Monday, May 2, 2011

குஷியாய் பெறுவோம் குவா ! குவா ! - ( 1 )

“அய்யோ …அம்மா வலி உயிர் போகுதே…..! “ அவளின் அலறல் கேட்டவுடன் வீடே கலவரக்காடானது.

“வேகமாய் போய் ஒரு ஆட்டோ புடிடா..” என்று அந்த வயதான அம்மாள் பயமுடன் பரிதவித்தாள்.

”அவ புருஷனுக்கு போனபோடு…” என்று இன்னொரு குரல் எதிரொலிக்க அவள் மரண வேதனையில் இருந்தாள்.

வலியின் வீரீயம் அவளின் உடம்பில் பரவும்போது உயிர்பிழைப்போமா என்ற பயமும்,கடவுளே யாருக்கும் ஒன்றும் ஆகக்கூடாது என்ற அச்சமும் அவள் மனதில் மேலும் ஒரு அழுத்தத்தை உண்டாக்கியது.

சர்ரென்று வந்து நின்ற ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு,நிரம்பி வழிந்த டிராபிக் சிக்னல்களைதாண்டும் போதே அவள் மேலும் வலியின் கொடுமையில் அலறத்தொடங்கினாள். ஆட்டோவின் ஹாரன் சத்தம், டிராபிக்கின் இரைச்சல்களைத் தாண்டி அவள் அலறல் குரலைக் கேட்டவர்கள் அவர்களை வினோதமாக பார்த்தபோது,அவளுக்கே வெட்கமாக இருந்து.

ஆனால் என்ன செய்யமுடியும் வலியை அனுபவிப்பது அவள்தானே.

ஆட்டோ மருத்தவமனையை அடைந்து ஒரு ஸ்டெரச்சரில் தூக்கி வைத்து, டாக்டரிடம் சேர்த்து நிம்மதி பெருமூச்சு விட்டனர் அனைவரும்.

“கடவுளே…!.தாயையும் பிள்ளையையும்….பத்திரமா காப்பாத்திக் கொடுடா சாமி.....…!” மொத்தக் குடும்பமும் நெஞ்சுருகி இஷ்டதெய்வங்களை இன்ஸ்டால்மெண்டில் வேண்டிக்கொண்டிருந்த்து.

எப்போது நல்ல செய்திவரும் என்று அனைவரும் வார்டு வாசலில் காத்திருக்க,கையில் பெரிய ஓலையுடன் வந்து குண்டைத்தூக்கி வீசினார் டாக்டர்.

’பார்வதி அட்டெண்டர் யாரு.......குடும்பம் ஆவலுடன் ஓட ஒரு அணுகுண்டை வீசினார் “…கொழந்த பொசிஷன் மாறியிருக்கு….சிசேரியன் பண்ணிதான் எடுக்கணும்....”….கவுண்டர்ல போயி….இந்த பணத்தை .....…உடனே கட்டுங்க…...பேஷண்ட்...!!! புருஷன் யாரு வாங்க இந்த பேப்பர்ல கையெழுத்துப் போடுங்க”

அவ்வளவுதான் !

உலகமே இன்னொரு பூகம்பத்தில் விழுந்து மாதிரி ஆனது கணவனுக்கு. இவ்வளவு பணத்திற்கு…..? எங்கே போவேன் நான் ?

சிடுசிடுக்கும் முடியில்லா அவனின் வழுக்கைத் தலை மேலதிகாரியிடம் மல்லுக்கட்டி பாடுபட்டால் கிடைக்கும், அவனின் ஒன்றரை மாதச் சம்பளம் அல்லவா இது.

அய்யோ கடவுளெ….ஆண்டவா……! பிள்ளைப்பெறுவது இவ்வளவு கஷ்டமா, உள்ளே அவள் அதிகரிக்கும் பேறுகால வலியில் அலறிக்கொண்டிருந்தாள்

“ இறைவா……பிள்ளைய பெத்துக்க… இவ்வளவு செலவா,,? வெளியே அவனுக்கு,முழி பிதுங்கி வெளியே வந்துவிடும்போல் இருந்து.

போதாக்குறைக்கு உறவுமுறைகளின் சுருதி மாறிக்கொண்டிருந்தது.

“அவ வயத்து புள்ளையோட மினுக்கிகிட்டு திரியும்போதே நெனைச்சேன் இப்படியெல்லாம் ஆகும்னு…எம்புள்ளை இப்படி திடுதிப்புனு பணத்துக்கு எங்கப் போவான்….” அம்மா அவனுக்கு சப்போர்ட் பண்ணுவதுபோல் அவன் மனைவியை திட்டுவது அவனுக்கு தெளிவாக புரிந்தது.

“மாசமா இருக்கும் போது சத்து பத்தா நாலு வாங்கி கொடுத்திருந்தா இப்படி ஆவுமா..” இதுதான் வாய்ப்பு என தன் மகளின் புகுந்தவீட்டை குறைகண்டனர் சற்று முன்னர் வந்த பெண்ணை பெற்றவர்கள்.

ஒருபுறம் பணம் புரட்டவேண்டும்.

இன்னொருபக்கம் புறம் காணும் சொந்தங்களை சமாளிக்க வேண்டும்.இதைவிட அவனின் காதல் மனைவியின் அலறல், அவன் நாடி நரம்பெல்லாம் ஒரு வித உதறலை தந்தது.

ஒரு அழகான மழைப்பொழுதில் காலின் கொலுசு ஜல்லியடிக்க பின்னால் வந்து அவன் கழுத்தை கட்டிக்கொண்ட அவளின் மென்மையான கரங்களும்,அவளின் உஷ்ணமான மூச்சுக்காற்றும்..அவளுக்கென அவளின் கூந்தலில் இருந்து வரும் பிரத்யோகமான மணத்தின் ரம்மியமும் ஏனோ இப்போது நினைவுக்கு வந்தது.

“கடவுளே என் தேவதைக்கு எதுவும் ஆகக்கூடாது…….! குழந்தைப் பெற்றுக்கொள்வது இவ்வளவு சவாலான விஷயமா..! அப்படியே இடிந்து ஆஸ்பத்திரி வராண்டாவில் இருந்த பிள்ளையார் சிலை முன்பு உட்கார்ந்துவிட்டான்.

இது ஏதோ தொடர்கதையின் முதல் அத்தியாயம் அல்ல…… இன்று இந்தியக் குடும்பங்களின் கணவன்மார்கள் இந்த நிலையில்தான் இருக்கின்றனர்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தீர்களானால் உங்களுக்கு கூட இந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கும்.

ஆம்…! மருத்துவ உலகம் தொழில் நுட்பத்தில் முன்னேறிவிட்டது என்று நாம் நேஞ்சை நிமிர்த்தி நிற்கும் வேளையில்,அதனை நடுத்தர சராசரி மக்கள் எதிர்கொள்ளும் விலையில் இருக்கிறதா என்று பார்த்தால்,நாம் குனிந்த தலையை நிமிர்த்த முடியாது.

குழந்தைப் பேறு என்பது ஒரு புதிய உறவின் வரவேற்பு விழா என்ற நிலை மாறி, பர்சை பதம் பார்க்கும் “கடி” விழாவாக மாறிவருகிறது.

இன்று நிகழும் பிள்ளைபிறப்பில் நூற்றில் 50% சிசேரியம் மூலம் தான் நிகழ்கிறது என்கிறது ஒரு சமூக புள்ளிவிவரம்.செலவு ஒரு புறம் என்றால் அறுவை சிகிச்சையின் போது திணிக்கப்படும் மருந்துகள் உடம்பில் தேங்கிக்கொண்டு ஆயுசு முழுவதும் உறுத்திக்கொண்டு தொடரும்.

இதற்கு என்னதான் விடிவு என்று கேட்கிறீர்களா..? தீர்வு இல்லாமல் இத்தனை பில்டப் தருவோமா என்ன..!

இந்த வலிமிகுந்த அனுபவத்திற்க்கெல்லாம் வழி அனுப்பவருகிறது புதிய மனோவசிய நுட்பம்
“ஹிப்னொபர்த்திங்” என்ற சாகசம் !

சாகசமா….என்ன அது.? என்றுதானே கேட்கிறீர்கள்.

ஆமாம்…கற்பனை செய்துபாருங்கள்..! ஒரு நிறைமாத கர்ப்பிணி ஜாலியாக வாக்கிங் சென்று ஒரு ஆஸ்பத்தியில் ஹாயாக ஜோலியை முடித்துக்கொண்டு குழந்தையுடன் திரும்புவது ஒரு சாகசம்தானே….!

அந்த சகாசம் குழந்தைப்பெற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவராலும் முடியும் “ ஹிப்னோபர்த்திங்” என்ற கலையால்.உங்களை அந்த சாகசத்திற்கு தயார் செய்வதே இந்த தொடரின் நோக்கம்.
தயாராகுங்கள் ஒரு சாகசமிக்க தாயாராக….!

-------- இதன் தொடர்ச்சி வரும் வெள்ளிக் கிழமை ( 06.05.2011 ) பதிவில்

உதவி :
டாக்டர்.சி.ஜே.ஜெயச்சந்தர்.
ஆழ்மன ஆற்றுபடுத்துதல் மனோவசிய சிகிச்சை நிபுணர்
www.basixinc.org

2 comments:

  1. உளவியல் பதிவு நன்று, ஒருமுறை kavithaigal0510.blogspot.com-தளத்திற்கு வருகை புரியலாமே!

    ReplyDelete

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...