Tuesday, May 10, 2011

சொர்க்கவாசலும் சித்திரகுப்தனின் i-tab ம்

சொர்க்கம் எது ? நரகம் எது ?

எனது சொந்த பாட்டிமார்களை நான் பார்த்தது இல்லை.

பாவம் அவர்கள் ! நான் பிறக்கும் முன்பே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அவரவர் செயல் விளவுக்கு ஏற்ப இடம் பிடித்து சென்று விட்டார்கள்.

ஆனால் என் அதிர்ஷ்டம் ! என் அம்மாவின் பாட்டியை நான் பார்த்து இருக்கிறேன். என் அம்மாவின் அம்மாவுக்கு அம்மா. என் அம்மாவின் அம்மம்மா ! எனக்கு அம்மம்மம்மம்மா.....அட கொள்ளு பாட்டிங்க ! விசாலாட்சி என்று பேர்.

கொஞ்சம் ரொமண்டிக்கா விசாலி !

நான் தான் விசாலாட்சியின் ஒரே கொள்ளுபேரன்.அதனால் அவருக்கு என் மீது கொள்ளைப் பிரியம்.

அவர்தான் எனக்கு எமராஜன் கதையை சொன்னார்.

நான் பிறந்து சில வருடங்களே தான் ஆகியிருந்தன. விசாலிக்கு இந்த பூமியில் வாழும் வாய்ப்பு சில வருடங்கள் தான் இருந்தன. இந்த பூமிக்கு வாழ வந்த பச்சபிள்ளைக்கு பாட்டி சொன்ன கதை எமனின் திருவிளையாடல்.

வாழ்க்கையின் இறுதியில் இருந்த விசாலிக்கு !பாவம் எப்போதும் மரண பயம் இருந்திருக்க வேண்டும். எனக்கு பால் சோறூட்டும் வாய்ப்புகளில் சொல்லும் கதைகளில் கூட எமதர்மன் எப்போது “ Propose “ பண்ணுவார் என்ற நினைப்பு அவருக்கு.

எமதர்மராஜன் ஒரு பனைமர உயரத்திற்கு இருப்பார். இந்த வீடு உயர பெரிய எருமை மாட்டின் மீது வருவார். அவர் கையில் ஒரு பெரிய பாசக்கயிறு இருக்கும். அந்த கயிற்றை வீசிதான் மனிதர்களின் உயிரை எடுப்பார் என்று அவர் சொல்லும் போதே எனக்கு பயத்தில் பாதி சாப்பாடு உள்ளே இறங்கிவிடும்.

சாப்பிட்ட பின் இரவு தூக்கத்தில் எமதர்மராஜன் வர, நான் அலறிக் கொண்டு எழ, அதற்கும் அந்த பாட்டி இரவில் முனி வந்து பிள்ளையை மிரட்டுகிறது என்று மறுநாள் எருக்கை என்னும் மரநாரில் செய்த தாயத்தையோ அல்லது புங்கை காய் தாயத்தையோ இடுப்பில் கட்டிவிடும். பலநேரங்களில் புரண்டு படுக்கும்போது தாயத்தின் கூர்மை இடுப்பில் குத்த, வலியின் அந்த சிணுங்களுக்கும், யட்சினை வந்து பிள்ளையை மிரட்டுவதாக, நாலு வீட்டு ஓலை எடுத்து அதனில் என்னை துப்பச் சொல்லி அடுப்பில் எரிக்கும்.

எனக்கு பாட்டியின் கையில் துப்புவதிலும், அந்த ஓலை அடுப்பில் படபடவென சத்தம் போட்டு எரிவதையும் பார்ப்பதில் ரொம்ப இஷ்டம்.என் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு காரணமோ, கதையோ விசாலியிடம் இருந்து வெளிப்படும்.


விசாலிக்கு என் மீது பிரியம்.

நெடுநாள் நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்த காலங்களில் நான் பள்ளி மாணவனாகிவிட்டேன். பள்ளி விட்டதும் மாலையில் சென்று பாட்டி பக்கத்தில் உட்கார்ந்து ஏதேனும் பேசுவார்களா என்று பார்ப்பேன்.

ஒருநாள் என் மாமா மதியமே பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.பாட்டியை சுத்தி சொந்தபந்தங்கள்.பாட்டியைப் பார்த்தேன், நெஞ்சுக் கூடு ஏறி இறங்கி மூச்சு முட்டிக் கொண்டிருந்தார்.ஒத்தை ரூபாயை கல்லில் இழைத்து பாலில் கலந்து பாட்டியின் வாயில் ஊத்தச் சொன்னார்கள். கையும் நடுங்க உதடுகள் சிணுங்க, கண்களில் நீர் துளிர்க்க அவ்வாறு ஊற்றினேன். நான் பால் ஊற்றிய சில நிமிடங்களிலேயே பாட்டியின் உயிர்துடிப்பு அடங்கிவிட்டது. என்னை அதிர்ஷ்டக்காரன் என்றார் என் பெரியப்பா. பாட்டியின் உயிர் என் மேல் தான் இருந்தது என்று பெருமைபட்டார்கள்.பாட்டிக்கு என் மேல்தான் அதிக பாசம் என்றார்கள்.

எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அதைவிட பெரிதாக சந்தேகம் வந்தது. பாட்டியை கொன்றது நானா ? எமதர்மனா ?

எமதர்மன் வரவில்லை பாசக்கயிற்றை வீசவில்லை ! பாட்டி எப்படி இறந்து போனாள் ? பிறகு என் பெரியப்பாவிடம் சந்தேகம் கேட்டபோது இன்னும் சில கிளைக் கதைகள் கிடைத்தன.

பெரியப்பா சொன்னார், எமதர்மன் நம் கண்ணுக்கு தெரியமாட்டார். உயிரை விடுபவர்களுக்கு மட்டுமே தெரிவார். அப்படி உயிரை எடுத்து எருமையில் உட்கார வைத்து கொண்டு எமலோகம் செல்வானாம். அங்கு சித்திரகுப்தன் என்பவன், இறந்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி கணக்கு பார்ப்பானாம். பூமியில் நல்லது செய்து வாழ்ந்திருந்தால் அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்.

சொர்க்கத்தில் தேவக்குமாரிகள் வரவேற்று, பன்னீரில் ரோஜாப்பூக்களை விட்டு குளிப்பாட்டி, யானைத் தந்த சீப்பில் தலைவாரி,உடல் முழுவதும் சந்தனமும் அத்தரும் பூசி,தினம் தினம் புதிய உடையளித்து, அறுசுவை உணவளித்து, வெள்ளி தாம்பலத்தில் வெத்திலை,பாக்கு, கும்பக்கோணம் சீவல் வைத்து உபசரித்து,தங்கத்தில் தகதகக்கும் அரண்மனையில்,பட்டு மெத்தையில் தூங்க வைப்பார்களாம். வாழ்நாள் முழுவதும் அங்கு அவர்கள் சந்தோஷமாக இருக்கலாமாம்.

சித்திரகுப்தனின் கணக்கில் கெட்டவனாக வாழ்ந்து பாவியாக இருந்தால்,அவர்களை நரகத்தில் தள்ளிவிடுவார்களாம். அங்கு பாம்பும் பூராணும் ஊறுமாம்,பல்லி வந்து கடிக்குமாம், எரியும் நெருப்பில் எண்ணெய் கொப்பரை இட்டு அதில் குளிக்க வைப்பார்களாம், குஷ்டம் பிடித்த பெண்கள் வந்து வரவேற்றும்,ஆய்...?!!! கிணற்றில் குளிப்பாட்டி.....இன்னும்...இன்னும் எழுதமுடியாத தண்டனைகளை எல்லாம் தருவானாம்.பிறகு வாழ்நாள் முழுவதும் நரகவாழ்க்கைதான் வாழவேண்டுமாம்.

இப்போது எமதர்ம மகாராஜாவை விட சித்திரகுப்தனின் கணக்கு புத்தகத்தின் மீது எனக்கு அதிகம் பயம் வந்தது.

இந்த எமதர்மனின் கதையை நான் பெரியவனான பின்னும் நெடுநாட்கள் நம்பிக்கொண்டிருந்தேன். என் தந்தை இறந்தபின்பு முதல் முறையாக சுடுகாடு பார்த்தேன். எரித்துவிட்டு திரும்பிய பின் எதிர்வீட்டு துரைசாமி தாத்தா என் தந்தையை எமதர்மன் அழைத்துபோனதை பார்த்தேன் என்றார். எமதர்மன் தனது எருமை வாகனத்தின் பின் ஒரு பளபளக்கும் தங்க பல்லக்கில் உட்காரவைத்து அழைத்து போனான் என்றார். சுற்றி அழுது முடித்திருந்த பெண்கள் எல்லாரும் என் தந்தையை புண்ணியவான் என்றார்கள். என் அம்மா கல்லூரிவரை படித்த சமுகநலத்துறை ஊழியராக இருந்தாலும்,அவரின் அறிவுக்கு கூட துரைசாமித் தாத்தாவின் வர்ணனை ஏனோ பிடித்து இருந்தது.எனக்கு கூட அப்பாவை இழந்த சோகத்தையும் மீறி அவர் மீது ஒரு ஹீரோயிசம் தோன்றியது.

இந்த நம்பிக்கைகள் எல்லாம் இறைஞான வகுப்புகளில் கலந்துகொள்ளும் வரைதான்.

கடவுள் யார் ? ஏன் இந்த நம்பிக்கைகள் என்று படிபடியாக உணர ஆரம்பித்தவுடன் எனக்கு சித்திரகுப்தன் பற்றி பயமில்லை. ஆனால் இந்த கதை எதற்கு. காலம் காலமாக இவ்வாறாக சொல்லப்பட்டு வரும் நம்பிக்கைகள் எதற்காக ?

மனிதவாழ்க்கையை செம்மையாக்கவும், ஒருவர் மீது ஒருவர் நேசத்தைக் பரிமாறிக்கொள்ளவும்,முடிந்தவரை மற்றவர்க்கு துன்பம் தராமல் வாழவேண்டும் என்பது தான் இந்த பாமர கதை சொல்லிகளின் வாழையடி வாழையாக வரும் கதைகளின் நோக்கம்.

இதை மிக எளிமையாக செயல் விளைவுத் தத்துவம் ( Cause and effect ) என்று விளக்குகிறார் வேதாத்ரி மகரிஷி.

சொர்க்கம் என்பது என்ன ? நரகம் என்பது என்ன ?

எமதர்மன் வருகிறானோ இல்லையோ ? சித்திரகுப்தன் கணக்கெடுக்கிறானோ இல்லையோ ? அது நம்பிக்கை. ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்கான விளைவுகளை தந்தே தீரும். இது உண்மை.

இது எப்படி செயல்படுகிறது. ஒவ்வொரு மனிதனின் செயல்களையும் யார் பதிவு செய்கிறார்கள். சித்திரகுப்தன் என்று ஒருவன் இருந்தாலும். அவன் கணக்கு புத்தகத்தை தூக்கி எறிந்துவிட்டு நவீனகாலத்திற்கேறப ஒரு ஐ டேஃபை வைத்துக்கொண்டு, மிகப் பெரிய சர்வரில் உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஃபைல் போட்டு பராமரித்தாலும், அதற்கான விளைவுகளை எப்படி சரியாக தரமுடியும் ?

இது பொதுவான கேள்விதான்.

சித்ரகுப்தன் கற்பனைபாத்திரமெனில் இப்போது பாவபுண்ணியங்களை பட்டியலிட்டு செயல்படுத்துவது எது ?

உலகில் இரண்டே செயல்கள்தான்.

ஒன்று நன்மை தருவது. இரண்டு தீமை தருவது.

இது தனிமனிதனுக்கும் இருக்கலாம்.அல்லது சமுகத்திற்கும் இருக்கலாம்.

இது தனிமனிதனாலும் நிகழலாம்.சமுகத்தாலும் நிகழலாம்.

பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன ? ஈர்ப்புசக்தி அல்லது கிரகித்தல்.

இது உந்துதல் மற்றும் அழுத்தம்.

சுருக்கமாக காந்தம் என்கிறார் வேதாத்ரி மகரிஷி.

காந்தத்தின் தன்மை என்ன ?

எதனையும் ஈர்த்துக்கொள்வது.

நாம் செய்யும் செயல்கள் யாவும் காந்த அலையாக மாறி பிரபஞ்சத்தில் பதிகிறது. பின்னர் அதே பதிவுகள் மன அலைசூழலுக்கேற்ப நமது அறிவில் இணைந்து செயல்படுகிறது. இது ஒரு வகை.
நாம் செயல்கள யாவும் நமது கருமையத்தில் பதிந்து நமது அடுத்த தலைமுறையினரிடம் சென்று வெளிப்படுவது இது இன்னொரு வகை.

பல்வேறு எண்ணங்கள் ஒன்று கூடி பிரபஞ்சத்தில் பதிந்து வலிமைபெற்று,அதே ஒத்த அலைவரிசையுடைய எண்ணங்களில் கலந்து அறிவாக வெளிப்படுவது.இது மற்றொரு வகை.

இவையாவும் காந்த தத்துவமே.

காந்தி தாத்தா இதை மூன்று குரங்குகளை வைத்து அருமையாக சொன்னார்.

கெட்டதை பேசாதே !

கெட்டதைப் பார்க்கதே !

கெட்டதை செய்யாதே !

இந்த உலகம் முழுவதும் சுமார் 700 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

ஒவ்வொரு மக்களுக்கும் ஒரு தனிப்பட்ட எண்ணம் உண்டு.

ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒரு தனிப்பட்ட சிந்தனை உண்டு.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனிப்பட்ட லட்சியம் உண்டு.

இவ்வாறு தனித்து தனித்து நினைக்கும்போது தான் பிரிவினைகள் ஏற்படுகின்றன.

இந்த பூமி வெறும் 25 ஆயிரம் மைல் சுற்றளவு உள்ளது.

இதில்தான் இந்த 700 கோடி மக்களும் வசிக்கவேண்டும்.

இந்த பூமியில் விளையும் எல்லா வளங்களும் எல்லாருக்கும் சொந்தமானது. எல்லைக்கட்டி நிற்கும் போதும்,பதுக்கும்போதும், பிறர்க்கு தேவையிருக்க, தேவையில்லாமல் இருப்பு கொள்வதும் தான் உலக அமைதி சீர்கேட்டிற்கு காரணம்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு.இதில் ஏற்படவேண்டும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசியப்பாடல் உள்ளது. அதுபோல் உலகம் முழுவதற்கும் இயற்கையை போற்றி ஒரு பொதுவான வாழ்த்துப்பாடல் வேண்டும். ஒரே கருத்துள்ள இப்பாடலை அவரவர் மொழியில் மொழிபெயர்த்து தினமும் ஒருமுறை, கோயில்கள், தேவலாயங்கள், இறைவழிப்பாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், மக்கள் கூடுமிடங்கள், நிகழ்ச்சிகள் என எங்கெங்கும் பாடும் போது ஒரு சக்தி மிகு ஒருமித்த சிந்தனை கிளர்ந்தெழும்.

இவ்வாறு செய்யும் போது நாளடைவில் இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ள கெட்ட அலையியக்கத்தை மாற்றி நல்வாழ்வுக்கான அலையிக்கமாக பதிவு செய்துவிடலாம்.

வேதாத்ரி மகரிஷி இதனை ஐம்பது வருடத்திற்கு முன்பு செய்திருக்கிறார்.அவரின் உலகநல வாழ்த்துப் பாடல் இளையராஜா இசையில் வெள்ளை ரோஜாப் படத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கிறது.

இனி தனி மனித வாழ்க்கையைப் பார்ப்போம்.

சொர்க்கம் என்பது நரகம் என்பதும் வேறங்குமில்லை.

அது இங்கே தான் இருக்கிறது.

நாம் வாழும் வாழ்வில், நமது எண்ணத்தில்,நமது விழிப்புணர்வில், நமது அறிவில்,நமது சிந்தனையில்.

எமதர்மனும் நீங்கள் தான்.ஒழுக்கநெறித் தவறினால் உங்கள் மரணத்தை நீங்களே வரவேற்கிறீர்கள்.
சித்திரகுப்தனும் நீங்களேதான் ! இயற்கைக்கும் சமுகத்திற்கும் முரணான காரியங்களையோ அல்லது நல்ல காரியங்களையோ செய்யும் போது அது பிரபஞ்சத்தில் பதிவாகி அதற்கான விளைவு, நல்லதோ ! கெட்டதோ ! உங்களுக்கோ அல்லது உங்கள் சந்ததிக்கோ ஏற்படுத்தும் அக்கவுண்டை நீங்கள் தான் பராமரிக்கிறீர்கள்.

இந்த 25 ஆயிரம் மைல் சுற்றளவுள்ள பூமியில் அனுபவிக்காத இன்பத்தை வேறெங்கும் அனுபவிக்க முடியாது. இதே பூமியில் இல்லாத துன்பத்தை வேறெங்கும் எதிர்கொள்ள முடியாது.
எல்லா கணக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது.

எண்ணம் சொல் செயல் இம்மூன்றிலும் பிறர்க்கு உடலாலோ மனதாலோ துன்பம் தராமல் வாழவேண்டும். துன்பப்டுவோருக்கு எந்த பிரதிபலனும் இன்றி நம்மால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்கிறார் வேதாத்ரி மகரிஷி.

இந்த உலகம் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கிறது.

கிரகங்களுக்குள் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்து அது நம்மை நிலைகொள்ள வைக்கிறது. அது கண்களால் காணமுடியாது.

அதே போலதான் மனிதர்களுக்குள்ளும் உள்ள ஆன்ம இணைப்பு. அது கண்ணுக்கு தெரியாவிட்டாலும், அதுதான் ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் இயக்குகிறது.

ஒரு தெரிந்த உதாரணம். இதுவும் வேதாத்ரி மகரிஷி சொன்னதுதான்.

நாம் குடிக்கும் ஒரு டீ . மதிப்பிட்டால் ஒரு ஐந்து ரூபாய் சொல்லலாம். ஆனால் அது உற்பத்தி ஆகும் இடம் தொடங்கி தயாராகி நம் கையில் உள்ள கோப்பையில் தவழும் வரை எத்தனை மனிதர்களின் உழைப்பை சுமந்து வருகிறது. அதன் மதிப்பை போட்டால் வெறும் ஐந்து ரூபாய் எனலாம்.ஆனால் அதனை உருவாக்கி நம் கைகளில் தவழவிட்டது வரை உழைத்த மக்களின் சேவையை நம்மால் மதிப்பிட முடியுமா ? ஒரு தேனிருக்கே இத்தனை உழைப்பு என்றால், நாம் அன்றாடம் அனுபவிக்கும் ஒவ்வொரு வசதி வாய்ப்புகளிலும் எத்தனை மனிதர்களின் உழைப்பு கொட்டி கிடக்கிறது. அவர்களை எல்லாம் நேரில் சந்தித்து நன்றி சொல்ல நினைத்தால் முடியுமா ? அல்லது முடிகிற விஷயம்தானா ?

இதற்கெல்லாம் ஒரே வழி, பொதுவாக உலகை நேசிப்பது. உலகை நேசித்தால் ஒவ்வொரு மனிதர்கள் மீதும் தானே நேசம் பொங்கும்.

இந்த நேசம் ஒவ்வொரு மனிதர்களிடம் வளர்ந்துவிட்டால். சொர்க்கம் நரகம் பற்றி கவலைப்படத்தேவையில்லை. செய்கின்ற செய்லகளில் தீமைகளை பதிந்துவிட்டு கோயில், குளம் என்று அலைந்தாலோ. நாம் அடிக்கும் தொகையில் பாதியை உண்டியலில் போட்டு கடவுளையும் பங்குதாரராக மாற்றிவிட்டாலோ மட்டும் சொர்க்கம் கிடைத்துவிடாது.

சொர்க்கம் என்பது ஒரு உவமை. அது நிஜமல்ல.

நரகம் என்பதும் ஒரு உவமைதான் . அதுவும் நிஜமில்லை.

ஆனால் செயல்விளைவுத் தத்துவம் என்பது உண்மை.அதற்கான வங்கி உங்கள் கருமையத்திலேயே கணக்கு தொடங்கி வைத்திருக்கிறது. உங்களின் செயல்விளைவுகள் உங்களை அறியாமலே பராமரிக்கப்படுகிறது. அதில் எப்போதும் நல்ல கணக்கை பதியும்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்க்ள்.

இதை மட்டும் கருத்தில் கொண்டால் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசலை தரிசிக்காமலே உங்கள் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும்.

இருக்கும் போதே சொர்க்கத்தை பார்க்காலாம் !

சித்திரகுப்தனின் கணக்கு புத்தகத்திற்கோ அல்லது ஐ டெஃபுக்கோ tablet க்கோ வேலையிருக்காது.

No comments:

Post a Comment

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...