Sunday, August 28, 2011

மூவரின் உயிர்காக்க தொடர் கருப்புகொடி அணிந்து போராடுவோம் !


ஒரு ஜனநாயக நாட்டில் எது நிகழக்கூடாது என்று நினைக்கிறோமோ அது நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.

கொலை ! தற்கொலை ! சட்டத்தின் பெயரால் மரணதண்டனை.இது மூன்றுமே ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்தான்.

மூன்று நபர்களின் தூக்கு தண்டனைக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு தற்கொலை நிகழ்ந்து நிலைக்கொள்ளச் செய்கிறது.

எமது நோக்கம் எந்த காரணத்தைக்கொண்டு ஒரு மனித உயிர் கொல்லப்படகூடாது என்பதுதான்.
புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரால் ஏற்கனவே ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் லட்சக்கணக்கில் கடனை ஏற்றி வைத்துள்ள இந்திய அரசு, இப்போது மூன்று பேரைக்கொல்ல நூற்றிப் பத்துக்கோடி கைகளில் சுருக்கு கயிற்றை திணித்துள்ளது.

ஆன்மிகம் என்றொரு அறிவியில் சக்தி கொண்டு உலகை ஆசிர்வதித்த தாய்மண் இது.அவர்களின் பிள்ளைகளின் கைகளில் அடாவடியாக பாவ ரேகைகளைப் பதிய செய்கிறது சட்டம்.

சமுகப் போராட்டங்கள் எல்லாம் வாய் பேச்சையும் உரைவீச்சையும் மட்டுமே முன்னிறுத்துகின்றன.
அறிவுபூர்வமாக இன்றைய சமூகத்தை வழிநடத்தவேண்டிய தலைவர்கள் உணர்வுப் பூர்வமாக இளைஞர்களை தூண்டிவிடுவதின் காரணமே செங்கொடி, முத்துக்குமார் போன்றோரின் முடிவுகள்.

முத்துகுமார் தீக்குளித்ததால் ஈழபோராட்டம் முடிவுக்கு வந்துவிடவில்லை.மாறாக முத்துகுமரன் என்ற நல்ல சிந்தனையாளனை, நல்ல செய்தியாளனை வருங்காலத்தில் ஏதோவொரு வகையில் சமுக பங்காற்ற வாய்ப்புகொண்ட ஒரு இளைஞனை இந்த நாடு இழந்தது.அவ்வளவுதான் !

செங்கொடி தீக்குளித்து உள்ளதால் மூன்று பேரின் தண்டனையை அரசு உடனடியாக நிறுத்தப் போவதுமில்லை.மாறாக மூன்று பேரின் தூக்கிற்கு எதிரான போராட்ட தீவிரம் செங்கொடியின் மரணத்தின் மீது திரும்பி, அதனால் எத்தகைய பலன் அடையாளம் என்ற வகையில் அரசியல் முன்னீடுகள் நிகழும்.

இதனால் லாபம் அடைய போவது உரைவீச்சு அரசியல் தலைவர்கள் தான்.

இந்த மண் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை அறிவூப் பூர்வமாக வழிகாட்ட வேண்டிய தலைவர்கள் எல்லாம் உணர்ச்சியைது தூண்டிவிட்டு இளைய சமுகத்தின் அறிவார்ந்த சிந்தனைகளை மழுங்க செய்து குளிர்காய்ந்து வருகின்றனர்.

ஈழப் போராட்டத்திலும் சரி ! தூக்கு தண்டனை எதிர்ப்பு போராட்டத்திலும் சரி, மேடை போட்டு குருதியைக் கொப்பளிக்க செய்யும் உரைவீசும் அரசியல்வாதிகள் யாரும் உணர்ச்சிவயப்பட்டு தற்கொலை செய்துகொண்ட்தாக சரித்திரம் இல்லை. பாவம் ! அவர்கள் போய்விட்டால், இவ்வாறாக உணர்ச்சியை தூண்டிவிட யார் இருக்கிறார்கள்.

உண்மை இதுதான் !

அகிம்சை போராட்டதின் பின்பு ஒளிந்திருக்கும் கூர்மை அடாவடித்தனமான போராட்டங்களில் இருப்பதில்லை.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், வாஞ்சிநாதன் என்று பலர் கத்தியெடுத்து சாதிக்காத ஒன்றை மகாத்மாவினால சத்தமின்றி சாதிக்கமுடிந்தது.

கடந்த வாரம் தினத்தந்தியில் படித்த ஒரு செய்தி என்னை சிந்திக்க வைத்தது.

இந்தியாவில் சுதந்திரம் போராட்டம் தீவிரம்போராட்டம் வலிமைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் வின்செண்ட் சர்ச்சில் இவ்வாறு காந்தியப் போராட்டத்தைப் பற்றி கூறுகிறார்.” என்னால் காந்திய போராட்டத்திற்கு பதிலடித் தரமுடியவில்லை. நான் செயலற்று நிற்கிறேன். அவர் ஆயதம் கொண்டு போராடினால் அதனைவிட வலிமையான ஆயதம் கொண்டு எதிர்கொள்ளமுடியும். ஆனால் அன்பு என்ற ஆயுதத்தை முன்னிறுத்துகிறார். அதற்கு பதிலடி அதனைவிட வலிமையாக அன்பு செலுத்துவதைவிட வேறு வழி எனக்கு தெரியவில்லை என்று இயலாமையை தெரிவிக்கிறார்.

மக்கள் சக்தி ஒரு மாபெரும் சக்தி. அதனை அன்பு என்ற ஒரு கருவியை கொண்டு ஒருங்கிணைக்கும்போதுதான் அது மேலும் வலிமை அடையும். மனம் அமைதியான நிலையில் இருக்கும் போதுதான் எண்ணங்கள் செயலுக்கு வரும் என்கிறர் உளவியல் ஆராய்ச்சி முடிவுகள்.உணர்ச்சிவசமான போராட்டங்கள், எத்தனை வேகத்தில் முன்னிறுத்தப்படுகிறதோ, அதே வேகத்தில் அடங்கிவிடும். ஆனால் அஹிம்சா போராட்டங்கள் சத்தமின்றி ஒரு கதிர்வீச்சைப் போல பரவும்.

நம் போராட்டம் சாத்வீக முறையில் இருக்க வேண்டும். அதே நேரம் ஒரு தீ போல பரவவேண்டும். மக்கள் மனதில் எந்த நேரமும் அணையாமல் இருக்கவேண்டும். அதனை சாத்வீகப் போராட்டங்களே செய்கின்றன.

அதே நேரம் சட்டப் போராட்டமும் முன்னிறுத்தபடவேண்டும். அய்யா நெடுமாறன் மற்றும் வைகோ போன்றோரின் முயற்சிகளால் சட்டம் போராட்டம் ஒருபுறம் வலுப்பெற்று வருகிறது. அதே நேரம் எதிர்ப்பின் வலிமையை இந்த ஆட்சியாளர்களுக்கு அமைதியான வழியில் தெரியப்படுத்தவேண்டும்.
இத்தனை கோடி மக்கள் இதனை எதிர்க்கிறார்களா ? அப்படியெனில் இவர்களின் மனநிலைக்கு எதிராக நாம் செயல்பட்டால் இவர்களின் ஓட்டு அனைத்தும் நமக்கு எதிராக தானே அமையும் என்று ஆட்சியாளர்கள் யோசிக்க வேண்டும்.

நாம் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்.

அதற்கு அடையாளம் வேண்டும்.

அனைவரும் காலவரையற்ற கருப்பு பேட்ஜ் அணியலாம். இருபத்தி நான்கு மணிநேரமும் எங்கு சென்றாலும் கருப்பு பேட்ஜ் அணிந்தே செல்லுங்கள்.

தெரியாதவர்கள் இதனைப் பார்த்து காரணம் கேட்கும் போது பொறுமையாக எடுத்து கூறுங்கள். மேலும் அவர்களிடம் ஒரு பேட்ஜ்ஜை கொடுத்து விருப்பமுடன் அணிய பணியுங்கள். நோக்கம் நண்மையாக இருக்கும் சூழலில் இது தீ போல பரவி எல்லோரும் கருப்பு பேட்ஜ் அணியும் சூழல் ஏற்படும். அப்போது காணும் இடமெல்லாம் மக்கள் கருப்பு பேட்ஜில் தான் இருப்பார்கள்.

வயது வித்தியாசமின்றி இதனை எல்லோராலும் செய்ய முடியும். நிச்சயம் இந்த கரும்புரட்சி எண்ண அளவில் ஆட்சியாளர்கள் மனதில் பிரதிபலிக்கும். தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் மாநில சட்டமன்றத்திற்கு இருக்கும் நிலையில். அதனை அரசாங்கம் நிராகரித்து இருக்கிறது.

எனினும் உள்ளாட்சி தேர்தல்கள் நெருங்கும் சுழலில், இந்த கரும்புரட்சி பெரும் அளவில் வெடித்தால், எதிர்ப்பின் வலிமை அதிகரித்தால், இத்தனை ஓட்டுக்களை எந்த அரசாங்கம் இழக்க விரும்பும்.

அவசரகாலத்தில் நிச்சயம் ஏதேனும் மாற்றம் நிகழும்.

நம்பிக்கையோடு செய்வோம்.

இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன.

அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிவோம் !

நம் கைகளில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ள தூக்கு கயிற்றை அறுத்தெறிவோம்.

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...