Friday, May 20, 2011

ரஜினிகாந்திற்கு என்ன வேண்டும் !

ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் சோகமுடனும் பதட்டமுடன் இருக்கின்றனர்.

ரஜினியின் இரத்தபந்தமான சத்யநாராயணா கெய்க்வாட்டிற்கே அவரைப் பார்க்க அனுமதியில்லை. பெங்களூரில் அவர் கதறிக் கொண்டிருக்க்கிறார்.

ஊடகங்களின் நிர்பந்தத்தின் காரணமாக செய்தியாளர்களை சந்தித்த திருமதி. லதா ரஜினிகாந்த், அவர் நலமுடன் இருப்பதாக கூறுகிறார்.

எத்தனையோ சமுகப் பிரச்சனைகள் அணிவகுத்து கிடக்க, எரிகிற வீட்டில் இருப்பதை பிடுங்குவதில் குஷி காணும் இக்கால ஊடகங்கள் ஏற்கனவே மிரண்டு கிடக்கும் ரசிகர்கள் மத்தியில் விதவிதமான செய்தி பரப்பி டிஆர்பியை ஏற்றிக்கொண்டு சந்தோஷ ஜல்லியடித்துகொண்டிருக்கின்றன.

உண்மையில் ரஜினிக்கு என்ன நோய் ?

அவர் ஒருவித வைரஸால் ( EBV வகை ) பாதிக்கப்பட்டு இருப்பது உண்மை. அது இப்போது வந்த வைரஸ் அல்ல. அவரின் சிறுவயதில் ஏற்பட்ட தொற்று இப்போது வெளிப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள நம்ப தகுந்த மருத்துவ வட்டாரம் சொல்கிறது. இதன் ஆரம்ப நிலையில் மயக்கம், காய்ச்சல், வாந்தி போன்ற குறீயிடுகளைத் தரும். உள்ளுறுப்புகளை பாதிக்கும் வாய்ப்புகளும் உண்டு.அதனால் சிறுநீரக செயல்பாட்டில் சிறு தோய்வு ஏற்பட அதன் காரணமாக டயாலிஸிஸ் செய்யப்பட்டு இப்போது சீராக இயங்கத் தொடங்கியுள்ளது.ஆரம்பநிலையிலேயே கண்டறியப்பட்டு விட்டதால் கட்டுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மற்றபடி அச்சப்பட அவசியமில்லை. அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

சாதாரணமான ஒரு குடியானவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலே, அவரின் உறுவினர் ஒருவருக்கு மட்டுமே உடனிருக்க அனுமதி கிடைக்கும். அடுத்ததாக மற்ற பார்வையாளர்கள் பார்க்க ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி உண்டு. இதற்கு காரணம், வருவர்கள் மூலம் நோயாளிகளுக்கு கிருமித் தொற்றுக் கூடாது என்பதும், நோயாளிகள் மூலமாக பார்வையாளர்களுக்கு நோய் தொற்று கூடாது என்பதும் தான்.

இதனை பரபரப்பாக்குவது அவரின் எண்ணற்ற ரசிகர்களின் மனதில் ஒரு தோய்வை ஏற்படுத்தும். அந்த சோர்ந்த எண்ணங்கள் ஒன்று சேர்ந்து வலிமைப் பெறுவது நல்லதல்ல. எப்போது ஆரோக்கியமான எண்ணமும், அதனை வலிமை சேர்க்கும் முயற்சியும் நோயாளிக்கும் அவர் மீது அபிமானம் கொண்டவருக்கும் அவசியம்.

இது ரஜினிக்கு மட்டுமல்ல, சாதாரண குடியானவனுக்கும் பொருந்தும்.


சரி...ஊடகங்களின் பரபரப்பு இருக்கட்டும் !

ரஜினிக்கு இப்போது என்ன தேவை !

அவருக்கு தேவை.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி !

அதாவது ஜீவகாந்தம் பெருக்கம்.

ஜீவகாந்தம் என்பது கண்ணுக்கு தெரியாத காந்த ஆற்றல்.

உடலை ஆரோக்கியமாக செயல்பட வைக்க, ஜீவகாந்தம் அவசியம். அது உண்ணும் உணவு, மற்றும் பிரபஞ்ச வெளியில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது. தவம் செய்வதின் மூலமாக, அதீதமான வாழ்த்துக்களை மற்றவர்களிடம் இருந்து பெருவதின் மூலமாக நம் உடலில் ஜீவகாந்த அதிகரிக்கும்.

உடல் நோய்வாய்ப்படும் போது பிரபஞ்சத்தில் இருந்து ஜீவகாந்த சக்தியை கிரகிக்க தடுமாறுகிறது.

உடலில் ஜீவகாந்தம் குறைந்தால் உடல் நலம் பாதிக்கும்.ரஜியின் உடலில் ஜீவகாந்தப் பெருக்கத்தை மருந்து மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் நலக் கோளாறை சரிசெய்ய மருத்துவக் குழுவினர் செயல்ப்பட்டு வருகின்றனர்.ரஜினி யோகமுறைகள் அறிந்தவர். தானே தன் எண்ணத்தின் மூலம் சரி செய்யும் முயற்சியில் இப்போது ஈடுப்பட்டுக் கொண்டிருப்பார்.

அவரின் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில்,நாம் நமது வழியில் எண்ணத்தின் வாயிலாக ஜீவகாந்த திணிவை அவருக்கு தர முயற்சிப்போம்.

வாழ்த்துக்கள் மூலமாக எதையும் சாதிக்க முடியும் என்கிறார். வேதாத்ரி மகரிஷி.

பதட்டப்படுவதைவிட, கவலைக் கொள்வதைவிட,இந்த சிறு முயற்சி வலிமை சேர்க்கும்.

எப்படி ?

மிகவும் எளிது ?

பிராத்தனை மற்றும் வாழ்த்துக்களால் முடியும்.

பிரார்த்தனை என்பது ஒரு Metaphor. ஆனால் வாழ்த்து என்பது ஒரு உளவியல் பயிற்சி.

பிரார்த்தனையில் இன்னொரு சக்தியின் மீது எண்ணத்தை செலுத்துவதின் மூலம் உங்கள் எண்ண ஆற்றலை செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறீர்கள். வாழ்த்துவதின் மூலம் நீங்களே உங்கள் எண்ணத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். பதட்டப் படாமல் ! வருத்தப்படாமல் ஒரு இடத்தில் அமைதியாக உட்காருங்கள். அது பூஜை அறையாகவும் இருக்கலாம். படுக்கை அறையாகவும் இருக்கலாம். முக்கிய அமைதி !

கண்களை மென்மையாக மூடிக்கொள்ளுங்கள்.

எண்ணத்தை இரு புருவங்களின் மத்தியில் முடிந்தவரை கொண்டு வாருங்கள்.
இப்போது உணருங்கள்.

அமைதி ! அமைதி ! அமைதி !

நீங்கள் உட்கார்ந்து இருக்கும் சுற்றமும் சூழலும் அமைதியில் இருப்பதை உணருங்கள்.
உங்களை சுற்றி ஒரு தெய்வீக சக்தி சூழ்ந்து இருப்பதாக உணருங்கள். அந்த சக்தி உங்கள் உடலில் பாய்வதாக இப்போது உணர்கிறீர்கள்.அந்த சக்தியின் ஊடே நீங்கள் ஒன்றன, உயிர்கலப்பு பெற்று இருக்கிறீர்கள்.

உங்களைச் சுற்றி தூய்மைப் பெறுகிறது.

உங்களைச் சுற்றி வலிமை பெறுகிறது.

இப்போது உங்கள் மூச்சு காற்றையே சிரமமின்றி கவனியுங்கள்.

இவ்வாறு ஒரு மூன்று நிமிடங்கள் உங்கள் மூச்சுக்காற்றையே கவனியுங்கள்.

அதற்காக மூச்சுகாற்றை வலிமையாக இழுக்கவோ, அழுத்தம் கொடுக்கவோ கூடாது.
மிக மென்மையாக கவனியுங்கள். அது மட்டும் போதும்.

இப்போது எண்களை எண்ணுங்கள்.

100
99
98
97
96
95
94
93
92
90
80
70
என்று ஒவ்வொரு எண்ணாக ஒன்று வரை எண்ணுங்கள்.

ஒன்று வரும்போது நீங்கள் கொஞ்சம் அரைத்தூக்கத்தில் அல்லது மயக்கத்தில் இருப்பீர்கள். உங்கள் எண்ண அலைச்சூழல் சுருங்கி மிகவும் கூர்மையாக இருக்கும்.

இப்போது நீங்கள் பிரபஞ்சவெளியில் மிதப்பதாக கற்பனையில் உணருங்கள்.

உங்களைச் சுற்றி ஆற்றல் களம் சூழ்ந்து கொண்டுள்ளது.

அந்த ஆற்றலில் நீங்கள் மிதந்துகொண்டுள்ளீர்கள்.

உங்கள் உடலில் அதீத சக்தி நிரம்பி வழிகிறது.

உடலில் இன்ப ஊற்றும். மனதில் அதீத அமைதியும் நிரம்பி வழிறது.

இப்போது ரஜினி அவர்களின் உருவத்தை கற்பனையில் கொண்டு வாருங்கள்.

உங்களுக்கு பிடித்தமான ரஜினியின் உருவம்.

உங்களுக்கு விருப்பமான உருவம்.

இப்போது ரஜின் உங்கள் முன்பு அமர்ந்து இருக்கிறார்.

நீங்கள் ரஜின் முன்பு அமர்ந்து இருக்கிறீர்கள்.

மிக வலிமையாக கற்பனை செய்யுங்கள்.

ரஜினியும் நீங்களும் எதிர் எதிரே உட்கார்ந்து இருக்கிறீர்கள்.

அதே நிலையில் பிரபஞ்சத்தை கற்பனையில் கொண்டு வாருங்கள்.

பிரபஞ்சம் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்களின் தொகுப்பு.

பிரபஞ்சத்தில் ஒரு வெண்மை ஒளியை உண்டாக்குங்கள்.

கற்பனையில் தான் ! ஆனால் ஒரு நிஜமான ஒளி பிரபஞ்சத்தில் உருவாகிறது.

கண்களை கூசச் செய்கிறது அந்த ஒளி.

அந்த வெண்மையான ஒளியை ஒரு பந்துபோல் உருட்டி உங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு
வாருங்கள்.

இப்போது அந்த ஒளி உங்கள் கட்டுப்பாட்டுக்கு வருகிறது.

அதனை அப்படியே ரஜினியின் உடலில் பாய்ச்சுங்கள்.

ரஜினியின் உடலில் ஆற்றல் பாயட்டும்
அவரின் உடலில் உள்ள நோய் தீரட்டும் !

ரஜினியின் உடலில் ஆற்றல் பாயட்டும் !
அவரின் உடலில் உள்ள நோய் தீரட்டும் !

ரஜினியின் உடலில் ஆற்றல் பாயட்டும் !
அவரின் உடலில் உள்ள நோய் தீரட்டும் !

அந்த வெண்மை நிற ஒளி, ரஜினியின் உடலில் உள்ள நோய் குறியீட்டை உடலில் இருந்து அப்புறப்படுத்தி பிரபஞ்சத்தோடு பிரபஞ்சமாக கலந்து கரைவதாக உங்கள் கற்பனையை முடித்துக் கொள்ளுங்கள்.ஒரு பாவனையில் உங்கள் எண்ணத்தினால் ஒரு சங்கல்பத்தை சொல்லுங்கள்.
கற்பனையில் ரஜினி அவர்களின் நோய் தீருவதாக, அவர் நலம் பெறுவதாக உணருங்கள்.

இதோ அவர் நலம் பெறுகிறார்.

இதோ அவர் உற்சாகம் பெறுகிறார்.

இதோ ரஜினி ஆரோக்கியமாக புத்துணர்வோடு எழுந்து வருகிறார்.

நீங்கள் விரும்பும் வகையில் ரஜினியின் புத்துணர்வை உணருங்கள்,

இப்போது அந்த காட்சியை சில நிமிடங்கள் அனுபவியுங்கள்.
இப்போது வாழ்த்துலகில் இருந்து வெளியே வருகிறோம்.

பத்தில் இருந்து ஒன்று எண்ணுகிறோம்.

ஒன்று எனும் போது பிரபஞ்சவெளியில் இருந்து நாம் தவம் செய்யும் அறைக்கு வருகிறோம்.
நம்மை சுற்றி ஆற்றல் நம் உடலில் பரவுகிறது.

அந்த ஆற்றலை நம் உடலில் பெருக்கிக் கொண்டு கைகளால் மென்மையாக கண்களில் ஒத்து,லேசாக கண்களைத் திறந்து வாழ்த்து மற்றும் தவத்தை முடித்துக் கொள்வோம்.

இது ரஜினிக்கு மட்டுமல்ல.
உற்றார், உறவினர் மற்றும் யார் எங்கிருந்தாலும் அவர்களுக்கு இத்தகைய எண்ண ஆற்றலை

பெருக்குவதின் மூலம் வாழ்த்து சொல்லலாம்.

பெங்களுரில் பேசிக்ஸ் என்னும் பெயரில் ஹிப்னோதெரபி பள்ளி நடத்தி வரும் உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தரிடம் ஹிப்னோதெரபி படித்த போது அவர் சொல்லித தந்த self hypnosis நுட்ப பயிற்சியில் இது ஒரு வகை.

இது ஒரு வலிமையான உளவியல் பயிற்சி !

இதில் மாயமும் இல்லை ! மந்திரமுமில்லை 1

செய்து பாருங்கள்

பலன் நிச்சயம்.

Tuesday, May 10, 2011

சொர்க்கவாசலும் சித்திரகுப்தனின் i-tab ம்

சொர்க்கம் எது ? நரகம் எது ?

எனது சொந்த பாட்டிமார்களை நான் பார்த்தது இல்லை.

பாவம் அவர்கள் ! நான் பிறக்கும் முன்பே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அவரவர் செயல் விளவுக்கு ஏற்ப இடம் பிடித்து சென்று விட்டார்கள்.

ஆனால் என் அதிர்ஷ்டம் ! என் அம்மாவின் பாட்டியை நான் பார்த்து இருக்கிறேன். என் அம்மாவின் அம்மாவுக்கு அம்மா. என் அம்மாவின் அம்மம்மா ! எனக்கு அம்மம்மம்மம்மா.....அட கொள்ளு பாட்டிங்க ! விசாலாட்சி என்று பேர்.

கொஞ்சம் ரொமண்டிக்கா விசாலி !

நான் தான் விசாலாட்சியின் ஒரே கொள்ளுபேரன்.அதனால் அவருக்கு என் மீது கொள்ளைப் பிரியம்.

அவர்தான் எனக்கு எமராஜன் கதையை சொன்னார்.

நான் பிறந்து சில வருடங்களே தான் ஆகியிருந்தன. விசாலிக்கு இந்த பூமியில் வாழும் வாய்ப்பு சில வருடங்கள் தான் இருந்தன. இந்த பூமிக்கு வாழ வந்த பச்சபிள்ளைக்கு பாட்டி சொன்ன கதை எமனின் திருவிளையாடல்.

வாழ்க்கையின் இறுதியில் இருந்த விசாலிக்கு !பாவம் எப்போதும் மரண பயம் இருந்திருக்க வேண்டும். எனக்கு பால் சோறூட்டும் வாய்ப்புகளில் சொல்லும் கதைகளில் கூட எமதர்மன் எப்போது “ Propose “ பண்ணுவார் என்ற நினைப்பு அவருக்கு.

எமதர்மராஜன் ஒரு பனைமர உயரத்திற்கு இருப்பார். இந்த வீடு உயர பெரிய எருமை மாட்டின் மீது வருவார். அவர் கையில் ஒரு பெரிய பாசக்கயிறு இருக்கும். அந்த கயிற்றை வீசிதான் மனிதர்களின் உயிரை எடுப்பார் என்று அவர் சொல்லும் போதே எனக்கு பயத்தில் பாதி சாப்பாடு உள்ளே இறங்கிவிடும்.

சாப்பிட்ட பின் இரவு தூக்கத்தில் எமதர்மராஜன் வர, நான் அலறிக் கொண்டு எழ, அதற்கும் அந்த பாட்டி இரவில் முனி வந்து பிள்ளையை மிரட்டுகிறது என்று மறுநாள் எருக்கை என்னும் மரநாரில் செய்த தாயத்தையோ அல்லது புங்கை காய் தாயத்தையோ இடுப்பில் கட்டிவிடும். பலநேரங்களில் புரண்டு படுக்கும்போது தாயத்தின் கூர்மை இடுப்பில் குத்த, வலியின் அந்த சிணுங்களுக்கும், யட்சினை வந்து பிள்ளையை மிரட்டுவதாக, நாலு வீட்டு ஓலை எடுத்து அதனில் என்னை துப்பச் சொல்லி அடுப்பில் எரிக்கும்.

எனக்கு பாட்டியின் கையில் துப்புவதிலும், அந்த ஓலை அடுப்பில் படபடவென சத்தம் போட்டு எரிவதையும் பார்ப்பதில் ரொம்ப இஷ்டம்.என் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு காரணமோ, கதையோ விசாலியிடம் இருந்து வெளிப்படும்.


விசாலிக்கு என் மீது பிரியம்.

நெடுநாள் நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்த காலங்களில் நான் பள்ளி மாணவனாகிவிட்டேன். பள்ளி விட்டதும் மாலையில் சென்று பாட்டி பக்கத்தில் உட்கார்ந்து ஏதேனும் பேசுவார்களா என்று பார்ப்பேன்.

ஒருநாள் என் மாமா மதியமே பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.பாட்டியை சுத்தி சொந்தபந்தங்கள்.பாட்டியைப் பார்த்தேன், நெஞ்சுக் கூடு ஏறி இறங்கி மூச்சு முட்டிக் கொண்டிருந்தார்.ஒத்தை ரூபாயை கல்லில் இழைத்து பாலில் கலந்து பாட்டியின் வாயில் ஊத்தச் சொன்னார்கள். கையும் நடுங்க உதடுகள் சிணுங்க, கண்களில் நீர் துளிர்க்க அவ்வாறு ஊற்றினேன். நான் பால் ஊற்றிய சில நிமிடங்களிலேயே பாட்டியின் உயிர்துடிப்பு அடங்கிவிட்டது. என்னை அதிர்ஷ்டக்காரன் என்றார் என் பெரியப்பா. பாட்டியின் உயிர் என் மேல் தான் இருந்தது என்று பெருமைபட்டார்கள்.பாட்டிக்கு என் மேல்தான் அதிக பாசம் என்றார்கள்.

எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அதைவிட பெரிதாக சந்தேகம் வந்தது. பாட்டியை கொன்றது நானா ? எமதர்மனா ?

எமதர்மன் வரவில்லை பாசக்கயிற்றை வீசவில்லை ! பாட்டி எப்படி இறந்து போனாள் ? பிறகு என் பெரியப்பாவிடம் சந்தேகம் கேட்டபோது இன்னும் சில கிளைக் கதைகள் கிடைத்தன.

பெரியப்பா சொன்னார், எமதர்மன் நம் கண்ணுக்கு தெரியமாட்டார். உயிரை விடுபவர்களுக்கு மட்டுமே தெரிவார். அப்படி உயிரை எடுத்து எருமையில் உட்கார வைத்து கொண்டு எமலோகம் செல்வானாம். அங்கு சித்திரகுப்தன் என்பவன், இறந்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி கணக்கு பார்ப்பானாம். பூமியில் நல்லது செய்து வாழ்ந்திருந்தால் அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்.

சொர்க்கத்தில் தேவக்குமாரிகள் வரவேற்று, பன்னீரில் ரோஜாப்பூக்களை விட்டு குளிப்பாட்டி, யானைத் தந்த சீப்பில் தலைவாரி,உடல் முழுவதும் சந்தனமும் அத்தரும் பூசி,தினம் தினம் புதிய உடையளித்து, அறுசுவை உணவளித்து, வெள்ளி தாம்பலத்தில் வெத்திலை,பாக்கு, கும்பக்கோணம் சீவல் வைத்து உபசரித்து,தங்கத்தில் தகதகக்கும் அரண்மனையில்,பட்டு மெத்தையில் தூங்க வைப்பார்களாம். வாழ்நாள் முழுவதும் அங்கு அவர்கள் சந்தோஷமாக இருக்கலாமாம்.

சித்திரகுப்தனின் கணக்கில் கெட்டவனாக வாழ்ந்து பாவியாக இருந்தால்,அவர்களை நரகத்தில் தள்ளிவிடுவார்களாம். அங்கு பாம்பும் பூராணும் ஊறுமாம்,பல்லி வந்து கடிக்குமாம், எரியும் நெருப்பில் எண்ணெய் கொப்பரை இட்டு அதில் குளிக்க வைப்பார்களாம், குஷ்டம் பிடித்த பெண்கள் வந்து வரவேற்றும்,ஆய்...?!!! கிணற்றில் குளிப்பாட்டி.....இன்னும்...இன்னும் எழுதமுடியாத தண்டனைகளை எல்லாம் தருவானாம்.பிறகு வாழ்நாள் முழுவதும் நரகவாழ்க்கைதான் வாழவேண்டுமாம்.

இப்போது எமதர்ம மகாராஜாவை விட சித்திரகுப்தனின் கணக்கு புத்தகத்தின் மீது எனக்கு அதிகம் பயம் வந்தது.

இந்த எமதர்மனின் கதையை நான் பெரியவனான பின்னும் நெடுநாட்கள் நம்பிக்கொண்டிருந்தேன். என் தந்தை இறந்தபின்பு முதல் முறையாக சுடுகாடு பார்த்தேன். எரித்துவிட்டு திரும்பிய பின் எதிர்வீட்டு துரைசாமி தாத்தா என் தந்தையை எமதர்மன் அழைத்துபோனதை பார்த்தேன் என்றார். எமதர்மன் தனது எருமை வாகனத்தின் பின் ஒரு பளபளக்கும் தங்க பல்லக்கில் உட்காரவைத்து அழைத்து போனான் என்றார். சுற்றி அழுது முடித்திருந்த பெண்கள் எல்லாரும் என் தந்தையை புண்ணியவான் என்றார்கள். என் அம்மா கல்லூரிவரை படித்த சமுகநலத்துறை ஊழியராக இருந்தாலும்,அவரின் அறிவுக்கு கூட துரைசாமித் தாத்தாவின் வர்ணனை ஏனோ பிடித்து இருந்தது.எனக்கு கூட அப்பாவை இழந்த சோகத்தையும் மீறி அவர் மீது ஒரு ஹீரோயிசம் தோன்றியது.

இந்த நம்பிக்கைகள் எல்லாம் இறைஞான வகுப்புகளில் கலந்துகொள்ளும் வரைதான்.

கடவுள் யார் ? ஏன் இந்த நம்பிக்கைகள் என்று படிபடியாக உணர ஆரம்பித்தவுடன் எனக்கு சித்திரகுப்தன் பற்றி பயமில்லை. ஆனால் இந்த கதை எதற்கு. காலம் காலமாக இவ்வாறாக சொல்லப்பட்டு வரும் நம்பிக்கைகள் எதற்காக ?

மனிதவாழ்க்கையை செம்மையாக்கவும், ஒருவர் மீது ஒருவர் நேசத்தைக் பரிமாறிக்கொள்ளவும்,முடிந்தவரை மற்றவர்க்கு துன்பம் தராமல் வாழவேண்டும் என்பது தான் இந்த பாமர கதை சொல்லிகளின் வாழையடி வாழையாக வரும் கதைகளின் நோக்கம்.

இதை மிக எளிமையாக செயல் விளைவுத் தத்துவம் ( Cause and effect ) என்று விளக்குகிறார் வேதாத்ரி மகரிஷி.

சொர்க்கம் என்பது என்ன ? நரகம் என்பது என்ன ?

எமதர்மன் வருகிறானோ இல்லையோ ? சித்திரகுப்தன் கணக்கெடுக்கிறானோ இல்லையோ ? அது நம்பிக்கை. ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்கான விளைவுகளை தந்தே தீரும். இது உண்மை.

இது எப்படி செயல்படுகிறது. ஒவ்வொரு மனிதனின் செயல்களையும் யார் பதிவு செய்கிறார்கள். சித்திரகுப்தன் என்று ஒருவன் இருந்தாலும். அவன் கணக்கு புத்தகத்தை தூக்கி எறிந்துவிட்டு நவீனகாலத்திற்கேறப ஒரு ஐ டேஃபை வைத்துக்கொண்டு, மிகப் பெரிய சர்வரில் உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஃபைல் போட்டு பராமரித்தாலும், அதற்கான விளைவுகளை எப்படி சரியாக தரமுடியும் ?

இது பொதுவான கேள்விதான்.

சித்ரகுப்தன் கற்பனைபாத்திரமெனில் இப்போது பாவபுண்ணியங்களை பட்டியலிட்டு செயல்படுத்துவது எது ?

உலகில் இரண்டே செயல்கள்தான்.

ஒன்று நன்மை தருவது. இரண்டு தீமை தருவது.

இது தனிமனிதனுக்கும் இருக்கலாம்.அல்லது சமுகத்திற்கும் இருக்கலாம்.

இது தனிமனிதனாலும் நிகழலாம்.சமுகத்தாலும் நிகழலாம்.

பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன ? ஈர்ப்புசக்தி அல்லது கிரகித்தல்.

இது உந்துதல் மற்றும் அழுத்தம்.

சுருக்கமாக காந்தம் என்கிறார் வேதாத்ரி மகரிஷி.

காந்தத்தின் தன்மை என்ன ?

எதனையும் ஈர்த்துக்கொள்வது.

நாம் செய்யும் செயல்கள் யாவும் காந்த அலையாக மாறி பிரபஞ்சத்தில் பதிகிறது. பின்னர் அதே பதிவுகள் மன அலைசூழலுக்கேற்ப நமது அறிவில் இணைந்து செயல்படுகிறது. இது ஒரு வகை.
நாம் செயல்கள யாவும் நமது கருமையத்தில் பதிந்து நமது அடுத்த தலைமுறையினரிடம் சென்று வெளிப்படுவது இது இன்னொரு வகை.

பல்வேறு எண்ணங்கள் ஒன்று கூடி பிரபஞ்சத்தில் பதிந்து வலிமைபெற்று,அதே ஒத்த அலைவரிசையுடைய எண்ணங்களில் கலந்து அறிவாக வெளிப்படுவது.இது மற்றொரு வகை.

இவையாவும் காந்த தத்துவமே.

காந்தி தாத்தா இதை மூன்று குரங்குகளை வைத்து அருமையாக சொன்னார்.

கெட்டதை பேசாதே !

கெட்டதைப் பார்க்கதே !

கெட்டதை செய்யாதே !

இந்த உலகம் முழுவதும் சுமார் 700 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

ஒவ்வொரு மக்களுக்கும் ஒரு தனிப்பட்ட எண்ணம் உண்டு.

ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒரு தனிப்பட்ட சிந்தனை உண்டு.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனிப்பட்ட லட்சியம் உண்டு.

இவ்வாறு தனித்து தனித்து நினைக்கும்போது தான் பிரிவினைகள் ஏற்படுகின்றன.

இந்த பூமி வெறும் 25 ஆயிரம் மைல் சுற்றளவு உள்ளது.

இதில்தான் இந்த 700 கோடி மக்களும் வசிக்கவேண்டும்.

இந்த பூமியில் விளையும் எல்லா வளங்களும் எல்லாருக்கும் சொந்தமானது. எல்லைக்கட்டி நிற்கும் போதும்,பதுக்கும்போதும், பிறர்க்கு தேவையிருக்க, தேவையில்லாமல் இருப்பு கொள்வதும் தான் உலக அமைதி சீர்கேட்டிற்கு காரணம்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு.இதில் ஏற்படவேண்டும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசியப்பாடல் உள்ளது. அதுபோல் உலகம் முழுவதற்கும் இயற்கையை போற்றி ஒரு பொதுவான வாழ்த்துப்பாடல் வேண்டும். ஒரே கருத்துள்ள இப்பாடலை அவரவர் மொழியில் மொழிபெயர்த்து தினமும் ஒருமுறை, கோயில்கள், தேவலாயங்கள், இறைவழிப்பாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், மக்கள் கூடுமிடங்கள், நிகழ்ச்சிகள் என எங்கெங்கும் பாடும் போது ஒரு சக்தி மிகு ஒருமித்த சிந்தனை கிளர்ந்தெழும்.

இவ்வாறு செய்யும் போது நாளடைவில் இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ள கெட்ட அலையியக்கத்தை மாற்றி நல்வாழ்வுக்கான அலையிக்கமாக பதிவு செய்துவிடலாம்.

வேதாத்ரி மகரிஷி இதனை ஐம்பது வருடத்திற்கு முன்பு செய்திருக்கிறார்.அவரின் உலகநல வாழ்த்துப் பாடல் இளையராஜா இசையில் வெள்ளை ரோஜாப் படத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கிறது.

இனி தனி மனித வாழ்க்கையைப் பார்ப்போம்.

சொர்க்கம் என்பது நரகம் என்பதும் வேறங்குமில்லை.

அது இங்கே தான் இருக்கிறது.

நாம் வாழும் வாழ்வில், நமது எண்ணத்தில்,நமது விழிப்புணர்வில், நமது அறிவில்,நமது சிந்தனையில்.

எமதர்மனும் நீங்கள் தான்.ஒழுக்கநெறித் தவறினால் உங்கள் மரணத்தை நீங்களே வரவேற்கிறீர்கள்.
சித்திரகுப்தனும் நீங்களேதான் ! இயற்கைக்கும் சமுகத்திற்கும் முரணான காரியங்களையோ அல்லது நல்ல காரியங்களையோ செய்யும் போது அது பிரபஞ்சத்தில் பதிவாகி அதற்கான விளைவு, நல்லதோ ! கெட்டதோ ! உங்களுக்கோ அல்லது உங்கள் சந்ததிக்கோ ஏற்படுத்தும் அக்கவுண்டை நீங்கள் தான் பராமரிக்கிறீர்கள்.

இந்த 25 ஆயிரம் மைல் சுற்றளவுள்ள பூமியில் அனுபவிக்காத இன்பத்தை வேறெங்கும் அனுபவிக்க முடியாது. இதே பூமியில் இல்லாத துன்பத்தை வேறெங்கும் எதிர்கொள்ள முடியாது.
எல்லா கணக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது.

எண்ணம் சொல் செயல் இம்மூன்றிலும் பிறர்க்கு உடலாலோ மனதாலோ துன்பம் தராமல் வாழவேண்டும். துன்பப்டுவோருக்கு எந்த பிரதிபலனும் இன்றி நம்மால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்கிறார் வேதாத்ரி மகரிஷி.

இந்த உலகம் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கிறது.

கிரகங்களுக்குள் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்து அது நம்மை நிலைகொள்ள வைக்கிறது. அது கண்களால் காணமுடியாது.

அதே போலதான் மனிதர்களுக்குள்ளும் உள்ள ஆன்ம இணைப்பு. அது கண்ணுக்கு தெரியாவிட்டாலும், அதுதான் ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் இயக்குகிறது.

ஒரு தெரிந்த உதாரணம். இதுவும் வேதாத்ரி மகரிஷி சொன்னதுதான்.

நாம் குடிக்கும் ஒரு டீ . மதிப்பிட்டால் ஒரு ஐந்து ரூபாய் சொல்லலாம். ஆனால் அது உற்பத்தி ஆகும் இடம் தொடங்கி தயாராகி நம் கையில் உள்ள கோப்பையில் தவழும் வரை எத்தனை மனிதர்களின் உழைப்பை சுமந்து வருகிறது. அதன் மதிப்பை போட்டால் வெறும் ஐந்து ரூபாய் எனலாம்.ஆனால் அதனை உருவாக்கி நம் கைகளில் தவழவிட்டது வரை உழைத்த மக்களின் சேவையை நம்மால் மதிப்பிட முடியுமா ? ஒரு தேனிருக்கே இத்தனை உழைப்பு என்றால், நாம் அன்றாடம் அனுபவிக்கும் ஒவ்வொரு வசதி வாய்ப்புகளிலும் எத்தனை மனிதர்களின் உழைப்பு கொட்டி கிடக்கிறது. அவர்களை எல்லாம் நேரில் சந்தித்து நன்றி சொல்ல நினைத்தால் முடியுமா ? அல்லது முடிகிற விஷயம்தானா ?

இதற்கெல்லாம் ஒரே வழி, பொதுவாக உலகை நேசிப்பது. உலகை நேசித்தால் ஒவ்வொரு மனிதர்கள் மீதும் தானே நேசம் பொங்கும்.

இந்த நேசம் ஒவ்வொரு மனிதர்களிடம் வளர்ந்துவிட்டால். சொர்க்கம் நரகம் பற்றி கவலைப்படத்தேவையில்லை. செய்கின்ற செய்லகளில் தீமைகளை பதிந்துவிட்டு கோயில், குளம் என்று அலைந்தாலோ. நாம் அடிக்கும் தொகையில் பாதியை உண்டியலில் போட்டு கடவுளையும் பங்குதாரராக மாற்றிவிட்டாலோ மட்டும் சொர்க்கம் கிடைத்துவிடாது.

சொர்க்கம் என்பது ஒரு உவமை. அது நிஜமல்ல.

நரகம் என்பதும் ஒரு உவமைதான் . அதுவும் நிஜமில்லை.

ஆனால் செயல்விளைவுத் தத்துவம் என்பது உண்மை.அதற்கான வங்கி உங்கள் கருமையத்திலேயே கணக்கு தொடங்கி வைத்திருக்கிறது. உங்களின் செயல்விளைவுகள் உங்களை அறியாமலே பராமரிக்கப்படுகிறது. அதில் எப்போதும் நல்ல கணக்கை பதியும்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்க்ள்.

இதை மட்டும் கருத்தில் கொண்டால் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசலை தரிசிக்காமலே உங்கள் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும்.

இருக்கும் போதே சொர்க்கத்தை பார்க்காலாம் !

சித்திரகுப்தனின் கணக்கு புத்தகத்திற்கோ அல்லது ஐ டெஃபுக்கோ tablet க்கோ வேலையிருக்காது.

Saturday, May 7, 2011

குஷியாய் பெறுவோம் குவா ! குவா ! - ( 2 )

அது என்ன ஹிப்னோபர்த்திங்…!

புதுசா இருக்கே என்ற கேள்வி எழுகிறதா?

சிலர் அவசர அவசரமாக இணையதளத்தில் தகவல் அறிய தேடும் உங்களின் ஆர்வமும் புரிகிறது.

ஹிப்னோபர்த்திங் பற்றித் தெரிந்துக்கொள்ளவேண்டுமெனில் நாம் ஹிப்னாடிசம் பற்றியும் சற்று தெளிவுபெறுவேண்டும்.

அட…! ஹிப்னாடிசமா ? தெரியுமே….! “அந்நியன்” படத்தில் மல்டிபிள் பெர்சனாலிட்டி நோயாளியான விக்ரமை வசப்படுத்தி நாசர் உண்மையை வரவழைப்பாரே அதானே… என்கிறீர்களா ? நீங்கள் சொல்வது மிகவும் சரிதான்.

அது தான் ஹிப்னாடிசம். அதே மனோவசிய கலை சற்று விரிவடைந்து புதிய நுட்பங்களுடன், ஹிப்னோதெரபி எனும் சிகிச்சைமுறையாக மனோத்துவ உலகில் புதிய சாதனைப் படைத்து வருகிறது.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?,நமது உடலில் ஏற்படும் பெரும்பான்மையான நோய்கள் காரணமாக இருப்பது நம் மனம்தான். மனோரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் கவனிக்கப்படாமல் போகும்போது அது உடல்ரீதியான நோய்களாக மாறுகிறது.

உதாரணமாக ஒருவருக்கு சிறு தலைவலி ஏற்படுகிறது. முதலில் வீட்டு வைத்தியம் பார்க்கிறார், குறையவில்லை. பின்னர் அருகில் உள்ள மருந்துக்கடையில் ஏதோ ஒரு மருந்து வாங்கி சாப்பிடுகிறார். வலி நிற்கிறத்!

அப்பாடா..! என்று உட்கார்ந்தால் லிமிடேட் ஸ்டாப் சர்வீஸ் பஸ் மாதிரி திரும்பவும் தலைவலி.அவர் கொஞ்சம் சீரியசாக யோசிக்கிறார். ஏன் ஒரு டாக்டரை பார்க்க கூடாது.

“தலைவலின்னு சும்மா விட்டுடக்கூடாதுப்பா….இப்படி தான் நம்ம காரைவீட்டு கனகத்துக்கு தலைவலி அடிக்கடி வருமாம்…..அவ கண்டுக்காம விட்டுட்டா, இப்ப என்னடான்னா அது பிரைன் கேன்சர்ல வந்து நிக்குது”

ஊர் வாய் வந்தது வியாக்யாணம் என்று பேச,கேட்டவர்க்கு தந்தி அடிக்கிறது.அவரை அறியாமலே அவரின் ஆழ்மனதில் தனக்கு அதுமாதிரி ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயத்தை பதிவாக ஏற்படுத்திக்கொள்கிறார்.

லீவு போட்டுவிட்டு பிக்னிக் போவது போல கட்டுசாதம் கட்டிக்கொண்டு மருத்துவமனை சென்று காத்திருந்து,பல பரிசோதனைகளை செய்து,பர்சிலும் வங்கியிலும் உள்ள சேமிப்புகளை கரைத்து, மருத்துவ பரிசோதனை அறிக்கையை வாங்கி பார்த்தால் ஒண்ணுமில்லை !

என்ன்ணா இது..! இவ்வளவு செலவுப்பண்ணி ஒண்ணுமில்லேனுட்டானே…!” மனைவி கவலைப்பட, “ ஏண்டி….! செலவுபண்ணதுக்காக எனக்கு நோய் இருக்குனுமா.. என்ன ?” என்று கணவன் அலற, கட்டைபிரேம் கண்ணாடி போட்ட டாக்டருக்கே கொஞ்சம் குழப்பம்தான்.

“ஒண்ணு பண்ணுங்க சார்…!” சின்னதா ஒரு டெஸ்ட் பண்ணி,ஒரு சின்னக்கண்ணாடிப் போட்டுக்குங்க….நான் நெனைக்கிறன்….கொஞ்சம் கண்பார்வை கோளாறாலேயும் தலைவலி வரலாம்..அப்படியே இந்த மருந்தும் ஒரு கோர்ஸ் சாப்பிடுங்க “ என்று பில்லடிக்கிறார்.

அப்படி இப்படியென நிற்காத தலைவலியுடன், அடுத்த மருத்துவ பில்லுக்கு பயந்து சிகிச்சையை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும்போது,ஒருநாள் வாய்மொழியாய் கேள்விப்பட்டு ஹிப்னோ சிகிச்சைக்கு போகிறார் அவர்.

ஆழ்நிலைக்கு கொண்டு சென்றதில்,இரண்டு வருடம் முன்பு அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம், அவருக்கு “மன அழுத்தமாக” பதிந்து இருப்பதைக் கண்டறிகிறார் சிகிச்சையாளர்,அதே ஆழ்நிலையில் வைத்து.சில நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை கோர்வையாக அவர் ஆழ்மனதில் பதியசெய்து அந்த மன அழுத்தத்தை நீக்குகிறார் சிகிச்சையாளர்.சில நிமிடங்கள்தான் இவர் இயல்புநிலைக்கு வந்து கண்வழித்தால்,தலைவலி போன இடம் தெரியவில்லை. போயே….போச்சு !

உடல் ரீதியான நோய்க்கு கண்டிப்பாக அதற்குரிய சிகிச்சை எடுத்தே தீரவேண்டும். ஆனால் பல உடலியல் பிரச்சனைகளுக்கு மனோரீத்யான சிகிச்சை அல்லது ஒரு பயிற்சி முறை தேவை.

தலைவலி, மன அழுத்தம்தான் என்றில்லை, நாள்பட்ட எந்தவித நோய்க்கும் மனரீதியான காரணங்கள் இருப்பதுதான் உண்மை. நாம் எப்படி ஆறுமாதத்திற்கு ஒருமுறை மருத்துவ உடல் பரிசோதனை செய்துகொள்கிறோமோ, அதேபோல் மனப்பரிசோதனை செய்துகொண்டால் வாழலாம் வளமுடன் !

” என்ன சார்..அப்ப எங்க எல்லாரையும் மெண்டல் என்கிறீர்களா ? சைக்ரியாடிஸ்ட்கிட்ட போக சொல்றீங்க ? “ உங்களின் வினா கேட்கிறது.

இது சைக்ரியாட்ரி அல்ல,சைக்கோதெரபி.

சைக்ரியாட்ரி வேறு,சைக்காலஜி வேறு,சைக்கோதெரபி வேறு.மற்ற இரண்டையும்விட சைக்கோதெரபியின் சிகிச்சைமுறை முற்றிலும் மாறுப்பட்டது. சைக்கோதெரபியின் வலிமயான சிகிச்சை முறைதான் ஹிப்னோதெரபி. வலியில்லாத,வளவளவென அறிவுரைகளில்லாத மருந்தில்லாத மகாமருத்துவ சிகிச்சைமுறைதான் ஹிப்னோதெரபி.

ஹிப்னோதெரபி பற்றி நன்றாக தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் கண்டிப்பா “மனம்” பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

என்னங்க…….. ஹிப்னோ பர்த்திங்ள ஆரம்பிச்சு ஹிப்னோதெரபியில் நிறுத்தினீங்க,இப்ப மனம் பற்றி பேசலாம்னு சொல்றீங்க.

மனம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்கும்போது, அதப்பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் இல்லைங்களா ? உங்களுக்கு ஒரு கேள்வி.

மனம் என்றால் என்ன ?

உடம்பில் எந்த பகுதியில் இருக்கு ?

எதன் அடிப்படையில் இயங்குது ?

என்ன எதேதோ பதில் மனதில் ஒடுதா ?

அப்படியே ஒரு பதிலை பிடிச்சு வைங்க,எது சரின்னு அடுத்த பகுதியில பார்ப்போம்.

Monday, May 2, 2011

குஷியாய் பெறுவோம் குவா ! குவா ! - ( 1 )

“அய்யோ …அம்மா வலி உயிர் போகுதே…..! “ அவளின் அலறல் கேட்டவுடன் வீடே கலவரக்காடானது.

“வேகமாய் போய் ஒரு ஆட்டோ புடிடா..” என்று அந்த வயதான அம்மாள் பயமுடன் பரிதவித்தாள்.

”அவ புருஷனுக்கு போனபோடு…” என்று இன்னொரு குரல் எதிரொலிக்க அவள் மரண வேதனையில் இருந்தாள்.

வலியின் வீரீயம் அவளின் உடம்பில் பரவும்போது உயிர்பிழைப்போமா என்ற பயமும்,கடவுளே யாருக்கும் ஒன்றும் ஆகக்கூடாது என்ற அச்சமும் அவள் மனதில் மேலும் ஒரு அழுத்தத்தை உண்டாக்கியது.

சர்ரென்று வந்து நின்ற ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு,நிரம்பி வழிந்த டிராபிக் சிக்னல்களைதாண்டும் போதே அவள் மேலும் வலியின் கொடுமையில் அலறத்தொடங்கினாள். ஆட்டோவின் ஹாரன் சத்தம், டிராபிக்கின் இரைச்சல்களைத் தாண்டி அவள் அலறல் குரலைக் கேட்டவர்கள் அவர்களை வினோதமாக பார்த்தபோது,அவளுக்கே வெட்கமாக இருந்து.

ஆனால் என்ன செய்யமுடியும் வலியை அனுபவிப்பது அவள்தானே.

ஆட்டோ மருத்தவமனையை அடைந்து ஒரு ஸ்டெரச்சரில் தூக்கி வைத்து, டாக்டரிடம் சேர்த்து நிம்மதி பெருமூச்சு விட்டனர் அனைவரும்.

“கடவுளே…!.தாயையும் பிள்ளையையும்….பத்திரமா காப்பாத்திக் கொடுடா சாமி.....…!” மொத்தக் குடும்பமும் நெஞ்சுருகி இஷ்டதெய்வங்களை இன்ஸ்டால்மெண்டில் வேண்டிக்கொண்டிருந்த்து.

எப்போது நல்ல செய்திவரும் என்று அனைவரும் வார்டு வாசலில் காத்திருக்க,கையில் பெரிய ஓலையுடன் வந்து குண்டைத்தூக்கி வீசினார் டாக்டர்.

’பார்வதி அட்டெண்டர் யாரு.......குடும்பம் ஆவலுடன் ஓட ஒரு அணுகுண்டை வீசினார் “…கொழந்த பொசிஷன் மாறியிருக்கு….சிசேரியன் பண்ணிதான் எடுக்கணும்....”….கவுண்டர்ல போயி….இந்த பணத்தை .....…உடனே கட்டுங்க…...பேஷண்ட்...!!! புருஷன் யாரு வாங்க இந்த பேப்பர்ல கையெழுத்துப் போடுங்க”

அவ்வளவுதான் !

உலகமே இன்னொரு பூகம்பத்தில் விழுந்து மாதிரி ஆனது கணவனுக்கு. இவ்வளவு பணத்திற்கு…..? எங்கே போவேன் நான் ?

சிடுசிடுக்கும் முடியில்லா அவனின் வழுக்கைத் தலை மேலதிகாரியிடம் மல்லுக்கட்டி பாடுபட்டால் கிடைக்கும், அவனின் ஒன்றரை மாதச் சம்பளம் அல்லவா இது.

அய்யோ கடவுளெ….ஆண்டவா……! பிள்ளைப்பெறுவது இவ்வளவு கஷ்டமா, உள்ளே அவள் அதிகரிக்கும் பேறுகால வலியில் அலறிக்கொண்டிருந்தாள்

“ இறைவா……பிள்ளைய பெத்துக்க… இவ்வளவு செலவா,,? வெளியே அவனுக்கு,முழி பிதுங்கி வெளியே வந்துவிடும்போல் இருந்து.

போதாக்குறைக்கு உறவுமுறைகளின் சுருதி மாறிக்கொண்டிருந்தது.

“அவ வயத்து புள்ளையோட மினுக்கிகிட்டு திரியும்போதே நெனைச்சேன் இப்படியெல்லாம் ஆகும்னு…எம்புள்ளை இப்படி திடுதிப்புனு பணத்துக்கு எங்கப் போவான்….” அம்மா அவனுக்கு சப்போர்ட் பண்ணுவதுபோல் அவன் மனைவியை திட்டுவது அவனுக்கு தெளிவாக புரிந்தது.

“மாசமா இருக்கும் போது சத்து பத்தா நாலு வாங்கி கொடுத்திருந்தா இப்படி ஆவுமா..” இதுதான் வாய்ப்பு என தன் மகளின் புகுந்தவீட்டை குறைகண்டனர் சற்று முன்னர் வந்த பெண்ணை பெற்றவர்கள்.

ஒருபுறம் பணம் புரட்டவேண்டும்.

இன்னொருபக்கம் புறம் காணும் சொந்தங்களை சமாளிக்க வேண்டும்.இதைவிட அவனின் காதல் மனைவியின் அலறல், அவன் நாடி நரம்பெல்லாம் ஒரு வித உதறலை தந்தது.

ஒரு அழகான மழைப்பொழுதில் காலின் கொலுசு ஜல்லியடிக்க பின்னால் வந்து அவன் கழுத்தை கட்டிக்கொண்ட அவளின் மென்மையான கரங்களும்,அவளின் உஷ்ணமான மூச்சுக்காற்றும்..அவளுக்கென அவளின் கூந்தலில் இருந்து வரும் பிரத்யோகமான மணத்தின் ரம்மியமும் ஏனோ இப்போது நினைவுக்கு வந்தது.

“கடவுளே என் தேவதைக்கு எதுவும் ஆகக்கூடாது…….! குழந்தைப் பெற்றுக்கொள்வது இவ்வளவு சவாலான விஷயமா..! அப்படியே இடிந்து ஆஸ்பத்திரி வராண்டாவில் இருந்த பிள்ளையார் சிலை முன்பு உட்கார்ந்துவிட்டான்.

இது ஏதோ தொடர்கதையின் முதல் அத்தியாயம் அல்ல…… இன்று இந்தியக் குடும்பங்களின் கணவன்மார்கள் இந்த நிலையில்தான் இருக்கின்றனர்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தீர்களானால் உங்களுக்கு கூட இந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கும்.

ஆம்…! மருத்துவ உலகம் தொழில் நுட்பத்தில் முன்னேறிவிட்டது என்று நாம் நேஞ்சை நிமிர்த்தி நிற்கும் வேளையில்,அதனை நடுத்தர சராசரி மக்கள் எதிர்கொள்ளும் விலையில் இருக்கிறதா என்று பார்த்தால்,நாம் குனிந்த தலையை நிமிர்த்த முடியாது.

குழந்தைப் பேறு என்பது ஒரு புதிய உறவின் வரவேற்பு விழா என்ற நிலை மாறி, பர்சை பதம் பார்க்கும் “கடி” விழாவாக மாறிவருகிறது.

இன்று நிகழும் பிள்ளைபிறப்பில் நூற்றில் 50% சிசேரியம் மூலம் தான் நிகழ்கிறது என்கிறது ஒரு சமூக புள்ளிவிவரம்.செலவு ஒரு புறம் என்றால் அறுவை சிகிச்சையின் போது திணிக்கப்படும் மருந்துகள் உடம்பில் தேங்கிக்கொண்டு ஆயுசு முழுவதும் உறுத்திக்கொண்டு தொடரும்.

இதற்கு என்னதான் விடிவு என்று கேட்கிறீர்களா..? தீர்வு இல்லாமல் இத்தனை பில்டப் தருவோமா என்ன..!

இந்த வலிமிகுந்த அனுபவத்திற்க்கெல்லாம் வழி அனுப்பவருகிறது புதிய மனோவசிய நுட்பம்
“ஹிப்னொபர்த்திங்” என்ற சாகசம் !

சாகசமா….என்ன அது.? என்றுதானே கேட்கிறீர்கள்.

ஆமாம்…கற்பனை செய்துபாருங்கள்..! ஒரு நிறைமாத கர்ப்பிணி ஜாலியாக வாக்கிங் சென்று ஒரு ஆஸ்பத்தியில் ஹாயாக ஜோலியை முடித்துக்கொண்டு குழந்தையுடன் திரும்புவது ஒரு சாகசம்தானே….!

அந்த சகாசம் குழந்தைப்பெற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவராலும் முடியும் “ ஹிப்னோபர்த்திங்” என்ற கலையால்.உங்களை அந்த சாகசத்திற்கு தயார் செய்வதே இந்த தொடரின் நோக்கம்.
தயாராகுங்கள் ஒரு சாகசமிக்க தாயாராக….!

-------- இதன் தொடர்ச்சி வரும் வெள்ளிக் கிழமை ( 06.05.2011 ) பதிவில்

உதவி :
டாக்டர்.சி.ஜே.ஜெயச்சந்தர்.
ஆழ்மன ஆற்றுபடுத்துதல் மனோவசிய சிகிச்சை நிபுணர்
www.basixinc.org

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...