Wednesday, September 14, 2011

இதயத்தை திருடிய “பை சைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை” புத்தக வெளியீட்டு விழா.


சமான்யனையும் சரித்திர புருஷனாக்கும் ஆற்றல் சிலருக்கு உண்டு. அவர்களின் ஆற்றலால் வேடிக்கை பார்க்க போன இடத்தில் நாயகனாகும் அதிர்ஷ்டம் மிக சாதரணமான மனிதனுக்கு ஏற்படும்.பார்வையாளனாக இருக்கையில் நெருக்கி உட்கார்ந்து கொள்ள இடம் தேடும் ஒருவன் திடீரென மேடையை அலங்கரிக்கும் “முக்கிய பிரமுகராக” மாற்றப்படுவான். அந்த வகையில் சாதாரண வாசகனான என்னை தனது புத்தக வெளியீட்டில் இடம்பெற செய்து அவரது வரலாற்றில் சிறு இடம் கிடைக்க செய்த அசாத்திய அன்புமிக்கவராகி நிற்கிறார் அண்ணன் அஜயன் பாலா.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. சென்னைக்கு வந்த புதிது. சினிமா ஆவலில் புத்தகங்களையும். திரையரங்குகளையும், திரைப்பட விழாக்களையும் தேடி அலைந்துகொண்டிருந்த காலம், டான்பாஸ்கோவில் ஒரு குறும்பட விழா. இரண்டு நாள் விழா முடிவில் திரையிடப்பட்டது “ பை சைக்கிள் தீவ்ஸ் “ திரைப்படம். இன்றைய திரைதொழில்நுட்பத்தின் பிதாமகனாக திகழும் பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் தரிசனம் அங்குதான் முதன் முதலாக கிடைத்தது. அந்த தரிசனம் பெற சிலம்பு 2002 என்ற குறும்பட விழாவின் மூலமாக என்னைப் போன்ற ”பொடியன்களுக்கு” வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவர் அஜயன் பாலா. அதற்கு முன்பாக பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் திரைக்கதை, எனது தாய்மொழியில் புத்தக வடிவில் வெளியாகி சக்கைப் போடு போட காரணமாக இருந்தவரும் அஜயன் பாலா தான். இப்போது பாரதி புத்தகாலயத்தின் புதிய கோணம் சார்பாக மூன்றாம் பதிப்பாக வெளியாகியுள்ளது.

இன்று திரைப்படங்களின் திரைக்கதை வடிவங்கள் எத்தனையோ சந்தைகளில் கிடைக்கிறது, நான் அறிந்த வகையில் தமிழில் திரைக்கதை வடிவம் பெற்று வந்த முதல் புத்தகம் அஜயன் பாலாவின் “ பை சைக்கிள் தீவ்ஸாக” தான் இருக்கும்.

இன்று மாலை பாரதி புத்தகாலயத்தில் வெளியீட்டு விழா மறக்காமல் வந்துவிடுங்கள் என்றார் அண்ணன் அஜயன்.

ஆடுகளம் படத்தில் முரட்டுகண்கள் கொண்டு மிரட்டிய “ அவள் கூந்தலில் நிலா ஒளிருகிறது “ ரொமன்ஸ் ராஜா வ.ஐ.ச. அவர்கள் வருகிறார்கள் என்றவுடன், ஏனோ தரை டிக்கெட் ரசிகன் தனது அபிமான நாயகனை தரிசிக்கும் மனோபாவத்துடன் வ.ஐ.ச.ஜெயபாலனை கண்டு, கதைத்து மகிழ மனம் அடித்துகொண்டது.ஏன் எனில் வ.ஐ.ச ஒரு சிறந்த எழுத்தாளர், நடிகர், போராளி மட்டுமல்ல, பத்து நிமிடம் கதைப்பதின் மூலமே உங்களுக்குள் பத்து வருடத்திற்காக சுறுசுறுப்பை பாய்ச்சி அனுப்பும் உற்சாக வல்லுனர்.

ஆடுகளத்தில் அபரிதமான நடிப்பில், ஆச்சர்யத்தக்கவகையில் முதல் முயற்சியிலேயே தேசிய விருது பெற்ற, அவரின் தொகுப்பான “ அவள் கூந்தலில் நிலா ஒளிருகிறது” புத்தகம் ஏற்படுத்திய பாதிப்பு என்னுள் இன்றும் மாறாமல் இருக்கிறது. இவர் மீசையை பார்க்கும் போது, இவரா நெடுந்தீவில் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் றோசி ரீச்சர் (டீச்சர்..?!!), ஜெயமங்களம், இந்திரா ,மீனாட்சி ( அவர் தொகுப்பில் இவர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார், இன்னும் குறிப்பிடாத பெயர்கள் இருக்க கூடும், அதை தனியாக ஒருநாள் கேட்கவேண்டும் ) என ஒரே நேரத்தில் நான்கு காதல்கள் செய்தவர் என்று ஆச்சர்யமூட்டியது.

இலங்கையின் கலாச்சார வாழ்வியல், அரசியல் மாற்றம், சூழலை " அவள் கூந்தலில் நிலா ஒளிருகிறது " மிகவும் சுவரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் வெளிப்படுத்துகிறது. அந்த உணர்வை தொகுப்பைப் படித்தால் மட்டும் அனுபவிக்க முடியும்.

வ.ஐ.ச. மட்டும் தான் புத்தகத்தை வெளியிடபோகிறார் என்று நினைத்து கொண்டு சென்றால், என்னையும் அந்த மேடையில் ஏற்றி பூக்களோடு மணக்கும் நாருக்கும் கிடைக்கும் மோட்ச கதியை தந்துவிட்டார் அஜயன்.

ஒரு நல்லவனோட சேர்ந்தால் பல நல்லவர்கள் பரிச்சயமாவர்கள் என்பது மெய்பிப்பது போல, பாரதி புத்தகாலயம் மற்றும் புதிய கோணம் பதிப்பகத்தின் நாகராஜன், படப்பெட்டி திரை இலக்கிய இதழின் சிவசெந்தில், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், இயக்கும் லிங்கம், இயக்குனரும் “பிலிம் காட்டுகிறார்கள் “ தொகுப்பை எழுதியவருமான யோகானந்த் என்று மாபெரும் படைப்பாளிகளோடு என்னையும் நிற்க வைத்தது ஏனோ என்று தெரியவில்லை. ஆனால் அதில் கலந்துகொண்டு வந்தபின் உடனடியாக எழுத்துலகில் ஏதேனும் செய்யவேண்டும் என்று மூளை பரபரக்கிறது. ஒரு வேளை ஒரு அண்ணனாக இந்த தூண்டுதலை செய்யக்கூட அஜயன் என்னை உயர்த்தி இருக்கலாம்.

மூன்றாம் பதிப்புக் காணும் “பை சைக்கிள் தீவ்ஸ்ஸை” புதிய கோணம் பதிப்பகத்தின் முதல் பதிப்பு என்ற அறிவிப்புடன் வெளியிடுவதின் மூலம் இந்த புத்தகத்தின் பெருமையை உணரமுடியும்.. இதுவே இந்த நூலுக்கு கிடைத்த முதல் மரியாதை.

அஜயனின் திரைக்கதை வடிவமே ஒரு புதுமையாக இருக்கிறது. வழக்கமாக திரைக்கதை நூல் என்றால் அதில் ஷாட் பிரிப்பு, மற்றும் குறிப்புகள் என குறுக்கிட்டு படிக்கும் சுவரஸ்யத்தை கொஞ்சம் தொந்தரவு செய்யும். ஆனால் அஜயன் அடிப்படையில் ஒரு எழுத்தாளர் என்பதால் அந்த குறுக்கீடு இல்லாமல் விறுவிறுப்பாக படிக்கும் வகையில் திரைக்கதையை படிவமெடுத்துள்ளார். இதுவே இந்த புத்தகத்திற்கு கிடைத்திருக்கும் அதீத வரவேற்புக்கு காரணமாக இருக்க கூடும்.

திரைக்கதை வடிவம் என்று அப்படியே படிவிறக்கம் செய்யாமல், தமிழ் வாசகர்களின் சுவையறிந்து, அவர்களின் உளவியலுக்கு ஏற்ப, அதே நேரம் மூல படைப்பின் அர்த்தம் மாறாமல் வெளிவந்துள்ள தரமான நூல் “ பை சைக்கிள் தீவ்ஸ்”. அதனால் தான் என்னவோ இந்த புத்தகத்தை படிக்கும் போது அந்த படத்தை பார்த்த அனுபவம் ஏற்படுகிறது.

திரைக்கல்வி குறித்த ஆர்வம் பெருகிவரும் சூழலில், திரைப்பட்டறைகளுக்கு ஒரு சிறந்த பாட நூலாக திகழும் தகுதி “ பை சைக்கிள் தீவ்ஸ் “ திரைக்கதை புத்தகத்திற்கு இருப்பதாகவே கருதுகிறேன்.
இனி வரும் சந்ததியினர் “ பை சைக்கிள் தீவ்ஸ் “ திரைக்கதைப் புத்தகத்தை படிக்காமல் அவர்களின் சினிமா குறித்த புரிதல்கள் எளிமையாகாது.பல வருடங்கள் செலவு செய்து கற்றுக்கொள்ளும் சிரமத்தை குறைத்து எளிதாக திரைக்கதை குறித்த அறிவை வழங்கும் சிறந்த வழிகாட்டியாகவும் “ பை சைக்கிள் தீவ்ஸ்” திரைக்கதை புத்தகத்தை பெருமையுடன் குறிப்பிடலாம்.

கிடைக்குமிடம் : பாரதி புத்தகாலயம் :- 044-24332424 / 24332924 / 24339024
இணையம் : www.thamizhbook.com

1 comment:

  1. உண்மைதான் அஜயன் அவர்களின் எழுத்து திறமை நாம் அறிந்ததுதான். அவருக்கான இடத்தை அவர் இன்னும் அடையவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். விரைவில் அவருக்கான உயரத்திற்கு அவர் செல்ல வாழ்த்துவோம்.

    .....
    பெரியாளாயிட்ட..எங்களையும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் சார்.

    ReplyDelete

மொழி வழி !

மொழி சார்ந்த அரசியல்தான் தமிழ்நாட்டின் உயிர் நாடியாக இருந்திருக்கிறது. ஒரு மொழியை எதிர்த்தே ஒரு கட்சி ஆட்சியை பிடித்தது. நாற்பது ஆண்...