Friday, September 16, 2011

தலை நிமிரும் தமிழ் சினிமா : எங்கேயும் எப்போதும்


நேற்று ஒரு சினிமா நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார் “தமிழ்நாட்ல நாளையோட சினிமா காலி தோழர் ! இந்த அம்மா திடீர்னு கேளிக்கை வரியை 30 சதவீதம் உயர்த்திடுச்சி.....ஏற்கனவே பெப்சி பிரச்சனை வேற....”

கடந்த இரண்டு நாட்களாக அவரின் வார்த்தைகள் மனதை குடைந்து கொண்டிருந்தது.ஆனால் எங்கேயும் எப்போதும் பார்த்தபின்பு அந்த அச்சம் தேவையற்றது என்பது உண்மையிலும் உண்மை.

எங்கேயும் எப்போதும் ! தமிழ் சினிமாவில் புதிய முயற்சி.

ஹீரோக்கள் தான் சினிமாவின் தலைவிதியை நிர்ணயிக்க முடியும் என்ற விதியை உடைத்து, சினிமா என்றும் இயக்குனர்களின் ஊடகம் என்பதை நிருபித்து இருக்கும் தோழர் இயக்குனர் சரவணனுக்கு ஒரு பூங்கொத்து.

கதையின் களத்திற்கு அவருக்கு இன்னொரு பூங்கொத்து தரலாம்.நாம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது விபத்துக்களை பார்க்கிறோம். ஒரு “உச்” அல்லது ஒரு சின்ன வருத்ததோடு அதனை மறந்து விடுகிறோம்.அப்படி ஒரு விபத்து, அதன் பாதிப்பு, அதில் சிக்குண்டவர்களின் நிலை, வாழ்ந்த வாழ்க்கையை, எப்படி இந்த விபத்து புரட்டிப் போடுகிறது என்பது தான் ஒருவரிக்கதை.திருச்சியில் இருந்து சென்னைக்கு இண்டர்வியுக்கு வருகிறார் அமுதா ( அனன்யா ) எதிர்பாரத விதமாக அவரை வரவேற்க வேண்டிய அவரின் அக்கா வராத சூழலில், நண்பனை வழியனுப்ப வரும் சரவ்விடம் உதவி கேட்க, அவர் அமுதாவுடன் இண்டர்வியூக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லும் அழகான பயணம் ஒரு கதை. முன் பின் அறிமுக இல்லாத அமுதா வழி கேட்கும் போது , சலனமின்றி அப்பாவியாக அவரை 15B , 37G பேருந்து, ஷேர் ஆட்டோ என மாறி மாறி ( உற்சாகமான கதை சொல்லும் உத்தி )அழைத்து செல்லும் சுவரஸ்யமான பயணம் தமிழ் திரைக்கதையில் புதுசு.பயணத்தின் முடிவில் அந்த இளைஞன் மீது அமுதாவிற்கு காதல் வருகிறது.

திருச்சியில் ஒரு பட்டறையில் வேலை செய்யும் ஜெய் தூரத்தில் , எதிர்வீட்டு மொட்டை மாடியில் உலவும் அஞ்சலியை ரூட் விட, அடாவடியாக அஞ்சலி ஜெய்யை மடக்கி நிகழும் இன்னொரு காதல். அஞ்சலி பல்வேறு பரிசோதனைகளில் ( புதுமையான காட்சிகள் ) ஜெய் தேர்ச்சி பெற அஞ்சலி – ஜெய் காதல் றெக்கை கட்டுகிறது.

திருச்சி வந்த அமுதா, அந்த இளைஞனின் நினைவிலேயே தவிக்க,அவனை சந்திக்கும் பொருட்டு மீண்டும் சென்னைக்கு வருகிறார்.விழுப்புரம் அருகே அரசூரில் வசிக்கும் ஜெய்யின் பெற்றோரை பார்க்க ஜெய்யும் – அஞ்சலியும், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வருகின்றனர்.அதே நேரத்தில் சென்னையில் இருந்து நாயகி அனன்யா மற்றொரு தனியார் பேருந்தில் திருச்சி நோக்கி பயணிக்கின்றார்.

சென்னையில் இருந்து வரும் தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து வரும் அரசு பேருந்திற்கும்
வழியில் ஏற்படும் எதிர்பாராத அந்த நிகழ்வு அவர்களின் வாழ்க்கையையே புரட்டி போடுகிறது.அதன் பாதிப்பு, அந்த கொடூர நிகழ்வு சொல்லும் நீதி தான் கதை.

மிகவும் வலிமையான திரைக்கதை.

இது மட்டுமின்றி பேருந்து பயணத்தில் இதயத்தை மொபைல் எண்கள் மூலம் பறிமாறிக்கொள்ளும் டீன் ஏஜ் காதல். ஐந்து வருடத்திற்கு பிறகு தன் குழந்தையைப் பார்க்க வரும் அப்பா, அவரின் மழலைப் பேசும் ரிங் டோன். புதுப் பொண்டாட்டியை ஊருக்கு வழியனுப்பி பிரிய மனமின்றி அவருடன் பயணிக்கும் இளம் கணவன் என ஒவ்வொரு பாத்திரத்திற்கும் சிரத்தை எடுத்து செதுக்கி இருக்கிறார் இயக்குனர் சரவணன்.

புதிய களம், புதுமையான விறுவிறு திரைக்கதை, தெளிவான படமாக்கம் என்று முதல் படத்திலேயே நம்பிக்கை ஏற்படுத்துகிறார் இயக்குனர் எம்.சரவணன்.வழக்கமான கிளிஷேக்களை உடைத்து கதை சொல்லும் அழகில் தனித்து நிற்கிறார் சரவணன்.

வாங்க பாஸூ..! உங்களுக்காக தான் காத்திருந்தோம்.

துறுதுறு அனன்யா இதில் பாந்தமான பெண்ணாகவும், அமைதியான கதாபாத்திரங்களில் நடித்த அஞ்சலி துறுதுறுப்பாகவும் நடித்து பட்டையை கிளப்பி இருக்கிறார்கள். இயக்குனரின் இந்த கதாபாத்திரத் தேர்வில் புத்திசாலித்தனம் தெரிகிறது.

ஜெய் நடிப்பில் ஜெய்’யித்து இருக்கிறார்.

வேல்ராஜின் கேமராவுக்கு ஒரு பூங்கொத்து.புதிய கோணங்களில் அசத்துகிறார்.

அரங்கங்கள், வெளிநாட்டு பாடல்கள் இல்லாமல் இயல்பான இடங்களை தெளிவாக பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

கிஷோரின் படத்தொகுப்பும் நம்மை ஆழமாக களத்தில் ஊடுருவ செய்கின்றன.

சத்யாவின் பாடல்கள் இருக்கையில் ரசிகர்களை கட்டிப் போடுகிறது. பின்னனி இசையும் காட்சிக்கு காட்சி உயிர் சேர்க்கிறது

விபத்தை தத்ருபமாக பதிவு செய்திருக்கும் தொழில்நுட்பத்திற்கு நாம் பெருமையுடன் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட்டின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, அந்த நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் ஒரு ரத்தின கம்பளம் விரித்திருக்கிறார். அதற்காக ஏ.ஆர். முருகதாஸுக்கு ஒரு பூங்கொத்து தரலாம்.

தெலுங்கின் பிரபல இயக்குனர் ராகவேந்திர ராவ் தயாரிப்பில் சித்தார்த் – சுருதி கமல் நடிக்க “ அங்க ஒக்கன தீரடு “ படத்தின் தோல்வி மூலம் கசப்பான அனுபவம் பெற்ற பின் ஹாலிவுட்டின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இந்திய சந்தை குறித்து கொஞ்சம் தயக்கமுடன் தான் இருந்தது.

ஏ.ஆர். முருகதாஸ் எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் அந்த தயக்கத்தை தவிடு பொடியாக்கிவிட்டார். பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இனி தென்னிந்திய சினிமாவில் தன்னம்பிக்கையுடன் பாய்ச்சல் காட்டும்.

நேற்று தமிழ் சினிமா அவ்வளவுதான் என்று நெகடிவாக பேசிய நண்பர் எனக்கு நினைவுக்கு வந்தார்.
மேலோட்டமான கருத்து என்றாலும் கேட்ட நிமிடம் முதல் மனதை ஏதோ பிசைந்து கொண்டிருந்த்து.

எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் வந்தால் தமிழ் சினிமாவை எந்த கொம்பனாலும் அழிக்கவோ, முடக்கவோ முடியாது !

முடியவே முடியாது !

No comments:

Post a Comment

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...