Friday, March 9, 2012

மனம் நிறைய மகிழ்ச்சி


மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது இரண்டே இரண்டு வகை தான்.

ஒன்று உங்களை தொந்தரவு செய்யாமல் வாழ்வது.

இரண்டு மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் வாழ்வது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் நாம் நம்மை தொந்தரவு செய்யாமல் வாழ்ந்தாலே போதும், அது இயல்பாகவே மற்றவர்களுக்கும் தொந்தரவு இல்லாத வாழ்வாக அமைந்துவிடும். அதனால் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது ஒரே ஒரு வகைதான்.

அது நம்மை தொந்தரவு செய்யாமல் வாழ்வதுதான்.

நீங்கள் உங்களுக்கு தொந்தரவு தராமல் வாழ்கிறீர்களா ?

பொதுவாக நீங்கள் யாரிடம் இந்த கேள்வியை கேட்டாலும், ஏன் ஆரம்பக்காலங்களில் என்னிடம் இந்தக் கேள்வி வீசப்பட்டாலும் நான் உடனே சொல்லும் பதில் நான் மகிழ்ச்சியுடன், ஆனந்தமுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன் என்பதே.

நான் முழு மனநிறைவோடு இந்த பதிலை சொன்னாலும், எனக்குள் சில வினாடிகளில் சில சஞ்சலங்கள் தொக்கி நிற்கும். இது இப்படி நடக்கவில்லையே ? அது அப்படி கிடைக்கவில்லையே ? இவர்களுக்கு கிடைப்பது ஏன் எனக்கு கிடைக்கவில்லை ? எனத் தொடரும்.

அத்தகைய காலக்கட்டங்களில் நான் உண்மையில் மகிழ்ச்சியாக இல்லை. என்னை நான் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறேன் என்பது எனக்கு விளங்கும்.ஆனால் நான் எப்படி நிறைவான வாழ்க்கை வாழ்வது போல ஒரு உடனடி பதிலை சொன்னேன்.

அதற்கு காரணம் நான் யார் என்பதை என்னால் உணரமுடியாத நிலை தான்.

நான் யார் ?

இதனை உணரதானே எண்ணற்ற ஞானிகளும், அறிஞர்களும் பல ஆண்டுகளை கடந்தார்கள். நான் யார் என்பதை அவ்வளவு சுலபமாக உணர முடியுமா ?

முடியும் !

அதற்கு ஞானியாகவோ துறவியாகவோ தேவையில்லை. நாம் பெற வேண்டியது இரண்டைப் பற்றிய அறிவு மட்டுமே. அது போதும் !

முதலாவது உடலைப் பற்றிய அறிவு.

இரண்டாவது நமது மனதைப் பற்றிய அறிவு.

மனம் சதா சர்வகாலமும் எதையோ சிந்தித்துகொண்டே இருக்கிறது. நீங்கள் சொல்லுங்கள் உங்களுக்கு எழும் எண்ணங்களில் எவையெல்லாம் அவசியம் உங்களுக்கு தேவையானவை. எவையெல்லாம் உண்மையில் பலன் தரக்கூடியவை.

உதாரணமாக....

நான் ஒரு பேரூந்துப்பயணத்தில் இருந்தேன்.

பெங்களூரின் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஸ்டாப்பில் இருந்து ஹெக்டே நகர் நோக்கியதாக இருந்தது என் பயணம். நான் ஒரு திரைக்கதை எழுதும் பணியில் முழுமையாக ஈடுபடுத்திகொண்டிருக்கும் சுழல். என் சிந்தனையில் ஒரு எண்பது சதவீதம் திரைக்கதை குறித்து நான் சிந்திப்பதாக நான் என்னை ஏமாற்றிக்கொண்டு என் சிந்தனையில் ஓடியவை இவை.

பேருந்திற்காக காத்திருக்கும் தருணத்தில் மனம்

” சே...! என்ன கூட்டம் இது “

பிகர் சூப்பரா இருக்கே !

ஆகா ! வறுத்தகடலை வாசம்...

நிலக்கடலை மலையாக குவிந்திருக்க அதில் சிறுவனாக நான் உருண்ட நினைவுகள்...

எதிரே இருக்கும் மாலில் தான் நான் Dream பற்றிய புத்தகத்தை வாங்கினேன்.

அப்போது ஹுப்னோதெரபி படித்துகொண்டிருந்தேன்...

ஹா...புரொபசர் போன் பண்ணாரே...அவர் தங்கச்சி கல்யாணத்துக்கு போகவேண்டும்...

ஆஹா ! நான் பஸ்சுக்காக காத்திருக்கிறேன்...பக்கத்தில் தான் சுவர்ணா சேனல் ஆபிஸ்
நான் பஸ்ஸில் போவதை யாராவது பார்த்துவிட்டால்..

யாருப்பா இது பொண்ணு....அய்யோ ! ...பட்டாம் பூச்சு பறக்குதே..

தண்ணி அடிப்பான்னு நெனைக்கிறேன்... கண்ணு உள்ள வாங்கி இருக்கு...

ஆஹா ! யார்ரா இவன் தள்ளிட்டு போறான்..

எதிரே ஷாங்காய்க்கு தினசரி விமானசேவை குறித்த ஒருவிளம்பரம்.

காசு நிறைய கிடைத்தவுடன் சீனா போகவேண்டும்.

சைனாப் பொண்ணை கல்யாணம் பண்ணா எப்படி இருக்கும்...

யூ மீ ( என் சீனத்து சினேகிதி ) கிட்ட இருந்து மெயிலே வரலை
புதுசா பாய் பிரண்ட் புடிச்சிட்டாளோ...

இந்த பொட்டச்சிங்கள நம்ப முடியாது...

ஒரு பஸ் வருகிறது. ஓடிச்சென்று கேட்க, அது ஹெக்டே நகர் போகாது என்று திரும்பி வருகிறேன். அந்த வினாடியில் பஸ்ஸின் கண்டக்டர் ஒரு பெண்.

சின்ன வயசு டிரைவர்.

ஜன்னல் ஓரம் நான்கு பெண்கள்.

அதில் ஒரு வெள்ளைக்கோட்டுடன் டாக்டர் பெண்....

ஆம் ! சுனிதா இப்படிதான் இருப்பா...!

ஹும் ! கல்யாணம் கட்டியிருந்தா இன்னேரம் இரண்டு வயசுல ஒரு புள்ளை இருக்கும்
விட்றா அவளை !

செல்வராகவன்.

மயக்கமென்ன பாடல்.

இந்த தனுஷ் பையன் என்ன இப்படி பாப்புலர் ஆயிட்டான்.

வாங்க பாஸு ! தங்கராஜ் சார்....மோகன் சாருக்கு ஏதாவது சாப்பிட சொல்லுங்க
தனுஷின் சினேகப் புன்னகை.

மீண்டும் தனுஷுடன் பேசவேண்டும்.

இப்ப பேசனா மதிக்க மாட்டான். இந்த கன்னடப்படத்தை ஹிட் கொடுத்துவிட்டு பேசணும்...
அந்த கதைக்கு அவனை விட்டா சான்ஸ் இல்லை...

இப்ப...பண்ணா நம்ம சம்பளமும் கம்மிதான்.

நாம ஒரு ஹிட் கொடுத்து... அவன வச்சிப் பண்ணா ஒரு அஞ்சு கோடி சம்பளம் கேட்கலாம்..
கே.வி.ஆனந்த் சம்பளம் அஞ்சு கோடியாமே...

பஸ் வருகிறது.

நெரிசல்களுடன் உள்ளே ஏறுகிறேன்.

சே ! ஏசி பஸ்ஸா இருந்தா நல்லா இருக்கும் !

ஒரு முசலமான் பக்கத்தில் உட்கார...

அத்தர் வாசம் கமக்குதே ! குளிச்சிருக்க மாட்டானோ...?

என் துளுக்க தோழன்கள் நினைவுக்கு வந்தார்கள்.

அஜுஸ் அகமது...உருப்படாமல் சுத்தறான்.

அகமதுல்லா.... ஊருல ரைஸ் மில்லைப் பாத்துட்டு இருப்பான்.

ஷாஜித் அலி...லண்டல போய் செட்டிலாயிட்டான்.

லண்டன்ல முஸ்லிம்கள் அமைதியாக வாழ முடியுமா ?

இடையே பிளஸ் டூ சினேகிதி மும்தாஜ் பேகம் நாகூரில் வைத்து கையில் சர்க்கரை பொட்டலத்தை ரகசியமாக திணித்துவிட்டு சென்றது நினைவுக்கு வந்தது.

மும்தாஜுக்கு நம்ம மேலே லவ் இருந்திருக்குமோ...

போடா ! வெண்ரு...! இத்தனை வருஷம் கழிச்சி இப்ப பீல் பண்றே..

அவன் இன்னேரம் துபாயோ....சவுதியோ புருஷனோட செட்டில் ஆகியிருப்பா...

பத்தாம் கிளோசோட கல்யாணம் ஆகிப் போனாளே கரிமா பீவி ...அவளும் சவுதில தான் இருக்கா..

போதும் ! போதும் ! இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.

நான் பேருந்திற்காக நின்றது முதல் ஹெக்டே நகர் வந்தது வரை சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டு இருக்கலாம். அதற்குள் எழுந்த ஆயிரக்கணக்கான எண்ணங்களில் நினைவில் உள்ள சிலதையே நான் பட்டியலிட்டு இருக்கிறேன்.

ஏன் இதனை தட்டச்சு செய்துகொண்டிருக்கும் இந்த வினாடியில் கூட எண்ணற்ற எண்ணங்கள் என்னை சூழ்ந்துகொண்டிருக்கின்றன.

சரி ! இதில் எனக்கு பயன் தரக்கூடியவை எவை ? என் கவனத்தை சிதறடிக்க கூடியவை எவை ?
இதில் எத்தனை சிந்தனைகள் எனக்கு இப்போது அவசியமானவை. இத்தனை சிந்தனைகளையும் எனக்கு ஆக்கபூர்வமானதா ? இதனை எப்படி கண்டுபிடிப்பது எப்படி ? இதற்கு மனதை அறியவேண்டும்.

மனதை அறிவதா ?

எப்படி ரொம்ப சுலபம்.

அதற்கு முன்பு உங்களின் உடலை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ?

உடலை அறிவதின் மூலம் மனதை அறிந்துகொள்வதை சுலபமாக்க முடியும்.

ஒருநாள் திடீரென கவனித்துப் பார்த்தேன். என் பாதங்களி நிறைய வெடிப்புகள். ஒரு நகத்தில் சிறு பிளவு.கொஞ்சம் நாட்களாக தொண்டைப் புண்.

ஊருக்கு உபதேசம் செய்பவன்.

யோகா பண்ணுங்கள். உடல் நலன் கிடைக்கும் என்று உரக்க சொல்பவன்.

இவன் உடலின் சில உபாதைகள்.

ஏன் !

நான் என்னதான் உடற்பயிற்சிகள் செய்தாலும் எனது உடலை நான் முழுவதும் உணராததால் வந்த வினை.

உடலையும் மனதையும் உணர பெரும்பாடெல்லாம் படத்தேவையில்லை. ஒரு சிறு பயிற்சி தினம் செய்தாலே போதும். இரண்டும் உங்களுக்கு பிடிப்பட்டுவிடும்.

உடலை அறிவது சுலபம்.

நீங்கள் தீவிர உடபயிற்சியாளராக இருக்கலாம் அல்லது பயிற்சியே செய்யாதவராக கூட இருக்கலாம். தூங்கச் செல்லும் முன்பு இதனை செய்யுங்கள்.

நன்றாக வசதியாக மல்லாந்துப் படுத்துக்கொள்ளுங்கள்.

மூச்சை மிதமாக விடுங்கள்.

இப்போது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஒவ்வொரு பகுதியாக நினைவை கொண்டு வாருங்கள். அந்த பகுதிகளை உங்களின் மனக்கண்ணால் பாருங்கள்.

பாதம்...

கணுக்கால்

முழங்கால்

மூட்டுப் பகுதி

தொடை

படிபடியாக அப்படியே மனக்கண் முன்பு கொண்டு வாருங்கள்.

இறுதியாக உச்சந்தலையில் சென்று முடியுங்கள்.

இப்போது என்ன உணர்கிறீர்கள் ?

உடலில் ஒரு புத்தணர்வு பொங்கும். சில நேரங்களில் தூக்கம் வந்தால் தூங்கிவிடுவீர்கள். ஆனால் தூக்கம் கலைந்து எழும்போது பளிச்சென்று எழுந்திருப்பீர்கள். இவ்வாறு ஒவ்வொரு பகுதியாக சிந்திக்கும் போது, அந்தப் பகுதியில் குறைபாடுகள் இருந்தால் உடனே உணர்ந்துகொள்ள முடியும்.பெரும்பாலும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால், அத்தகைய குறைபாடுகள் தானே விலகி விடும்.

அப்படி சரியாகவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது சிகிச்சை.

இந்த பயிற்சியை முறையாக செய்தால் ஒரு பதினைந்து நிமிடத்தில் சிறப்பான பலனைத் தரும்.
இது ஒன்றும் புதிய அரிய பயிற்சி இல்லை. நம் உடலில் தட்பவெட்ப நிலையை சரி செய்ய, பல்வேறு யோகா மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் சொல்லித்தரப்படுவதுதான்.


அங்கு போய் காசு கட்டி செய்வதை நீங்களே செய்து பாருங்களேன்.

மிச்சமானது செலவு ! ஆரோக்கியம் புது வரவு !

உடலை அறிய இந்த சிறிய பயிற்சியில் ஆரம்பியுங்கள். இன்னும் பல பயிற்சிகளை பிறகு பார்ப்போம்.

சரி மனதை அறிவது எப்படி ?

அடுத்த பதிவில் கொஞ்சம் விரிவாப் பார்ப்போம்.

No comments:

Post a Comment

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...