Saturday, April 2, 2011

ஆழியாறு வாங்க ! ஆனந்தம் வாங்க !

ஆனந்தத்தை வாங்க முடியுமா ?

கண்டிப்பாக முடியும். ஒரு இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பேருந்தோ, ரயிலோ பிடித்து (வசதிமிக்கவர்கள் விமானம் கூட ஏறலாம் ) பொள்ளாச்சி வந்து, அங்கிருந்து ஒரு டவுன் பஸ் பிடித்து, ஆழியாறு டிக்கெட் எடுத்து, அருட்பெருஞ்ஜோதி நகர் வேதாத்ரி மகரிஷி குண்டலினி யோகம் மற்றும் ஆராய்ச்சி மையம் வந்தால் அளவில்லாத ஆனந்தத்தை அள்ளிக்கொண்டு போகலாம்.
இங்கு அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக ஆனந்தம் கொட்டிக் கிடக்கிறது.

ஆனால் இந்த ஆனந்தத்தை காசு கொடுத்து வாங்க முடியாது.

ஒரு எக்சேஞ்ச் ஆபரில் ( Exchange Offer ) இதனைப் பெற்றுச் செல்லலாம்.

உங்களிடம் செல்லுபடி ஆகாத நிலையில் உள்ள பேராசை, கடுஞ்சினம், கடும்பற்று,முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இப்படி ஏதாவது இருந்தால் அல்லது எல்லாமும் இருந்தால், அதனை இங்கு கரைத்துவிட்டு அளவில்லாத ஆனந்தத்தை உங்களுள் நிரப்பிச் செல்லலாம்.

ஆனந்தம் இங்கு மனவளக்கலை என்ற வடிவில் கிடைக்கிறது.

அது என்ன மனவளக்கலை ? உங்களுக்கு வேதாத்ரி மகரிஷியை தெரியுமா ?

இது என்ன கேள்வி என்று கேட்கிறீர்களா ?

வாழ்க வளமுடன் ! என்ற மந்திர சொல்லுக்கு சொந்தக்காரர்தானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சாலையில் பத்து வாகங்கள் ஓடினால் அதில் எட்டு வாகனங்களில் வாழ்க வளமுடன் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும்.

வாழ்க வளமுடன் என்பது ஒரு சொல் !

அது என்ன மந்திரச்சொல் ?

வாழ்க வளமுடன் என்பது உச்சரிப்பு இலகுவானது. ஆனால் அந்த உச்சரிப்பின் பின் புலமாக அமைந்துள்ள மந்திரத்தன்மை என்ன ?

வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது.

வாழ்க என்பது வாழ்த்துச் சொல்.

வளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையைக் குறிக்கும்.

வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம்.

ஒருவன் எப்போது நிறைவுத் தன்மை அடைய முடியும்?

தேவைகள் பூர்த்தியடையும் போது நிறைவுத் தன்மை ஏற்படும்.

தேவைகளை எப்படி பட்டியலிடுவது.

மனிதனின் பொதுவானத் தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம்.

ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கியம்.

1.உடல் நலம் 2.நீளாயுள் 3.நிறைச்செல்வம் 4.உயர்புகழ் 5.மெய்ஞானம்.

இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை.

உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கிவிடும்.

வாழ்க வளமுடன் என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும் போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.

இது வெறும் வார்த்தை ஜாலமல்ல ! இதுனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன் பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது.

அது என்ன ?

வாழ்க வளமுடன் என்று இன்னொரு முறை உச்சரித்து பாருங்கள். உங்களின் உள் நாக்கு அதாவது தொண்டையின் உள் மேல் பகுதியில் “ழ்” எனும்போது ஒரு அழுத்தம் நிகழ்வதை உங்களால் உணர முடியும்.

உள்நாக்கின் உச்சியில் அதாவது நெற்றிக்கும், பின் மண்டையில் பிடறிக் கண்ணுக்கும் நேர் கோட்டில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது. அந்த சூட்சுமம் இந்த பிரபஞ்சத்தோடு நேரடியாக தொடர்புகொண்டிருக்கும் சக்தி. உங்களின் எண்ணங்களில் எழும் தேவைகளை பிரபஞ்சத்தில் கட்டளையாக மாற்றி அதனை பெற்றுத் தரும் சூட்சுமம் அது.

உங்கள் எண்ணம் வலிமைமிக்கது என்றால், அது உங்கள் மூலமாகவே செயலுக்கு வந்துவிடும். கொஞ்சம் பலகீனமான எண்ணம் என்றாலும் நீங்கள் கவலைப்படத்தேவையில்லை...அட்லீஸ்ட்....நீங்கள் பேரப்பிள்ளைகளை எடுப்பதற்குள்ளாவாவது செயலுக்கு வந்துவிடும். எண்ணம் எப்போது வீணாவது இல்லை. எண்ணமும் வீணாவது இல்லை.அதனால் எண்ணுவதை வலிமையாக எண்ணுவது சாலச்சிறந்தது.

அந்த சூட்சுமப் பகுதியை அறிவியலில் பீனியல் சுரப்பி என்பார்கள். ஆன்மிகத்தில் துரியம் என்பார்கள். வாழ்க வளமுடன் உச்சரிக்கும் போதும் உங்களின் துரியமையம் கட்டளைகள பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். ஒருவர் உங்களை வாழ்த்தும் போது நீங்கள் வளமுடன் வாழ கட்டளைகளை அவர் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம்.வாழ்க வளமுடன் வெறும் வாழ்த்துச் சொல் அல்ல ; அது ஒரு மந்திரச் சொல் என்பது இப்போது விளங்குகிறதா ?

இந்த சொல்லின் வித்தகர் வேதாத்திரி அருளிய யோகமுறைதான் மனவளக்கலை.

வேதாத்திரி ஒரு தீர்க்கதரிசனம் பெற்ற யோகி.

பாஸ்ட் புட்டும் ,பீட்சா ஹ்ட்டையும் தேடி தின்று, லேப்டாப், டேபிள் டாப் முன்பு உண்டு உறங்கி,இரத்த அழுத்தம், மன அழுத்தம் என்பதை இன்கிரிமெண்டாக பெற்று முப்பது வயசிலேயே நரைவிழுந்து....நொந்து நூடுல்ஸாய் இருக்கும் இந்த தலைமுறை என்பதை ஐம்பது வருடத்திற்கு முன்பே கணித்தவர் வேதாத்திரி. கணித்தது மட்டுமல்ல, அதற்கு ஒரு எளிய தீர்வும் தந்துள்ளார்.

அதுதான் மனவளக்கலை.

தனிமனிதனுக்கு இப்படி என்றால் உலகம் வேறுமாதிரி இருக்கும் என்பதையும் கணித்தார்.நாடு பிடிக்கு ஆசையில், தொடரும் சண்டை,வேல்,ஈட்டி, கத்தி, கபாடா போய் துப்பாக்கி,பீரங்கி தேய்ந்து, அணுவைப் பிளந்து ஆராயும் மனிதன், அந்த அணுவாலேயே அழிவை தேடும் நிலையில் நிற்பான் என்பதையும் கணித்து...உலகம் அமைதி அடைய ஒரு வழி கண்டார் வேதாத்திரி.

அது தான் மனவளக்கலை.

உலகின் அமைதி என்பது தனி மனித அமைதி தான்.

தனி மனித அமைதி என்பது தான் உலகம் அமைதி.

உலக அமைதி என்பது ஒரு நீண்ட நூலின் ஒருமுனை என்றால் ; தனிமனித அமைதி இன்னொரு முனை. இரண்டையும் இணைப்பது மனவளக்கலை.

மனவளக்கலையில் அப்படி என்ன இருக்கிறது?

ரொம்ப சாதாரணம் தான். உங்களை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்திருக்கும் ஒரு வாழ்வியல் முறை. மிகவும் எளிமையான முறை.அவ்வளவுதான்.

நீங்கள் எப்போது அமைதியாக இருப்பீர்கள் ? உடல் அளவிலும் மன அளவிலும் அமைதியாக இருக்கும் போது தானே.

உடல் அளவில் அமைதியாக இருக்க, நோயற்ற வாழ்க்கை வாழ வேண்டும். உடலில் நூற்றுக்கணக்கான உறுப்புகள், ஆயிரமாயிரம் நரம்புகள், இருந்தாலும் அதன் ஆரோக்கியமான இயக்கம் நான்கு நிலைகளில் கட்டுபடுத்தப்படுகிறது.

அந்த நான்கும் இரத்த ஓட்டம்,வெப்ப ஓட்டம்,காற்றோட்டம் மற்றும் உயிரோட்டம் என்பதாகும்.
இந்த நான்கும் சம நிலையில் இருந்தால் ஆயுசு நூறு, இது சமநிலைத் தவறினால், நோய்,வலி...தொடர்ந்தால் அல்ப ஆயுசு. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீண்ட நாள் வாழ நமது முன்னோர்கள் வடிவமைத்த பயிற்சி முறைதான் யோகாசனங்கள்.

அது அஷ்டாங்க யோகம், ஹடயோகம் என்று பலவகைப் படுகிறது. இதன் சூத்திரதாரி மிஸ்டர் பதஞ்சலியார். ஆதியில் சுமார் 88000 யோகமுறைகள் இருந்ததாக தெரிகிறது. உண்ணுவது, உறங்குவது, இயங்குவது,சம்போகிப்பது,இறப்பது என ஒவ்வொரு செயலிலும் யோகம் நிறைந்து இருந்தது.ஆனால் நாளடைவில் அது 88 ஆக சுருங்கி இப்போது இருபதையும் முப்பதையும் வைத்துக்கொண்டு யோகா ஆசான்கள் ஜல்லியடித்து கொண்டிருக்கின்றனர். எண்பதெட்டாயிரமோ எண்பதெட்டோ, அதன் நோக்கம் இதுதான் உடலில் இரத்த ஒட்டம்,வெப்ப ஒட்டம், காற்றோட்டம்,உயிரோட்டம் ஆகிய நான்கையும் சீரமைப்பது.

முப்பது யோகா என்றே வைத்துக்கொள்ளுங்கள், அதனை முழுமையாக தினம் செய்து முடிக்கவேண்டும் என்றால் எவ்வளவு நேரமாகும். சிறுவர்களுக்கு சரி, யோகா வாசனை அறியாமலே வாழ்ந்து, நோய்பட்டு திருந்தி யோகா செய்ய விரும்பும் நடுத்தர, மூத்த குடிமக்களால், கையையும் காலையும் வளைத்து நெளித்து இத்தனையும் செய்ய முடியுமா ?

பெரிய கேள்விதான் ?

பார்த்தார் வேதாத்திரி. எல்லா யோகா முறைகளிலும் கிடைக்கும் பலன்கள் கிடைக்கவேண்டும். அதே நேரம் குறுகிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். எட்டு வயது பொடியன் முதல் எண்பது வயது முதியவர் வரை அசராமல் செய்யவேண்டும். எப்படி என்று யோசித்தார்.அத்தனை யோக முறைகளையும் ஆராய்ந்து ஒரு பயிற்சியை வடிவமைத்தார். அதுதான் எளியமுறை உடற்பயிற்சி.

அதனை வடிவமைத்தது மட்டுமின்றி உண்மையில் உரிய பலன் இருக்கிறதா என்று சோதிக்க விரும்பினார். யாரைக் கூப்பிடலாம் ? மகரிஷி சென்னைக்கு அருகே கூடுவாஞ்சேரியில் வசித்தபோது நிகழ்ந்தது இது. யார் ஆராய்ந்து சொன்னால் நம்பகத்தன்மை வரும் என்று தேடிய போது கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்தார் செங்கல்பட்டு அறுவைச் சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் டாக்டர்.அனந்தநாராயணன். எளியமுறை உடற்பயிற்சியை கற்றறிந்து தன்னிடம் வரும் சர்க்கரை, இரத்த அழுத்தம்,இதயநோய் உள்ளவர்களுக்கு கற்றுத் தரத் தொடங்கினார்.

என்ன ஆச்சர்யம் ! பாதிக்கு மேலானவர்களுக்கு சர்க்கரை நோய் போயே போச்சு! இரத்த அழுத்தம் கட்டுப்பட்டது. இதய நோயாளிகளின் ஆரோக்கியத்திலும் நல்ல மாற்றம்.

டாக்டர் அனந்தநாராயணன் அடிப்படையில் ஒரு அறுவைச் சிகிச்சை பேராசிரியர்.கத்தியையும் இரத்தத்தையும் பார்த்து பார்த்து அலுத்துபோன அவருக்கு இந்த மனவளக்கலை கத்தியின்றி இரத்தமின்றி ஆரோக்கியத்தை மீட்க யுத்தம் செய்ய உதவும் வியூகமாகவே தெரிந்தது.
வந்தபின் அறுப்பதை விட வரும் முன் காப்பது சிறந்தது என்பதால் டாக்டர் அனந்த நாராயணன் தன் வாழ்நாள் முழுவதும் மனவளக்கலை பரப்புவதில் முன்னுரிமை தந்தார். அவர் மட்டுமல்ல இன்று பிரபலமான இதயசிகிச்சை நிபுணராக இருக்கும் டாக்டர் சொக்கலிங்கம் உட்பட பெரும் மருத்துவ மேதைகள் மனவளக்கலை யோகத்திற்கு பச்சைக் கொடி பிடிக்கின்றனர்.

உடல் நலத்தை தொடர்ந்து தேவை நீளாயுள். நீளாயுளுக்கு வேதாத்ரி மகரிஷி வடிவமைத்த யோகமுறை காயக்கல்பம். இதுபற்றி நாம் ஏற்கனவே போதும் போதும் என்ற அளவில் பார்த்துவிட்டோம். பார்க்க தவறியவர்கள் எனது பழைய பதிவு (http://rajmohanfourthestate.blogspot.com/2010/12/blog-post_18.html ) படித்து தெரிந்துகொள்ளலாம்.
உடல்நலம், நீளாயுள் இருந்தால் போதுமா? விரும்பியதை அனுபவிக்க பொருள்வளம் தேவையல்லவா ? இதனை வேதாத்ரி நிறைசெல்வம் என்கிறார்.

நிறைசெல்வம் என்றால் என்ன? யார் யாருக்கு எந்த அளவில் நிறைவு தருகிறதோ அதுவே நிறைச்செல்வம். அப்படியென்றால் நான் எவ்வளவு வேண்டுமானாலும் ஆசைபடலாமா?
கண்டிப்பாக. வேதாத்ரி மற்ற யோகிகள் போன்றில்லை. ஆசையை ஒழி. ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்ற கோஷமெல்லாம் வேதாத்ரியிடம் இல்லை. ஆசைபடலாம்.....எவ்வளவு வேண்டுமானாலும் ஆசை படலாம்.ஆனால் அது பேராசையாக கூடாது. இதுதான் வேதாத்திரி மகரிஷி.

ஆசையை பேராசையில் இருந்து எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது?

ஒரு ஆசை மற்றவரை உடல் அளவிலோ, மனதளவிலோ பாதிக்காது, துன்பம் தராது என்றால் அது நியாயமான ஆசை. துன்பம் தருமெனில் அது பேராசை.

சரி நிறைச்செல்வத்தை அடைவது எப்படி. கடுமையாக உழைக்க வேண்டும்.

இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இதில் என்ன புதுசு என்கிறீர்களா?

உழைப்பு எல்லோரும்தான் உழைக்கிறார்கள்,ஆனால் ஒரு சிலர் தானே வெற்றிப் பெறுகிறார்கள்.

உண்மைதான். உழைப்பு மட்டும் போதாது. வெற்றிக்கான வியூகம் வேண்டும். அதற்கு மனத்தெளிவு அவசியம். அதற்காக வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த யோகம் எளிய முறை குண்டலினி யோகம்.
நீங்கள் விரும்பு பொருள் தேவை எதுவானாலும் அது இந்த பூமியில் தான் கிடக்கிறது.நீங்கள் வாழும் மண்ணில் அது வேறோரு இடத்தில் இருக்கிறது. அதனை உங்களிடம் வர செய்வது எது ? உங்களுள் அதிகரிக்கும் ஈர்ப்பு சக்தி.

அந்த ஈர்ப்பு சக்தியை தருகிறது வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த எளியமுறை குண்டலினி யோகம். இப்பயிற்சிகள் நீங்கள் நிறைசெல்வம் காண வழி தருவதோடு நினைத்ததை நடத்தி காட்டுகிறது. கேட்பதை பெற்று தருகிறது.

உடல்நலம்,நீளாயுள்,நிறைச்செல்வம் தொடர்ந்து ஒரு மனிதனுக்கு தேவை உயர்புகழ். உயர்புகழ் என்றால் என்ன ? அது எப்படி கிடைக்கும்.

கடந்த ஒரு வாரமாக கோட்டையில் கொடிநாட்டிக் கொண்டிருந்த அமெரிக்காவின் இரண்டு பெரும் கோடிஸ்வரர்கள் குப்பத்து ராஜாவாக இந்தியாவை ரவுண்ட் அடித்து நம்ம ஊர் பிள்ளைகளை குளிப்பாட்டி,சீராட்டி தாலாட்டி கொண்டிருக்கின்றனர்.

ஒருவர் பில்கேட்ஸ் ; மற்றொருவர் வாரன் பஃப்பெட்.

பேரைக்கேட்டாலே வாவ்...! என்று கத்த தோன்றுகிறதா ?

ஏன்...? அந்த பேரில் உள்ள மந்திரசக்தி. இவர்கள் பணக்காரர்கள் என்பதற்காக மட்டுமல்ல ? அவர்களின் கடும் உழைப்பு மற்றும் வெற்றி. இதுதான் உயர்புகழ். இவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் தெரியுமா ? தாங்கள் சம்பாதித்ததில் எண்பது சதவீத பணத்தை அதனை கொடுத்த இந்த சமுதாயத்திற்கே திருப்பி தருவதற்காக.

ஒவ்வொரு மனிதனும் தனது சம்பாத்தியத்தில் ஒரு பத்து சதவீதமாவது சமுதாய நலனுக்கு செலவிட வேண்டும். நான் எப்போது சமுதாயத்திற்காக பாடு படுகிறோமோ அப்போதே நம்மை உயர்புகழ் உயர்த்தி வைக்கும்.

அடுத்த ஐந்தாவது தேவை என்ன ? அதுதான் மெய்ஞானம்.

மெய்ஞானம் என்றால் என்ன ? இறைநிலை ரகசியத்தை அறிவது. இறைநிலை என்பது என்ன. இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் இறைநிலையே. தன்மாற்றம் அடைந்து வேவ்வேறு தோற்றத்தில் தெரிவதாக கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி.

அப்படியானால் நானும் இறைவனின் வடிவமா என்று கேட்டீர்களானால், அதில் சந்தேகமே இல்லை. நீங்களும் கடவுளே !

நீங்கள் எந்த நோக்கத்திற்காக பிறப்பெடுத்து உள்ளீர்கள். பூமிக்கு வந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறதா என்ற தன்னையறியும் விஞ்ஞானம் தான் மெய்ஞானம். அது எப்போது வரும். நல்ல உடல்நலனுடன், நிறைவான வாழ்க்கை வாழும் போது மெய்ஞான தத்துவம் தானே விளங்கும்.
இந்த ஐந்து தத்துவங்களை உள்ளடக்கிய மந்திரச்சொல் வாழ்க வளமுடன். நீங்கள் திரும்ப திரும்ப உச்சரித்து வாழ்த்தும் போது அவர்களின் வாழ்க்கை மேம்பாடு அடைகிறது. அதே நேரம் அதன் பிரதிபலிப்பு உங்களையும் மேம்படுத்தும்.

இது அறிவியல் பூர்வமான,உளவியல் பூர்வமான உண்மை.

இப்போது சொல்லுங்கள் வாழ்க வளமுடன் என்று.

உண்மையில் இது மந்திரச்சொல் தானே.

இந்த வாழ்க வளமுடன் சொல்லை செயலாக்கும் பயிற்சி தான் மனவளக்கலை.

மனவளக்கலைப் பயின்றால் வேறெதுவும் தேவையில்லை.

இந்தியா ஒரு ஆன்மிக பூமி. கோடான கோடி வருடங்கள் கோடான கோடி ரிஷிகளாலும், யோகிகளாலும், சித்தப் புருஷர்களாலும் வழிநடத்தப்படும் பூமி இது. இங்கு காலத்திற்கு ஏற்ப மகான்கள் பிறப்பெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வாறு பிறப்பெடுத்த மகான் அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி, மேல் வர்க்க்கத்திற்கு மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்த இந்த தத்துவங்களை தடைகளை உடைத்து எளியவருக்கும் கற்பித்தவர் வேதாத்திரி மகரிஷி. எனவே இவர் பாமரர்களின் தத்துவஞானி எனவும் போற்றப்படுகிறார்.

அவர் வாழ்ந்த சக்திவாய்ந்த ஆற்றல் களம்தான் ஆழியாறு.


ஆழியாறில் நீங்கள் உலா வரும் போது உங்களுக்குள் ஒரு சுத்திகரிப்பு தானே நிகழ்கிறது.

மனவளக்கலையை பயின்றால் அந்த சுத்திகரிப்பு உங்களுக்குள் நீடித்து நிலைக்கிறது.

பஞ்சமா பாதகங்கள் எனப்படும் பேராசை சினம்,கடும்பற்று,உயர்வு தாழ்வு மனப்பான்மை,முறையற்ற பால் கவர்ச்சி மற்றும் வஞ்சம் ஆகியவை சுத்திகரிக்கப்படும் போது அளவில்லாத ஆனந்தம் உங்களுள் ஊற்றெடுக்கும்.

கோடை விடுமுறையில் குதுகலிக்க ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர் என்ற பறக்கலாம்.இடையில் ஒரு இரண்டு நாள் ஆழியாறு போன்ற புனித இடங்களுக்கு சென்று கொஞ்சம் யோகம் பயில்வது ஆயுள் முழுவதும் ஆனந்ததை அதிகரிக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

வருடத்தின் 365 நாட்களும் வாழ்வில் இன்பம் பொங்க, ஆழியாறு ஊற்றிற்கு சென்று கொஞ்சம் நிரப்பிக்கொண்டு வாருங்கள்.

எக்சேஞ்ச் ஆபர் எல்லா நாட்களும் உண்டு.

ஆழியாறு போங்க ! ஆனந்தம் வாங்க !

2 comments:

  1. வேதாத்திரி மகானின் கருத்துகளை பகிர்ந்தமைக்கு மனமார வாழ்த்துகிறேன் நண்பரே..

    வாழ்க வளமுடன், வாழ்க வையகம்

    ReplyDelete
  2. really interestiing ,sure i will go to alliyar stay and joint mediatation

    ReplyDelete

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...