Thursday, December 9, 2010

ரஜினியின் சிவாஜியும் : உபேந்திராவின் சூப்பரும்.

கன்னடத் திரையுலக அதிர்ந்துகொண்டிருக்கிறது.

காரணம் ஒரு படம்.

“சூப்பர் ” என்ற தலைப்பு. பேருக்கேற்ப சூப்பர் வெற்றி.

கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா பத்தாண்டுகளுக்கு பின்பு இயக்கி நடித்திருக்கும் படம். தமிழுக்கு பரிட்சையமான அதிரடி தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் படைப்பு.

வெளியாகி ஐந்து நாட்கள் ஆகவில்லை. கர்னாடாகாவே அதன் வெற்றியில் அதகளப்படுகிறது. கன்னடத் திரைத்துறை ஒரு காலத்தில் இயல்பான படங்களுக்காக சர்வதேச தரத்தில் நின்றது.

கன்னடத்தில் படம் பண்ணுவது பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது. புட்டண்ணா கனகல் என்று ஒரு இயக்குனர்,நம்ம ஊரில பாலசந்தர் உட்பட பலரையும் பாதிக்கச் செய்தவர். பாலச்சந்தரின் பல படங்களில் புட்டண்ணா கனகலின் பாதிப்பு இருக்கும். பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்றோர் கன்னட பிரவேசம் செய்தவர்களே.பாரதிராஜா கன்னடப் படங்களில் உதவி இயக்குனராக தொழில் கற்றவர்.

ஆனால் இன்றைய கன்னட சினிமாவின் நிலை கொஞ்சம் பரிதாபகரமானது.வேற்று மொழிப் படங்கள் வியூகம் அமைத்து தாக்க கன்னடத் திரையுலகம் கலங்கி போய் நிற்கிறது.

பத்திரிகை செய்திகளைப் பார்த்தால் ஏதோ கன்னட திரையுலகம் மாற்றுமொழிப் படங்களுக்கு குறிப்பாக தமிழ்படங்களுக்கு எதிரிப் போல தோன்றும். ஆனால் உண்மையில் ஒரு மரணப் போராட்டத்தை சந்தித்து கொண்டிருக்கிறது. பெயருக்கு தான் கர்னாடகாவே தவிர இது ஒரு கலவையான மாநிலம்.

பெங்களூர் தொடங்கி மைசூர் தொடர்ந்து மண்டியா போன்ற மாவட்டங்களில் தமிழ் மக்கள் அதிகம். அதனால் இங்கு தமிழ்படங்களே ரெக்கை கட்டிப் பறக்கும்.பெல்லாரி உட்பட அதன் சுற்றுபுறங்களில் தெலுங்கு மக்கள் அதிகம் வசிப்பதால் சிரஞ்சிவிக்கும், பாலகிருஷ்ண்வுக்கு தான் பால் குடம் தூக்குவார்கள்.பிஜாப்பூர்,பீதர், கோகாக் போன்ற மாவட்டங்களில் மராத்தி மற்றும் ஹிந்தி பேசும் மக்கள் அதிகம். அங்கு அமிதாப் பச்சன்,ஷாருக்கான்,சல்மான் கான் காய்ச்சல் தான் அதிகம்.சரி மங்களூர்,குந்தாப்பூரில் என்ன நடக்கிறது. பாதி கொங்கணி அல்லது துளு மீதி மலையாளம் சம்சாரிக்கும் சேட்டன்களும் , ஹிந்தி பேசும் ஷெட்டிகளும், தமிழ் நாட்டில் உடுப்பி உணவு விடுதிகள் நடத்தி தமிழ் படங்கள் சுவைத்த ”பட்” வகை பிராமாணர்களும் வசிக்கின்றனர். அப்படியென்றால் அங்கு துளு மற்றும் மலையாளபடங்கள்,ஹிந்தி,தமிழ் படங்களுக்கு நோக்கித் தானே காற்று வீசும்.

இப்படி சுற்றமும் நட்பும் வேற்று மொழி சுவாசிக்க, கன்னடபடங்கள் ஓடுவது என்பது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. பெங்களுர் நகரில் மட்டும் நம்ம ஊர் முன்னனி நடிகர்கள் நடித்த படங்கள் என்றால் ஒரே நேரத்தில் நாற்பது ஐம்பது அரங்குகளில் வெளியாகும்.ஆனால் இங்கு ஒரு கன்னட முன்னனி நடிகரின் படம் மொத்த கர்னாடாகவிற்கே நாற்பது ஐம்பது பிரதிகள் வெளியானால அது பெரும் சாதனை.

பார்த்துக் கொள்ளுங்கள் ! பரிதாபகரமான நிலையை.

இப்போது புரிகிறதா ? ஏன் இவர்கள் கோபம் கொள்கிறார்கள் என்று. டார்வின் கோட்பாடு ( Darwin Theory – Survival of the fittest) சரி என்றால் இவர்களின் கோபமும் சரியே !

இந்த சூழலில் புனித் ராஜ்குமார், சிவராஜ் குமார், சுதிப் (இரத்த சரித்திரா–2 ல் உதவிப் போலிஸ் கமிஷனராக சூர்யாவுக்கு உதவுபவராக நடித்திருக்கிறார் ) இவர்கள் படம் கொஞ்சம் ரசிகர்கள் பலத்தால் ஓடும்.

ஒரு காலத்தில் கிரேசி ஸ்டார் என்ற பட்டத்துடன் கன்னட சினிமாவில் ராஜ்குமார் காலத்திலும் கூட முடிசூடா மன்னனாக திகழ்ந்த தமிழர் ( கன்னடத் தமிழர்னு சொல்லுங்க என்கிறார் ) ரவிச்சந்திரன் கூட கற்பனை பற்றாக் குறையினால் மண்ணை கவ்விக் கொண்டிருக்கிறார்.

இத்தகைய சிரமமான களத்தில் “சூப்பர்” என்ற இந்த புதிய படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.கதை ஏறக்குறைய நம்ம ரஜினி நடித்த சிவாஜி போன்றதுதான்.ஆனால் சிவாஜியை விட வலிமையாக மனதை தொடுகிறது.

2030 ஆம் ஆண்டு பெங்களூரில் கதை தொடங்குகிறது.அது ஒரு சொர்க்கபுரி. இருபது ஆண்டுகளில் எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதை ஆராய ஒரு வெளிநாட்டுக்காரர் வருகிறார். சாலையெங்கும் இந்தியர்கள் ராஜாக்களாக வெளிநாட்டினர், குப்பை பொறுக்கி கொண்டு. நம் இனப் பெண்களுக்கு கால் அமுக்கி கொண்டு சேவகம் புரிகின்றனர்.நாம் அந்த அளவிற்கு முன்னேறிவிட்டதாக ஒரு கற்பனை உலகில் சஞ்சரிக்க செய்கிறார் உபேந்திரா. அந்த வெளிநாட்டுகாரர் ஒரு பார்க்கில் மிக சாதாரணமாக உட்கார்ந்து இருக்கும் இளைஞனிடம் டாக்ஸி பிடிக்க உதவி கேட்க ஒரு வினாடியில் டாக்ஸி வருகிறது. அந்த இளைஞனுக்கு நன்றி சொல்லி வண்டியில் ஏறும் போது நீங்கள் யார் என்று அந்த இளைஞனிடம் கேட்க,அதற்கு அந்த இளைஞன் “ நேனு இத்தேச முக்ய மந்ரி” என்கிறார். அதாவது அவர்தான் முதலமைச்சர். சொல்லிக்கொண்டே அவர் ஒரு பாதுகாப்பின்றி சக பிரஜையாக நடந்து செல்லும் காட்சியில் அரங்கில் விசில் பறக்கிறது. எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது.

சிவாஜி மாதிரி ஒரு வெளிநாட்டு இந்தியர் தாய் நாடு திரும்பி நாட்டை திருத்தும் வேலைதான். ஆனால் சிவாஜியை மிஞ்சும் தெளிவான புதிய காட்சிகள், அரசியலை நேரிடையாக கிண்டலடிக்கும் நையாண்டி என்று குலுங்க குலுங்க குஷியாக போகிறது திரைக்கதை.

கர்னாடாகாவின் குதிரைப் பேர அரசியலை சந்தி சிரிக்க வைக்கிறார் உபேந்திரா. செட்டி பிரதர்ஸ் என்று இரண்டு பாத்திரங்களை வைத்து கனிமச் சுரங்க கொள்ளை அடித்து அமைச்சரவையில் இருக்கும் ஜனார்த்தன ரெட்டி கருணாகர ரெட்டி சகோதரர்களின் ஊழல்களை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறார்.நம்ம ஊர் என்றால் சென்சார் கத்தரி மொக்கையாகிவிடும் !

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அவர் ஒரே இரவில் முதலைமச்சர் ஆகும் விதம், கடந்த இரண்டாண்டுகளாக கர்னாடாக அரசியல் குதிரை பேரங்களை அப்படியே அச்சு அசல் பிரதிபலிக்கிறது.

கார்பரேட் ரவுடியிசம் என்று பிரமாணட கட்டிடத்தில் அலுவலகம் அமைத்து ரியல் எஸ்டேட், கடன் வசூல், மிரட்டல் என்று மாத சம்பளத்திற்கு ரவுடிகளை கோட் சூட்டுடன் உலவச் செய்தல். அவர்களை மீட்க வெள்ளைக்கார வக்கீல்கள என்று கற்பனையில் ஒரு நிஜத்தை நிறுத்துகிறார்.பன்னாட்டு நிறுவன வருகையினால் நில-பல பேரங்கள் செய்யும் இத்தகைய குட்டி தாவுத்துக்கள் கர்னாடாகாவில் அதிகம். அரசாங்கத்திடம் பணம் கட்டி மிஷின் கன் பாதுகாப்புடன் பந்தா பண்ணும் ”தா(சோ)தாக்கள்” இவர்கள்.

இடையே நயனுக்கும் அவருக்கும் நடக்கும் போட்டி விறுவிறுப்பு. ஒரு ஆழமான வலிமிகுந்த பின்னனியில் நயனுக்கு ஒரு நல்ல பாத்திரம். ஆனால் கொஞ்சம் படையப்பா நீலாம்பரியை நினைவு படுத்துகிறார்.

நம்ம ரஜினிக்கு கச்சிதமாக பொருந்தும் திரைக்கதை. சிவாஜியில் நிறைய சம்பிரதாயங்கள். ஒரிரு நகைச்சுவை காட்சிகள் தவிர மற்ற எல்லாம் ஏதோ ரஜினிக்காக புனையப்பட்ட உணர்வை தரும்.
ஆனால் உபேந்திரா வெகு இயல்பாக அனைத்தையும் செய்கிறார்.கொஞ்சம் பார்த்திபன் கலந்த நக்கல். ரஜினியை போன்றே ஸ்டைல் என காட்சிக்கு காட்சி ரசிகர்களை கட்டிப் போடுகிறார்.

சூப்பர், சிவாஜி போன்ற ஒரு கதை. ஆனால் பிரமாண்ட என்பதில் கதை தொடங்கி இறுதிக் காட்சி வரை ரஜினியை மிஞ்சும் அசத்தல் அதகளம் தான்.சிவாஜியை 60 கோடி செலவில் தயாரித்ததாக விளம்பரம் செய்து முதல் வாரங்களில் 500 ரூபாய் முதல் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.சூப்பர், சிவாஜியை விட பிரமாண்டமாக வெறும் பதிமூன்று கோடியில் தயாரிக்கப்பட்டு 10 ரூபாய் முதல் 300 ரூபாய் ( ஐநாக்ஸ் போன்ற மால்களில் மட்டும் ) வரைதான் டிக்கெட் விற்கப் படுகிறது.

சமூகப் படமெடுத்து சமூகத்தை கொள்ளை அடிக்கும் செயல் இல்லை !

கலை வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சமூக அவலங்களையும் தோலுரிக்க வேண்டும்.

சூப்பர் இதனை கச்சிதமாக செய்கிறது.

இன்றைய தமிழக சமூக அரசியல் நிலையில் இப்படம் தமிழில் வந்தால் பெரும் வரவேற்பை பெறும்.ஆனால் ரஜினி மட்டுமெ பண்ணமுடியும்.

ஆப்தமித்ரா பார்த்து அப்படியே சந்திரமுகி செய்தார் ரஜினிகாந்த். சூப்பர் பார்த்து கண்டிப்பாக தமிழில் செய்யலாம்.

உபேந்திராவிற்கும் ரஜினியை இயக்கும் ஆசை இருக்கிறது.

ரஜினிக்கு அடுத்த கதை ரெடி ! ஆனால் ரஜினி ரெடியா ?

1 comment:

  1. கன்னட சினிமாவ காப்பத்தனும்னா அது 'கன்னட தமிழர்' ராஜ்மோகன் படம் எடுத்தா தான் முடியும்!

    ReplyDelete

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...