படுத்துவது எப்படி ?

உடலால் மனதை உற்சாகப்படுத்துவது எப்படி ?

முதலில் உடலை உற்சாகப்படுத்தி மனதை உற்சாகப்படுத்தும் வழிமுறையைப் பார்ப்போம்.

மீண்டும் பழைய சமாச்சாரம் தான்.

உடலின் அவசியம் சீரான இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம்,காற்றோட்டம் மற்றும் உயிரோட்டம். இது சீராக இயங்க நமது உடலின் ஜீவகாந்த இயக்கம் சீராக இருக்கவேண்டும்.

வழக்கமாக சோர்வாக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒரு ஒரு மணிநேரம் தூங்கியோ அல்லது சும்மாவேனும் படுத்து எழுந்தால் ஒரளவு சுறுசுறுப்பு வருகிறது.

எப்படி ?

உடல் செயல்படாமல் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை. உடலில் உள்ள சிறு சிறு சிற்றறைகளில், அதாவது செல்களில் ஒரு சுழற்சி ஏற்பட்டு, அது பிரபஞ்சவெளியில் நிரம்பி வழியும் வான்காந்தம் என்ற ஆற்றலை இழுத்து நமது உடலில் ஜீவகாந்தமாக நிரப்புகிறது.

ஜீவகாந்த குறைபாடால் சோர்வுற்று கிடந்த உடல், அது நிரப்பப்பட்டவுடன் புத்துணர்வு பெறுகிறது.

எனினும் சிலர் படுக்கையில் இருந்து எழும் போது சோர்வுடன் எழுந்திருக்கிறார்களே ஏன் ?

காரணம் மிகவும் எளிது. அவர்களின் செல்கள் போதிய ஜீவகாந்த ஆற்றலை உற்பத்தி செய்யவில்லை  அதனால்.

தூங்கும் போது முழுமையான உறக்கமில்லாமல் போனாலோ, அல்லது குழப்பநிலை, தேவையற்ற சிந்தனை, மன அழுத்தம் ஆகியவை இருந்தாலோ இந்த செல்களின் செயல்பாட்டில் மந்தநிலை ஏற்படும்.

அதாவது ஒரு மனிதன் தனது நினைவுகளை முற்றிலும் அழித்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றால் தான் ஒரு இன்பமான உணர்வுடன் எழுந்திருக்க முடியும். அதாவது ஜீவகாந்தம் நிரம்பி வழியும்.

மனதை இரண்டு வகைப்படுத்துகிறது உளவியல்

ஒரு புறமனம் அல்லது Concious Mind
இரண்டாவது ஆழ்மனம் அல்லது Sub Consious Mind

புற மன சிந்தனையோடு  உறங்கும்போது ஜீவகாந்த உற்பத்தியின் வேகம் தடைபடும்.நீங்கள் உறங்கும் போது நீங்கள் முழுவதும் சப் கான்சியஸ் மைண்ட் என்ற நிலைக்கு சென்றுவிடவேண்டும். அப்படி சென்றுவிட்டீர்கள் எனில் உங்களின் உடலில் தானாகவே ஜீவகாந்த பெருக்கம் நிகழும்.

எனவே உறங்க செல்லும் முன் கண்டதை நினைத்து எண்ணங்களை வரிசைப்படுத்தி மேலோட்டமான தூக்கத்திற்கு செல்லாமல், நல்ல ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கவேண்டும்.படுத்தால் பல்வேறு சிந்தனைகள் வருவது சகஜமே. அவ்வாறு வரும்போது அவற்றை ஒவ்வொன்றாக கரைத்து,உறக்கத்தை மட்டுமே பிரதானமாக முன்மொழியவேண்டும்.

இந்த ஆழ்நிலை தூக்கத்திற்கு செல்லும் ஒரு பயிற்சியாகதான் சில மதங்களில் இரவில் பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.

ஏதோ ஒரு இறைநிலையிடம் நமது மனதை செலுத்து suggestion எனப்படும் சங்கல்பங்களை செய்யும் போது, இயல்பாகவே நமது எண்ண அலைகள் வீரியம் குறைந்து ஒருமுகப்படுகிறது.

சங்கல்பத்தின் இறுதியில் உறங்குவதற்கும் ஒரு சங்கல்பம் இருக்கும்.

படுத்தவுடன் தூக்கம் வரும்.

நீங்கள் இயல்பான மனோநிலையில் இருக்கிறீர்கள் என்றால். நான் தூங்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு படுத்த அடுத்த பத்து வினாடியில் நீங்கள் உறங்கசெல்ல வேண்டும்.

உங்களுக்கு பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லையெனினும், இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒரு ஐந்து நிமிடம் உங்கள் மனதிடம் மிகவும் பர்செனலாக

நான் உறங்கச் செல்கிறேன் மனமே, எனக்கு நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை கொடு, கனவுகளற்ற இந்த ஆழமான உறக்கத்தின் மூலமாக எனது உடல் உறுப்புகள் உற்சாகம் பெறுகின்றன. நான் மேற்கொள்ள இருக்கும் இந்த ஆனந்தமான உறக்கத்தின் மூலம் எனது மனமும் அறிவும் கூர்மையடைகிறது. நான் உறக்கம் முடிந்து எழும்போது உடல் நிறைய உற்சாகமும், மனம் நிறைய மகிழ்ச்சியுடம் பெறுகிறேன். நான் செய்யவேண்டிய பணிகளுக்கான அறிவும் ஆற்றலும் எனது உறக்கத்தின் மூலம் எனது உடலிலும் மனதிலும் பெருகும் ஆற்றல் ஈர்த்து தரும்... இப்போது நான் மகிழ்ச்சியாக உறங்குகிறேன் “

என்று சொல்லிவிட்டு உறங்கச் செல்வதை பழக்கமாக கொள்ளுங்கள்.

இதையேதான் சொல்லவேண்டும் என்றில்லை. உங்களுக்கு பிடித்த வாசகங்களை நீங்கள் எழுதி வைத்து பழகலாம்.

இது உடலை மனதால் உற்சாகப்படுத்தும் முறை.

உடலை உற்சாகப்படுத்தும் இன்னொரு முறை.

உடல் பயிற்சி, நடைப்பயிற்சி, சைக்கிளில் செல்வது மற்றும் யோகாப் பயிற்சிகள்.

மனம் சோர்வுற்று இருக்கும் போது “ அய்யோ இப்படி ஆகிவிட்டதே ! என்று சோர்வடையாமல் ஒரு சைக்கிளையோ அல்லது நடந்தோ அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்துக்கு செல்லுங்கள்.

மிகவும் உற்சாகமாக இரண்டு மூன்று சுற்றுகள் வாருங்கள்.

அதற்குள்ளாகவே உடலில் இரத்த ஓட்டமும், வெப்ப ஓட்டமும் சீர்படும். இது உடலில் உள்ள செல்களை சுறுசுறுப்பாக்கி பிரபஞ்ச வெளியில் உள்ள வான்காந்த ஆற்றலை இழுத்து ஜீவகாந்தத்தைப் பெருக்கி உங்களை அமைதிபடுத்தும்.

உடலுக்கு பயிற்சி தருவது மனதை வலிமையாக்கும். மனதிற்கு தரும் பயிற்சி உடலை செம்மைப்படுத்தும்.

இது ஒரு பழக்கமாக வந்துவிட்டால் சோம்பல் என்பது இருக்காது. நாம் நமது உடலையும், மனதையும் பயன்படுத்தாமல் இருக்கும் போது தான் சோம்பல் என்ற நோய் நம்மை சுற்றி வளைக்கிறது.

மனோப்பயிற்சியாக தியானமும், உடலநலனிற்கு யோகாவும் செய்யும் சூழலில் கூட இத்தகைய சோம்பல் சூழ்ந்து திட்டங்களை தள்ளிப் போடுகிறது. இதற்கு காரணம் வேறொன்றுமில்லை, நம்மால் செய்யத்தக்க அளவிலான, தகுந்த பணிக்கு அதிகமான சுமையை நாம் ஏற்றிக்கொள்ளும் போது, நாம் எவ்வளவுதான் சுறுசுறுப்பாக உழைத்தாலும், நேரமின்மை  ஒருவித சோம்பலை உடலுக்கு தருகிறது.

விரலுக்கு ஏத்த வீக்கம் என்ற பழமொழியின் அர்த்தம் இப்போது எனக்கு புரியவருகிறது. அதனால் கொஞ்சம் இந்த தவற்றை சரி செய்துகொண்டிருக்கிறேன்.


பள்ளி நாட்களில் பெரும்பாலும் பிறகு படிக்கலாம், என்று சோம்பலில் தள்ளிவைப்பது உண்டு. நான் பலமுறை அவ்வாறு செய்துவிட்டு பின்னர் தேர்வின் நெருக்கத்தில் அவஸ்தைப்பட்டு இருக்கிறேன்.

இப்போது இருக்கும் கல்விமுறையில், பிள்ளைகளின் உளவியலை யாரும் பார்ப்பதில்லை.

மதிப்பெண்ணை ஒரு பெரும் விஷயமாக , பாடத்தை திணிப்பதிலேயே கவனமாக இருக்கின்றனர்.

நான் அப்படி ஒரு பலியாடாக இருந்து தான் வந்திருக்கிறேன். சில நேரங்களின் எனக்கு வியப்பாக இருக்கும். ஒரு நாவலை ஒரே மூச்சில் படித்துவிட்டு, பின்னர் பல நாட்கள் ஆனபின்னும் அதில் உள்ள விஷயங்களை நினைவில் வைத்து சொல்கிறோமே. ஆனால் பாடப் புத்தகத்தை பார்த்தால் ஏன் பயம்.

ஏன் என்றால், நாம் கதை புத்தகங்களை creative visualization மனநிலையோடு அணுகுகிறோம். கதை புத்தகத்தைப் படித்தவுடன் ஒரு ரசனை நம்முடன் கலக்கிறது.

ஆனால் பாடப்புத்தகத்தை அவ்வாறா படிக்கிறோம் ?

எந்த ஒரு விஷயத்தையும் இப்படி creative visualization முறையில் பார்த்தால் ஒருமுறைப் படித்தாலே போதும், உங்களுக்கு நினைவில் நிற்கும்.

அது எப்படி என்று அடுத்தப் பதிவில் பார்ப்போம்..

No comments:

Post a Comment

மொழி வழி !

மொழி சார்ந்த அரசியல்தான் தமிழ்நாட்டின் உயிர் நாடியாக இருந்திருக்கிறது. ஒரு மொழியை எதிர்த்தே ஒரு கட்சி ஆட்சியை பிடித்தது. நாற்பது ஆண்...