பிள்ளையார் சதுர்த்தி ! - கடவுளை வணங்கும்போது கருத்தினை உற்றுப்பார் !


விண் + நாயகன் = வினாயகன். அதாவது விண்ணுலகம் என்று போற்றப்படுகின்ற இந்த பிரபஞ்சத்திற்கே நாயகன். விண்ணுலகம் என்பது பஞ்ச பூதங்களின் கூட்டு. இந்த பஞ்சபூதங்களுக்கு நாயகனாக விளங்கும் இயற்கையைப் போற்றுவோம் !

கணம் ( பஞ்ச பூத கணங்கள் ) + அதிபதி = கணபதி !

ஐந்து ( பஞ்ச பூதங்கள் ஐந்து ) + கரத்தன் = ஐந்துகரத்தன்.

கணம் ( பஞ்சபூதங்கள் ) + ஆகாஷ் = கணேஷ்

இவையெல்லாம் மிஸ்டர் பிள்ளையாருக்கு நாம் கொடுத்துள்ள வேறு பெயர்கள். பிள்ளையார் என்பது ஒரு செல்லப்பெயர்.

நமது வாழ்வியல் இயற்கையோடு இணைந்தது. இயற்கைய போற்றி பாதுகாக்கவேண்டும் என்ற உண்மை தான் ஒவ்வொரு கடவுளின் பின்னும் ஒளிந்துள்ளது.

கடவுளை நோக்கும்போது கருத்தினை உற்றுப்பார் ! அங்கு கடவுளின் உருவம் மறைந்து கருத்தே நிலைத்து நிற்கும் என்பார் அருள்தந்தை வேதாத்ரி மகரிஷி.

ஆனால் இதனையெல்லாம் எடுத்து சொல்ல அறிவியல்புலம் கொண்ட ஆன்மிக பெரியோர்கள் இல்லாததால் இதுபோன்ற விழாக்கள் வெறும் சடங்காக மாறிவிட்டது வருத்ததுக்குரியது.

அதுமட்டுமின்றி கோலாகலமாக எல்லோரும் இணைந்து கொண்டாடவேண்டிய இதுபோன்ற விழாக்கள், இத்தகைய அடையாளம் திணிக்கப்பட்டதின் விளைவாக ஒரு குறிப்பிட்ட மத சடங்காக மாறிவிட்டது.

இன்று அதிகாலை எனது நகர்வலத்தில் நான் கண்ட காட்சி.தெருக்களில் மூலைக்கு மூலை பிள்ளையார் சிலைகள் வைத்து அதற்கு மின்விளக்கு அலங்காரங்களால் பட்டையைக்கிளப்பி கொண்டிருந்தார்கள்.

ஏற்கனவே மின் தட்டுப்பாட்டில் திணறும் தமிழகத்தி இப்படி கடவுளின் பெயரால் மின்விரயம் தேவையா ?

பாதுகாப்பிற்கு இயந்திரதுப்பாக்கியுடன் காவலர்கள். பாவம் இந்த காவலர்கள், இந்தப் பணிக்கு வரும்போது இப்படி ஒரு சிலைக்கு காவல் காக்க வேண்டிய சூழல் வரும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்து இருக்கமாட்டார்கள்.இதிலும் சில வயதான காவலர்கள் கொசுக்கடியில் திணறிக்கொண்டிருந்ததைப் பார்க்கும்போது மனதிற்கு வேதனையாக இருந்தது.

சென்னைப் போன்ற பெருநகரங்களில் கடலில் கரைக்கப்படும் பிள்ளையார் சிலைகள், பெங்களூரில் அங்குள்ள அழகிய ஏரிகளில் தான் நிகழும்.குறிப்பாக அழகிற்கு பெயர் போன அல்சூர் ஏரி இப்படி வீசப்பட்ட பிள்ளையார் சிலைகளுக்கு பிறகு சகதியாக காட்சி அளிக்கும்.

விழாக்கள் மக்களை ஒன்றுபடுத்த, மகிழ்விக்க பிறந்தவை.

ஆனால் இன்று ?

மின்விரயம்.

மாசுபடுதல்

அச்சம்.

போக்குவரத்து இடைஞ்சல்.

என்று பலவிதங்களில் இடையூறாக மாறிவருகிறது. இதனை காலத்திற்கு ஏற்ப மாற்றம் கொண்டு வர முயற்சிக்கவேண்டும்.

கடவுளை நோக்கும் போது, கருத்தினை உற்றுப்பார். அங்கு கடவுள் மறைந்து கருத்துக்களே நிலைத்து நிற்கும். இன்னொரு முறை சொல்லிக்கொள்வோம்.

இந்த உலகை அறிவால் மட்டுமே நிர்மாணிப்போம் !

Comments

Popular posts from this blog

கல்யாணம் ஆனவர்களுக்கும் கல்யாணம் ஆகாதவர்களுக்கும்

ஆழியாறு வாங்க ! ஆனந்தம் வாங்க !

கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும் !