Saturday, December 18, 2010

கல்யாணம் ஆனவர்களுக்கும் கல்யாணம் ஆகாதவர்களுக்கும்

காயகல்பம் என்பது மருந்தல்ல, ஒரு பயிற்சி என்று குறிப்பிட்டும்,பல மின்னஞ்சல்கள் மெஸ் விஸ்வாதனிடம் முள்ளங்கி சாம்பார் வைக்க வழிமுறைக் கேட்பது போல காயகல்பம் எப்படி தயாரிப்பது,எந்தக் கடையில் சுத்தமான காயகல்பம் கிடைக்கும். எம்.ஜி.ஆரின் பளபளப்புக்கு காயகல்பமும் தங்கப் பஸ்பமும் தான் காரணமாமே என்று வருகின்றன.

எம்.ஜி.ஆரின் பளபளப்புக்கு என்ன காரணம் என்று அவரின் ஒப்பனைக் கலைஞரை தான் கேட்கவேண்டும். மேலும் எம்.ஜி.ஆர் இறக்கும்போது நான் ரொம்பச் சின்னப் பையன், அவ்வளவு தெளிவாக அவர் நிஜ முகம் நினைவில் இல்லை.. எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்று சொல்லலாமா ? வேண்டாமா ? என்று தெரியவில்லை..?!

2003 ல் சாத்தான்குளம் இடைத் தேர்தல்.ஜெயலலிதா பிரச்சாரத்தின் போது செய்தி சேகரிக்க சென்றிருந்தேன்.ஒரு கிராமத்து மக்கள், அம்மு மட்டும்தான் வருதா...வாத்தியார் வரலையா ? என்று கேட்க யாரு வாத்தியார் ? எம்.ஜி.ஆரா ? அவர் எப்போழுதோ செத்துட்டாரே என்று , சொல்லப் போக அங்கிருந்த வயதானப் பெண்கள் துடப்பகட்டையை தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள் அடிக்க.

எம்.ஜி.ஆர் முகத்தின் பளபளப்பை விடுங்கள். காயகல்பம் பயின்றால் நிச்சயம் உங்கள் முகம் பளபளக்கும்,முக ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிறார் திருநெல்வேலி மனவளக் கலை மன்றத்தின் பேராசிரியர் திரு பி.ஆர்.சந்திரன். காயகல்பம் ஆயுள் காக்கும் ஒரு அற்புதப் பயிற்சி. நம்மை என்றும் இளமையுடன் வைத்து இருப்பதுடன், நாம் விரும்பும் வரை நம் ஆயுளை நீட்டிக்கவும் உதவுகிறது. சித்தர்கள் சொல்வார்களே மரணமில்லா பெருவாழ்வு,காயகல்ப பயிற்சியினை கர்மமே கண்ணாக செய்தால் சாத்தியம் என்கிறார் பி.ஆர்.சந்திரன்.

இன்று கல்யாணம் ஆனவர்களுக்கும் சரி...கல்யாணம் ஆகாதவர்களுக்கும் சரி பொதுவான சவால் பாலியல் உணர்ச்சிகள்.

கல்யாணம் ஆகாதவர்களுக்கு தூண்டுதல் சில தவறான செயல்களுக்கு அடிக்கோள்கிறது. கல்யாணம் ஆனவர்களுக்கும் பல நேரம் முழுமையான ஈடுபாடின்மை, ( Pre Ejaculation & Post Ejaculation ) போன்று வேறு ஏதேதோ குறைபாடுகளோ வருகிறது.

பாலுணர்வு இயற்கையான தூண்டுதல். அதனை இயற்கையாகவே நெறிப்படுத்த முடியும்.அத்தகைய யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம்.

காயகல்பம் என்பது எல்லோரும் மருந்தென நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது மருந்து அல்ல,ஒரு உடற்பயிற்சி. நம் தமிழ் நாட்டில் வாழ்ந்து,தற்போது சூக்குமாக உலவிக் கொண்டிருக்கும் சித்தர்களின் அற்புத பயிற்சி.

இதன் அடிப்படை என்ன ?

நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. உடலைப் பகுத்துக் கொண்டே வந்தால் செல்கள் தான் அதன் நுண்ணிய பகுதி. செல்கள் அணுக்களின் தொகுப்பு. இந்த அணுக்களில் ஒரு சுழற்சி நடைபெற்று கொண்டே இருக்கிறது. அந்த சுழற்சியின் மூலமே உடல் எங்கும் ஜீவகாந்தம் என்ற சக்தி பரவுகிறது.

வயதாக வயதாக இந்த சுழற்சியின் வேகம் குறையும்.அப்போது ஜீவகாந்த உற்பத்தி குறையும். இதனால் நரம்பு மற்றும் தோல்களில் ஒரு தளர்ச்சி ஏற்படுகிறது. இதுவே வயோதிகத்திற்கு காரணமாக அமைகிறது. இந்த தளர்ச்சியை சமன் படுத்தவேண்டும்.

எப்படி ?

மிருதங்கம் என்ற ஒரு இசைக்கருவி இருக்கிறது. அதன் மேல் நார்களால் கட்டப்பட்டு இருக்கும்.வாசிக்க வாசிக்க நார்களில் தளர்ச்சி ஏற்படும்.அப்போது என்ன செய்வார்கள், அந்த நார்களை இறுக்குவார்கள். அவ்வாறு இறுக்கிய பின்னர் மீண்டும் மிருதங்கத்தில் ஒலி பிரமாதமாக வரும்.

மிருதங்கம் போன்று நம் நாடி நரம்புகளின் தளர்ச்சியை முறுக்கேற்றவேண்டும்.அது இயற்கையாக இருக்கவேண்டும். என்ன செய்யலாம் என்று சித்தர்கள் ஆராய்ந்தனர். குதிரை போன்ற அதிவேக மிருகங்களையும்,சீறும் பாம்பின் குணாதிசயங்களையும் கூர்ந்து கவனித்த போது,அவர்களுக்கு ஒரு சூட்சுமம் புலப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த காயகல்பம் என்ற பயிற்சியை வடிவமைத்தனர்.

இப்பயிற்சி இளம் வயதிலேயே ஆன்மிக வாழ்வில் ஈடுபடுபவர்கள் மத்தியில் மட்டும் கட்டாயமாக்கப்பட்டு பயிலப்பட்டு வந்தது.நாளடைவில் அவர்களும் பின்பற்றாமல் மற்றவர்களுக்கும் சொல்லித் தராமல் கிடப்பில் போட்டனர்.

பழங்கால ஓலைச்சுவடிகளை ஆராய்ந்த யோகிராஜ் வேதாத்ரி மகரிஷி இதன் நுட்பங்களை ஆராய்ந்து இப்பயிற்சியை உயிர்பித்து எளிமைபடுத்தினார். அவரது ஐம்பதாவது வயதில் கண்டறிந்த அவர் சுமார் இருபது ஆண்டுகள் இதனை தனியே பழகி,இதில் உள்ள உண்மை நிலை உணர்ந்து பின்னர் மக்களுக்கு கற்பித்தார்.

ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில் பிறந்த வேதாத்ரிக்கு ஐம்பது வயதிலேயே வயோதிகம் தாண்டவமாடத் தொடங்கிவிட்டது. கண்கள் ஒட்டி கிடுகிடுவேன இருந்தார். இப்பயிற்சியை பழக தொடங்கிய நாள்முதல் வேதாத்ரி மகரிஷியின் கண்களிலும், தோல்களிலும்ஒரு பிரகாசம் வரத்தொடங்கியது.அவருக்குள் ஒரு உற்சாகம் எப்பொழுதும் இயங்கி கொண்டே இருந்தது. வயோதிகம் என்பது ஒரு பொருட்டல்ல என்பது போல துள்ளித் திரிந்தார்.எழுபது முதல் எண்பது வயதிற்குள் 27 முறை அமெரிக்க பறந்திருக்கிறார்.தொண்ணூற்றி ஆறு வயதிலும் முகத்தில் ஒரு சிறு சுருக்கம் இல்லை. மனவளக்கலையை முழுமையாக்கி பல்கலைக் கழகப் பாடமாக்கும் வரை பூமியில் வாழ்ந்தார்.

சமாதி அடையும் முன் குறிப்பால் கூறி, சொன்னது சொன்னபடி இப்பூவுலக வாழ்வை துறந்தார். அதாவது அவர் வந்த கடமையை அவர் முடிக்கும்வரை அவர் மரணத்தை நெருங்க விடவில்லை. காயகல்பம் மரணத்தை தள்ளிப் போட செய்யும் ஒரு ஆற்றல் மிகு யோகம்.

இப்பயிற்சியை ஆராய்ந்த செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைப் பிரிவு துறைத்தலைவர் க.ஆனந்த நாராயணன், இதன் இயக்க கூறுகளை அறிவியல் பூர்வமாக ஒப்புக்கொண்டு முன்மொழிந்துள்ளார்.

காயகல்பம் அறிவியல் பூர்வமான ஒரு ஆன்மிக யோகப் பயிற்சி.

நாம் உண்ணும் உணவு ஏழு தாதுக்களாக அதாவது இரசம், இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை,மற்றும் சுக்கிலம் என்ற வித்துவாக மாறுகிறது என்பதை நாம் அறிவோம்.அவ்வாறு மாறும் ஏழாவது தாது சுக்கிலம்.இதனை வீணாக்காமல் உயிர்சக்தியாக மாற்றி மீண்டும் மூளைக்கே திருப்பும் போது வயோதீகம் தள்ளிப் போகிறது, இளமை மீட்கப்படுகிறது என்பதை உணர்ந்தனர்.இதன் அடிப்படையில் காயகல்ப பயிற்சியை வடிவமைத்தனர்.

காயக்கல்பத்தில் இரண்டு விதமான பயிற்சிகள் உள்ளன ஒன்று அஸ்வினி முத்திரை என்ற நரம்பூக்கப் பயிற்சி,இரண்டு ஓஜஸ் என்ற மூச்சுப் பயிற்சி. இதனை காலையில் மூன்று நிலைகளில்.மாலையில் இரண்டு நிலைகளில் செய்ய வேண்டும். வெறும் ஆறு நிமிடம் தினம் ஒதுக்கினால் போது உங்கள் ஆயுள் நீட்டிப்பு சாத்தியம்.

சரி கல்யாணம் ஆனவர்களுக்கு என்ன பலன் பார்ப்போம்.

இல்லறவாழ்வில் ஈடுபடும் போது இந்த சுக்கிலம் கழிக்கப்படுவது இயல்பு.எனினும் குழந்தைப் பிறக்கவேண்டுமானால் அதனை உயிர் அணுக்களோடு வெளியாற்றலாம், குழந்தைவேண்டாம் என்று முடிவு செய்த சூழலில் இயற்கையாகவே அதன் உயிர்சக்தியை ஆற்றல் பதங்களாக மாற்றி உடல் முழுவது பரவசெய்து, பிறகு சுக்கிலத்தை வெளியேற்றி இயற்கையாகவே கருத்தரிப்பை தவிர்க்கும் நுட்பமும் காயகல்பத்தில் முடியும். இதனால இல்லறவாழ்வில் எந்த வித குறைபாடும் ஏற்படாது.

இங்கு ஒரு நுட்பம் இருக்கிறது. அதனை பயன்படுத்தும் போது இயற்கையாகவே பிள்ளைப் பேற்றை கவலையின்றி தள்ளிப் போடலாம். சில பெண்களுக்கு காப்பர் – டி உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை. கருத்தடை மாத்திரைகளால் பக்கவிளைவுகள் வரும் வாய்ப்புகளும் தவிர்க்கப் படுகின்றது.

இல்லற வாழ்வில் ஈடுபடும் போது ஏற்படும் வெளியேறும் குறைபாடுகள், அதாவது Pre Mature edaculation போன்ற பிரச்சனைகள் படிபடியாக நீங்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். பாலிஸிஸ் ஓவரியன் சிண்ரோம் ( Polysis Ovarian Syndrome ) போன்ற பிரச்சனைகள் தீர்வதாக ஆராய்ச்சிகள் மூலம் நிருபணமாகியுள்ளது.
கருமுட்டை கோளாறுகள் நீங்கி, குழந்தை பாக்கியம் எளிதில் கிடைக்க உதவுகிறது.

எல்லாருக்கும் அறிவார்ந்த பிள்ளைகள் பிறக்கவேண்டும் என்ற ஆவல் இருக்கும். நமது பழக்க வழக்கங்கள் மூன்றுவிதமான பதிவுகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று சஞ்சிதம் – நம் முன்னோர்களிடம் இருந்து வரும் பதிவுகள். இரண்டு ஆகாமியம் – நாம் பிறப்பெடுத்தது முதல் இன்றுவரை நாம் பழக்க வழக்கத்தால் வந்த பதிவுகள், மூன்று – பிராப்தம் – ஆகாமியமும் , சஞ்சிதமும் கலந்து தரும் விளைவுகள்.

வித்து அணு நீர்ம நிலையில் இருக்கும்போது, தவறான வினைப்பதிவுகள் அதுனூடே இருக்கும். அது கெட்டிப்படும் போது, அத்தகைய தீயப்பதிவுகள் அகன்று வலிமையான வித்துக்கள் மட்டுமே மிஞ்சும். காயக்கல்பம் பயிலும்போது வித்து வலிமைபெற்று அழகான, அறிவான, துறுதுறுப்பான குழந்தை பிறக்கின்றன.

அடுத்ததாக இயற்கையான குழந்தைப் பேறு. எப்படி ஹிப்னோபர்த்திங்கில் இயற்கையான பிள்ளைபேறு சாத்தியமோ அதே போல, காயக்கல்பம் பயின்ற பெண்களுக்கும் சிசேரியன் தவிர்க்கப்படுகிறது.

சரி கல்யாணம் ஆகாதவர்களுக்கும் என்ன நன்மை.?

எங்களுக்கு தானே தோழர், நிறையப் பிரச்சனை என்கிறீர்களா ?

உங்களுக்கு ஒரே பிரச்சனைதான். அதுதான் பாலியல் தூண்டுதல்.

சுய இன்பம் . அண்ணன் மிஷ்கின் புண்ணியத்தால் இதுபற்றி நிறையவே பேசிவிட்டோம் தேவைபடுபவர்கள் இந்த முகவரிக்கு சென்று அப்டேட் செய்துகொள்ளலாம் ( http://rajmohanfourthestate.blogspot.com/2010/12/blog-post_08.html )

திருமணத்தை ஆகும்வரை உங்கள் உயிர்சக்தியை சேமிக்க காயகல்பம் ஒரு வரப்பிரசாதம். சுக்கிலம் நிறையும் போது தான்,அது உடலில் தூண்டுதலை அதிகரிக்கச் செய்து, சுய இன்பம் போன்ற செயல்களுக்கு வழிகோளுகிறது.

காயகல்பம் செய்யும் போது இப்படி நிரம்பும் உயிர் சக்தி ஒஜஸ் என்ற பதங்களாக மாற்றப்பட்டு உடல் சக்தியாக மாற்றபடுகிறது. இதனால் இத்தகைய தூண்டுதல்கள் கட்டுப் பாட்டில் இருக்கும். இளைய வயதில் திசை மாறுதல் நிகழாது. நமீதாவும் நயன்தாரவும் கனவில் வந்து டான்ஸ் ஆட கூப்பிட்டாலும் தைரியமாக போய் ஆடலாம்.

கனவில் ஆடும் நாட்டியத்திற்கெல்லாம் நிஜத்தில் உள்ளாடை நனையாது.யாருக்கு ஐ லவ் யூ சொல்லலாம் ? யார் ஐ லவ் யூ சொன்னாலும் பட்டாம் பூச்சி பறக்காது. அறிவு மட்டுமே முன்னின்று முடிவெடுக்கும். உடலுக்கு இடம் தராது.

உள்ளுணர்வு தவறான நடவடிக்கைக்கு தூண்டுதல் தராது.

ஓஜஸ் பதம் மூளையில் நிறையும் போது ஆரோக்கியம் மேம்படும். நினைவு சக்தி அதிகரிக்கும்.படிக்கும்பாடம் விரைவில் மனதில் பதியும். படிக்கும் வேகம் அதிகரிக்கும். எப்போதும் உடலில் ஒருவித இன்பநிலை குறுகுறுவென ஓடிக்கொண்டிருக்கும். முகப்பருக்கள் fail and lovely இல்லாமலே உங்களுக்கு குட் பை சொல்லும்.

வாரம் ஒருமுறை அழகு நிலையம் செல்லாமலே ஒருவித பளபளப்பு உங்களின் முகத்தில் பிரகாசிக்கும்.

நாடி நரம்புகளின் தளர்ச்சிகள் கட்டுபடுத்தப் பட்டு இளமை முறுக்கு எப்போதும் உடலில் இருக்கும்.
இன்னும் பலபல நன்மைகள் உங்களுள் குடி கொள்ளும்.

இப்பயிற்சியின் யுக்திகள் மிக மிக எளிமையானது. எனினும் நேரில ஒரு ஆசிரியர் வழிகாட்டுதலுடன் மட்டுமே பழகவேண்டும். நீங்கள் காயகல்பம் கற்க விரும்பினால் உங்கள் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தின் முகவரி அறிய ( www.vethathiri.org ) தொடர்பு கொள்ளவும்.

காயகல்பம் பற்றி மேலும் அறிந்துகொள்ள பி.ஆர்.சந்திரன் ( SKYPE : yogirajravi / SKYPE : prchanthiren ) அல்லது ( prchanthiren@gmail.com ) என்ற முகவரியில் தொந்தரவு செய்யலாம்.

பி.ஆர் சந்திரன் ஒரு கர்மயோகி. உங்கள் சந்தேகங்களுக்கு பதிலளிப்பதில் மகிழ்வார். அவரிடம் ஜல்லியடிக்கும் முன்பு உங்கள் செய்தியை தட்டிவிட்டால், அவரே ஸ்கைப் பில் கதைப்பார்.

தேவைப்படுபவர்கள் தட்டுங்கள். திறக்கப்படும்.

நான் சொல்லவில்லை பைபிளில் சொல்லப்பட்டு இருக்கிறது.

எனக்கு எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்ற உண்மையைச் சொன்னதால் துடப்பத்தால் அடிக்க வந்த பெண்கள்தான் நினைவுக்கு வந்தனர். பாவம் அவர்கள் ! எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்றினால் அவர் இறந்தும் உயிரோடு இருப்பதாக நினைக்கிறார்கள். எம்.ஜி.ஆர் தங்கப் பஸ்பம் சாப்பிட்டதை விட இந்த காயகல்ப கலையை அறிந்திருந்தால் இன்னும் நீண்ட நாள் வாழ்ந்திருப்பாரோ என்னவோ ?

2 comments:

  1. நண்பரே,

    அருமை.

    நான் 16 வருடங்களாக செய்து வருகிறேன். அனுபவித்து வருகிறேன். தொடர்ந்து செய்தால் மட்டுமே அந்த அனுபவத்தை உணர முடியும்.

    ReplyDelete
  2. அட! ஆச்சரியமான செய்தி!

    ReplyDelete

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...