Friday, April 29, 2011

பாபா “ மேஜிக்” - குற்றமற்ற குரு யார் ?

புட்டபர்த்தி சத்ய சாயி பாபாவின் உடல் இந்த பூவுல பார்வையில் இருந்து மறைந்து விட்டது. இந்த உடலெடுத்த காரணம் முடிவுக்கு வந்துவிட்டது.

ஆமாம் ? பாபா நல்லவரா ? கெட்டவரா?

பாபா ஒரு கடவுளின் அவதாரம்.அவரே கடவுள் அற்புதங்கள் பல புரிந்தவர். இது உலகமெங்கும் வாழும் ஒரு சில மக்களின் நம்பிக்கை.

பாபா ஒரு சுயநலவாதி. சாதாரண மனிதப்பிறவிதான். கடவுள் என்ற பெயரால் கோடிக்கணக்கான சொத்து சேர்த்துவிட்டார். கடவுள் என்றால் அவர் ஏன் மரணம் அடையவேண்டும் ? கடவுளுக்கு மரணம் உண்டா ? இது முற்போக்குவாதிகள் என்ற பெயரில் வெளிப்படும் மக்களின் மனவோட்டம்.

இந்த குழப்பங்களுக்கெல்லாம் காரணம் கடவுள் வேறு ! மனிதன் வேறு ! என்று காலம் காலமாக பதிந்துவிட்ட எண்ணம் தான்.மண்ணில் ஆறறிவுடன் பிறப்பெடுத்துவிட்டாலே அவர்கள் மனிதர்கள் தான். ஆனால் மண்ணில் பிறப்பெடுத்துவிட்டதாலேயே ஒருவர் கடைசி வரை மனிதனாக வாழ்ந்து மடியவேண்டும் என்பதில்லை.மகானாகவும் மாறலாம். ஏன் கடவுளாகவே போற்றப்படலாம்.

பாபா மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன ?பாபா மட்டுமல்ல ? இயேசு கிறிஸ்து. நபிகள் நாயகம், புத்தர், மகாவீரர் தொடர்ந்து நவீன காலத்தில் வாழ்ந்த ஓஷோ உட்பட தற்போது வாழும் ஜக்கி வாசுதேவ், நித்யானந்தர்,ரவிஷங்கர்,கல்கி எனத் தொடர்கிறது பட்டியல்.

இவர்களின் மீது பொதுவான குற்றச்சாட்டுக்கள் என்ன ? ஒன்று பாலியல் தொந்தரவு அல்லது ஓரின சேர்க்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள். அடுத்தது கடவுளின் அவதாரம் என்று பொய்யுரை செய்து கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்ப்பது அல்லது பிற குற்றச்செயல்கள்.

இதனை எளிமையாக இப்படி அடக்கலாம். அவர்களின் குற்றங்கள் எதுவானலும் பேராசை, வஞ்சம், கடுஞ்சினம், முறையற்ற பால் கவர்ச்சி மற்றும் உயர்வு தாழ்வு மனப்பான்மை. எத்தகைய கொடிய குற்றங்களும் இதற்குள் அடங்கும் அல்லது இதுவே அடிப்படையாக இருக்கும்.

பாபா விமர்சனத்துக்குள்ளான அதே காலக்கட்டத்தில் தான் லட்சக்கணக்கான சீடர்களும் உருவாகி வந்திருக்கின்றனர். சீடர்கள் என்றால் சாதாரண ஆட்கள் இல்லை.உலகின் முன்னனி மருத்துவர்கள், பொறியாளர்கள்,விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள்,கலைஞர்கள் என்று பலர். இவர்கள் ஏன் பாபாவை பின்பற்ற வேண்டும். இவர்களின் கருப்பு பணத்தை பதுக்க அல்லது பாதுகாக்க அவர் உதவுகிறார் என்று கூட புதிய குற்றச்சாட்டு கூறலாம்.இதுமட்டுமே காரணமாக இருக்க முடியாது. இதனை மீறிய ஒரு ஈர்ப்பு சக்தி அவரிடம் இருந்தது என்பதுதான் உண்மை.அப்படியெனில் அவர் மீது விமர்சனங்கள் ஏன் ?

மனித பிறவி என்பது கண்ணுக்கு தெரிந்த உறுப்புகளோட கண்ணிற்கு தெரியாத கருமையப்பதிவுகளையும் ( Genetic Imprints )சுமந்தே வருகிறது. இந்த கருமையப் பதிவுகள் என்பது நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களின் வாழ்வியலின் பிரதிபலிப்பாக நம்முள் ஏற்படும்.

உதாரணமாக மூன்றுவிதமான கர்மாக்கள் இருக்கின்றன.

ஆகாமியம், சஞ்சிதம் மற்றும் பிராப்தம் என்பன அவை.

ஆகாமியம் என்பது உங்களின் முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், பாவப்பதிவுக்ள் பிறவித் தொடராக உங்களிடம் வருவது.சஞ்சிதம் என்பது நீங்கள் சிந்திக்க தொடங்கிய வினாடியில் இருந்து பதிந்துகொண்ட நல்லது கெட்டதை உங்கள் செயலில் பிரதிபலிக்க செய்வது. பிராப்தம் என்பது ஆகாமியமும் சஞ்சிதமும் கலந்து ஒரு புதிய பதிவை உங்களுக்குள் ஏற்படுத்துவது.இந்த பிரதிபலிப்புகள் நம் உடல் எடுத்த வினாடியில் இருந்து செயல்பட்டு கொண்டே இருக்கும்.

ஆனால் ஆன்மா இதில் இருந்து மாறுபட்டது. அது அழிவற்றது என்று நமது யோகமுறை சொல்கிறது. ஒரு ஆன்மா இந்த பூமிக்கு வருமுன்பே தனது நோக்கத்தை தீர்மானித்தே வருகிறது.

உதாரணமாக தேசத்தந்தை மகாத்மா காந்திஜி. நாம் நானூறு வருடங்கள் வெள்ளையனிடம் அடிமைப்பட்டு கிடந்தோம்.எப்போது அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைக் கிடைக்கும் என்ற இந்தியாவெங்கும் மனித எண்ணங்கள் ஏங்கி கொண்டிருந்தன. அவர்களின் எண்ணங்கள் பிரபஞ்சத்தில் பதிந்து கொண்டே வந்தன. பிரபஞ்சத்தில் உலா வந்த ஒரு ஆன்மா இந்திய மக்களின் ஏக்கத்தை நிறைவேற்ற முடிவெடுத்து பூமிக்கு வர தீர்மானித்தது. அது கரம்சந்த் காந்தியையும், புத்திலிபாய் அம்மையாரையும் தன் பெற்றோராக தேர்ந்தெடுத்தது. மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தார். மோகன் தாஸ் பிறந்த வினாடியில் மகாத்மாவாக தன்னை உணரவில்லை. அவருக்கு புகைக்கவும்,புலால் உண்ணவும், மது அருந்தவும் உடல் ஆர்வம் தூண்டியது. தந்தை மரணப்படுக்கையில் இருக்க மனைவியுடன் சல்லாபித்தார். இதையெல்லாம் செய்ய அந்த ஆத்மா தூண்டவில்லை. அவரின் உடலுக்கு ஏற்பட்ட ஆர்வம். அது அவரின் முன்னோர் வழி வந்தது. இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. சிலதை தவிர்த்தார், சிலவற்றை அனுபவித்து தீர்த்தார்.அவரின் உளவியல் குழப்பம் கருமையத்தில் பதிந்து, அடுத்த தலைமுறைக்கும் சென்றது.

மோகன் தாஸூக்கு ஏற்பட்ட இந்த தூண்டுதல் அவருடன் நிற்கவில்லை. அவருக்கு பிறந்த ஹரிகிருஷ்ணலால் காந்தி வரை நீண்டது. ஹரிகிருஷ்ணலாலின் லீலைகளை நாம் படித்து இருக்கிறோம். ஆனால் இந்த உடல் தூண்டுதல்கள் கொஞ்சம் காலம் தான். அது தணிந்தபின்பு ஆத்மா தன் கடமையை செய்ய தொடங்கியது. மோகன் தாஸ் மகாத்மாவாக மாறினார்.

இந்த கருமைய விளையாட்டை மோகன் தாஸிடம் மட்டுமல்ல பலரது வாழ்க்கையில் பார்க்கலாம். இன்றைய உதாரணம்,கலைஞர் மற்றும் மு.க.முத்து. விஜய்.டி.ராஜேந்தர் ஒரு அற்புத படைப்பாளி, நான் பெண்ணை தொட்டு நடிக்கமாட்டேன் என்று கூறுவார். அப்படிதான் நடித்து வந்தார், ஆனால் செயல் அளவில் அவர் கட்டுப்பாட்டில் இருந்தாலும், உளவியல் அளவில் அதில் ஒரு ஊசலாட்டம் இருந்திருக்கவேண்டும், அதுவே அவரின் மகனை ஒரு பிளேபாயாக சுற்றத் தூண்டுகிறது.

இந்த செயல் விளைவு தத்துவம் மனித பிறப்பெடுத்த எல்லாருக்கும் பொருந்தும்.இதுதான் இந்த ஆன்மிக குருக்களின் வாழ்வியலிலும் நடக்கிறது. அவர்கள் ஆன்மிகம் விருப்பமாக இருந்தாலும், ஆன்மா சேவையை வாழ்வியல் நோக்கமாக கொண்டிருந்தாலும், உடலியல் வேட்கையை நெறிப்படுத்தும் பயிற்சியில் தவறும்போது இத்தகைய விமர்சனங்களுக்கு உள்ளாகின்றனர். இதில் கவனமாக இருக்கவேண்டும். ஒரு சில குருமார்கள் தான் பக்குவப்பட்டு பரிசுத்தமானவர்களாக இருக்கின்றனர்.

அத்தகைய பக்குவம் எப்போது வரும்.நமது வாழ்வியல் முறை, உலகின் இன்ப துன்பங்களை அனுபவித்து,வாழ்ந்து, மகிழ்ந்து வாழ்க்கையின் இறுதி காலத்தில் தான் துறவறம் செல்லவேண்டும் என்று சொல்கிறது.

ஆனால் ஒருசிலர் இளம் வயதிலேயே இறையுணர்வை பெற்று விடுகின்றனர்.இதுவும் கர்மவினைதான். அவ்வாறு பெற்றாலும், முன்னோர் வழி வந்த உடலெடுத்த காரணத்தால்,அந்த பதிவுகள் பிரதிபலிக்கும் போது, அறிவு மங்கி உடல் சுகத்தால் தடுமாறி விடுகின்றனர். முற்காலத்தில் பீடங்கள் தங்கள் குருமார்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் காண்பித்தன. பல நெறிமுறைகளை வகுத்தன.இளம் வயதில் ஆன்மிகத்தில் ஈடுபடும் போது, அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும்.உணவு,உடற்பயிற்சி, மனப்பயிற்சி என்று உடலையும் மனதையும் பக்குவப்படுத்தப்படும்.இது எல்லா மதத்திலும் நடைமுறையில் இருக்கின்றன.

முறையான நல்வழியில் வளர்க்கப்பட்டும் ஜெயேந்திரரும் , விஜேயந்திரரும் கம்பி எண்ணிய நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறோம் வாழையடியாக வரும் பீடங்களுக்கே இந்த கதி என்றால் திடீர் இறையுணர்வு பெறும் மனிதர்களால் என்னதான் செய்ய முடியும்.

நித்தியானந்தாவின் யோகமுறைகளை குறை சொல்ல முடியாது. ஆனால் ஆன்மிக வாழ்வில் இருந்துகொண்டு ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருப்பது பெரும் குற்றம் தான். இதனை தவிர்க்க நித்தியானந்தா என்ன செய்திருக்க வேண்டும் ? தனக்குள் இத்தகைய தூண்டுதல் எழும்போதே வெளிப்படையாக வந்து விருப்பமான பெண்ணை திருமணம் செய்திருக்கலாம். இல்லறம் ஆன்மிக வாழ்க்கைக்கு தடையில்லை.

வேதாத்ரி மகரிஷி அதை தான் செய்தார். அவர் பிரம்மச்சாரியத்தை ஆதரிப்பதில்லை. ஒரு மாபெரும் தொழில்மேதையாக வாழ்ந்தவர். ஒரு ராணுவ வீரனாக இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர். யோகத்தில் விருப்பம் கொண்டு, குருவைப் பெற்று, கற்று ஆராய்ந்து பின்னர் மற்றவர்க்கு போதித்தவர். அவரின் போதனைகள் அவரின் வாழ்வின் அனுபவங்களே. அவர் பொருளாதாரம் பேசினார், மருத்துவம் பேசினார்,உலக அமைதி பேசினார், பாலியல் பேசினார். எல்லாம் அவரின் வாழ்க்கையில் அவர் பெற்ற அனுபவம் கொண்டு பேசினார்.ஒருவன் யோக வாழ்வில் முன்னெற வேண்டுமெனில் அவன் இல்லற வாழ்வுதான் முதல் படி என்பார். பெண்களுக்கு ஆன்மிக ஒளியைக் காண்பித்தவர். இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிக்கவே காயக்கல்பம் என்ற அற்புத பயிற்சியை தந்தவர்.

காயகல்ப நுட்பத்தின் மூலம் திருமணம் ஆகும் வரை உடலியல் உணர்வுகளை நெறிப்படுத்திக் கொள்ளலாம். அதே நுட்பத்தின் மூலம் தம்பதிகள் நிறைவான இல்லறவாழ்வையும் அனுபவிக்கலாம். தவமும் யோகமும் தந்த மகரிஷி அகத்தாய்வு என்று ஒரு உளவியல் பயிற்சியையும் தந்துள்ளார். இந்த அகத்தாய்வு நமது ஆளுமைத் திறனை அதிகரிக்கிறது. எண்ணம் எந்த சூழலிலும் மற்றவர்களுக்கு துன்பம் தராமல் தடுக்கிறது.ஆணும் – பெண்ணும் யோகம் பயின்று வரும் போது பாவபதிவுகள் கரைந்து அடுத்த தலைமுறை சிறப்பாக இருக்கும் என்பது அவர் நிரூபித்த உண்மை. இந்த நூற்றாண்டின் பரிசுத்தமான ஒரு யோகி என்று அவரை குறிப்பிட முடியும்.

இந்தியாவின் அடையாளம் ஆன்மிகம் தான். இந்த தேசத்தில் ஆன்மிக குருக்கள் பிறப்பெடுத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு வாழ்பவர்கள்.

சத்திய சாய் பாபாவும் அப்படிப்பட்டவர்தான். ஆந்திராவில் புட்டபர்த்தி என்னும் சிறுகிராமத்தில் ஈஸ்வரம்மா மற்றும் பெத்தவன்காமா ராஜூ ரத்னாகராம் என்பவர்களை தன் பெற்றோராக தீர்மானித்து, பூமியில் அவதாரம் எடுத்த அந்த ஆத்மா, ஒரு பெரும் அரசியல் இயக்கமும், ஆட்சியும் சாதிக்க தவறிய சாதனையை உலகமெங்கும் சாதித்து இருக்கிறது. சுமார் 114 நாடுகளில் 1200 க்கும் அதிகமான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை நடத்தி வருகிறது. இவையனைத்தும் முற்றிலும் இலவசம் என்பதும், சாதி சமய மதம் இனம் வேறபாடு இன்றி யாரும் இங்கு பயன் பெறலாம் என்பது சேவையின் சிகரம்.

குரங்கினை ஒத்தது மனித மனம். அது சும்மா இருந்தால் எதை நோக்கி செல்லும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மனித மனதை ஒருமுகப்படுத்தி பிரசாந்தி நிலையம் நோக்கி திருப்பியவர் சத்ய சாயி. இத்தனை லட்சம் மக்களை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்பது சாதாரண செயல் அல்ல. ஒரு பெரும் கூட்டத்தை சாத்வீகமாக வைத்திருந்தது சத்ய சாயின் மாபெரும் சாதனை தான்.

இப்போது சத்யசாய் இல்லை. அவர் உருவாக்கிய இந்த அமைப்புகளும்,சுமார் இரண்டு லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் என்ன செய்யலாம் ?

ஆந்திர அரசாங்கம் அதனை எப்படி கையகப்படுத்தலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. சத்ய சாய் அறக்கட்டளை அரசு கையகப்படுத்தும் முயற்சியை எப்படி முறியடிக்கலாம் என்று யோசித்து வருகின்றனர்.

அரசின் கீழ் சென்றாலும் ஆபத்து. சத்ய சாய் என்ற அந்த மாபெரும் மனிதர் இல்லாத சூழலில், அறக்கட்டளையின் நிர்வாகத்தின் கீழ் முற்றிலும் இருந்தாலும் அது தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் பராமரிக்கப்படுமா என்பதும் கேள்விக்குறி? மக்கள் மேம்பட மக்கள் வழங்கியப் பணம்.முழுவதும் மக்களுக்காக சென்றடைய வேண்டும். அதற்கு ஒரே வழி ஆக்கப்பூர்வமான ஒரு நிர்வாக குழு அமைக்கப்படவேண்டும். அறக்கட்டளை, அரசு மற்றும் பல்துறை நிபுணர்கள் இதில் இடம்பெறவேண்டும். சத்ய சாயி அறக்கட்டளையின் சொத்து விபரங்கள் உட்பட அனைத்தையும் ஒளிவுமறைவின்றி வெளியிட்டு, ஒவ்வொரு செயல்பாட்டையும் அனைத்து மக்களும் எளிதாக அறியும் வண்ணம் எப்போது திறந்த புத்தகமாக செயல்படுவது.அப்போது தான் அறக்கட்டளையின் உண்மையான நோக்கம் மக்களை சென்றடையும்.

பாபா செய்த அற்புதங்கள் பல. அது பி.சி.சர்க்காரின் மேஜிக் நுட்பங்களை மிஞ்சக் கூடியது. வெறும் விரல் நுனியில் இருந்து விபூதி வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, நொடியில் கைகளை சுழற்றி தங்கமாலை வரவழைப்பது எனப் பல பல. இவையாவும் அறிவில் சிறந்த சான்றோர்களைக் கூட பரவசப்படுத்தியது. இன்னொரு புறம் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகியது. பாபா தன் பரிவாரங்கள் துணையுடன் மேஜிக் செய்து மக்களை மயக்குகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அந்த மேஜிக்குகள் நிகழ சீடர்கள் துணையிருந்தனரோ இல்லையோ , இனி வரும் காலங்களில் சத்ய சாய் பாபாவின் நோக்கங்கள் நிறைவேற எந்தவித எதிர்பார்ப்புமின்றி உறுதி பூணவேண்டும்.

முற்போக்குவாதிகளாக தன்னைக் காட்டிக் கொள்பவர்கள் சத்ய சாய் மீதான எதிர்முறை விமர்சனத்தையும் தவிர்க்கவேண்டும். ஒருவர் இனி புவியில் இல்லாத போது அவரை விமர்சிப்பதில் எந்தவொரு பலனும் இல்லை. அதைவிடுத்து ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை வழங்கலாம்.

சீடர்கள் குருவைத் தேர்ந்தெடுப்பது இல்லை. குருதான் சீடர்களை தேர்ந்தெடுக்கிறார். நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ...அப்படியே உங்களுக்கான குருவும் அமைவார்.குரு இல்லாமல் வாழ முடியாதா என்றால் ? முடியும். ஆனால் குரு இல்லாமல் உங்களை நீங்கள் உணரமுடியாது. வேறும் வாழ்க்கை வாழவேண்டும் என்றால் உங்களுக்கு குரு தேவையில்லை. தன்னையறிந்த முழுவாழ்க்கை வேண்டுமெனில் ஒரு குரு தேவை. எது தேவையோ அதனை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

3 comments:

 1. சாய்பாபா விசயத்தை மிகத் தெளிவாக நடைமுறையில் என்ன சாத்தியம் என்பதை எல்லோரும் உணரும் வண்ணம் சொல்லி இருக்கிறீர்கள்.

  மனதார வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 2. அலாய ராம் : நீங்க நல்லவரா கெட்டவரா?

  சத்ய சாய் பாபா : தெரியலையே ??

  நாம் : டொய்ன் டொய்ன ண... டொய்ன் டொன்ண்ட டொய்ன்

  ReplyDelete
 3. ????

  போய்யா போங்கு......

  ReplyDelete

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...