Wednesday, December 8, 2010

கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும் !

சுய இன்பம் பற்றி உங்கள் கருத்து என்ன ?

சுய இன்பம் நல்லதா ? கெட்டதா ?

மிஷ்கின் என்றொரு படைப்பாளி.

மூன்று படங்களைக் கொடுத்திருக்கிறார்.
ஒன்று சித்திரம் பேசுதடி
இரண்டு அஞ்சாதே
மூன்றாவதாக நந்தலாலா.

நந்தலாலாவை இணையத்தளங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.சில விமர்சனங்கள் நந்தலாலா, ஜப்பானின் டகேஷி கிட்டானோவின் கிகுஞ்ஜிரோ என்ற படத்தின் தழுவல் என்றும்,பாதிப்பு என்றும் சொல்லித் திரிகின்றன.

பாரதிராஜாவின் வருகைக்கு பின்னர் மண்ணின் மனம் என்று சொல்லிக்கொண்டு வாய்க்கால்,வரப்பு,வெள்ளைப் புடவை,தாலி,வேப்பிலை அம்மன் டான்ஸ்,ஆலமரம்,பஞ்சாயத்து, பஞ்சாயத்து சொம்பு, இல்லாத படங்கள் இல்லை.

பாரதிராஜாவின் படைப்புகள் வேறு : இமயத்திற்கு நிகர் இமயமே !

ஆனால் அவரின் பாதிப்பில் வந்தோம் என்று சொல்லிக்கொண்டு படம் எடுப்பவர்கள் ஆட்டுக் கொட்டடியில் கதாநாயகியை கதறக் கதற கற்பழித்தல், தக்காளியை தாவணி மீது உருளச்செய்தல், தொப்புளில் பம்பரம்,ஆம்லெட் இத்தியாதிகளை விடுதல்,வயது பெண்ணின் வயிற்றைத் தொடுவதின் மூலம் வயசுக்கு வரச்செய்தல் போன்ற அரிய செயல்களை ஏற்றுகொண்ட நாம் கண்டிப்பாக நந்தலாலா, கிகுஞ்ஜிரோவின் தழுவல் என்றாலும் எற்றுக் கொள்ளவேண்டும்.

யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். நந்தலாலா தமிழ் திரையில் ஒரு முக்கியம் வாய்ந்தப் படம்.

நாம் விவாதிக்கப் போகும் செய்தி அதுவல்ல.

மிஷ்கின் பற்றி. இப்போது கொண்டாடும் இதே ஊடகங்கள் ஒரு மாதம் முன்பு மிஷ்கினை உரித்து ஊறுகாய் போட்டன.நான் மிகவும் ரகசியமாக வைத்திருக்கும் என் பிரத்யோக கைப்பேசி எண்ணைக் கூட கண்டுபிடித்து மிஷ்கினுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க குறுஞ்செய்தி விடுத்திருந்தனர்.
காரணம். மிஷ்கின் ஒரு ஊடகத்தின் மூலமாக உதவி இயக்குனர்களை திட்டினார்.

அப்படி என்ன திட்டினார் ?

இன்றைக்கு திரைப்பட ஆசையில் ஓடிவருகிறவர்களுக்கு என்ன தெரியும். நல்ல புத்தகங்களைப் படிப்பதில்லை. நல்லப் படங்களைப் பார்ப்பதில்லை. வாழ்க்கை அனுபவம் என்ன இருக்கிறது. என்ன ஒரு ஆயிரம் முறை சுய இன்பம் அனுபவித்து இருப்பான். இதை தவிர அவனுக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது . இதுதான் மிஷ்கின் விடுத்த வார்த்தைகளின் சாரம்சம்.

மிஷ்கின் சொல்வதில் ஒரளவு உண்மை இருக்கிறது.

இன்னொரு கோணத்தில் தமிழகத்தில் திரைப்பட உதவி இயக்குனர்களின் அவல நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கிராமத்தில் இருந்து திரைப்பட கனவுடன் வரும் யாரையும் குடும்பம் ஆசிர்வதித்து அனுப்புவதில்லை.அந்தச் சூழலில் சென்னையில் வாழ்வாதாரத்திற்கே பிரச்சனையாக இருக்கும் நிலையில் புத்தகங்கள் வாங்கிப் படிக்க அல்லது திரைப்படங்கள் பார்க்க உதவி இயக்குனர்களுக்கு எப்படிப் பொருளாதாரம் இடம் கொடுக்கும்.இந்த கொடுமையான சூழலிலும் பொது நூலகங்கள், இருப்பவர்களிடம் கடன்வாங்கிப் படித்தல், புத்தகம் வாங்குவது போல் பாசங்கு செய்தபடி புத்தகவிற்பனை நிலையங்களில் நின்றபடி படித்தல் ( ஹி..ஹி..சொந்த அனுபவம் ! ) , தினம் நூறுபக்கம் என்ற கணக்கில் மூன்று நாட்களில் ஒரு புத்தகத்தை படித்துவிடலாம், புத்தகக் கடைகளில் நண்பர்கள் பிடித்துகொண்டு ( ....நான் அடுத்த வருடம் இயக்குனராகி விடுவேன்........ கடைக்காரனை ஒரு கனவில் மிதக்க செய்வது...( உங்களுக்கு தெரியுமா இந்த பையன் நம்ம கடை கஸ்டமர் தான் ...இப்ப பெரிய டைரக்டரா ஆயிட்டான்...!! ) ) என பல்வேறு வழிமுறைகளில் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

நூற்றுக்கு தொண்ணுற்று ஒன்பது இயக்குனர்கள் தங்களது உதவியாளர்களின் சம்பளம் பற்றி கண்டுகொள்வதில்லை. இயக்குனர்கள் துறைத் தவிர்த்து பிறத்துறைப் பணியாளர்கள் வேலை முடித்தவுடன் இவ்வளவு ரூபாய் என்று வாங்கிச் செல்கிறார்,ஆனால் உதவி இயக்குனர்கள் ஒரு ஐம்பது ரூபாய் வழிச்செலவு பெற தலை சொறிந்து நிற்கவேண்டிய நிலை.

இதற்கு என்ன செய்ய வேண்டும் ?

அண்ணன் மிஷ்கின் போன்ற வெற்றி பெற்ற இயக்குனர்கள் இணைந்து நல்ல புத்தகங்கள் மற்றும் உலகத் திரைப்பட குறுந்தகடுகள் கொண்ட ஒரு நூலகத்தை வருங்கால இயக்குனர்களுக்கு அமைத்து கொடுக்கலாம்.

திரைப்படம் சார்ந்த மற்ற சங்கம் போன்று ஒரு படத்தில் பணிபுரியும் உதவி இயக்குனர்களுக்கு சம்பளத்தை வாங்கித் தருவதில் கடுமை காட்டவேண்டும். இயக்குனர்கள் தங்கள் உதவியாளர்களுக்கு முறையாக சம்பளம் தரவேண்டும்.

இதையெல்லாம் செய்துவிட்டு,மிஷ்கின் போன்றவர்கள் தேடும் உதவி இயக்குனர்கள் கிடைக்கவில்லையெனில் கண்டிப்பாக மேடைப் போட்டு கோபத்தை வெளிப்படுத்தலாம்.

படைப்பாளி உணர்ச்சி வசப்படலாம். ஆனால் அவனை படைப்பாளியாகவே அந்த உணர்ச்சி வைத்திருக்கவேண்டும். மிஷ்கின் விவகாரம் ஏதோ அரசியல் கட்சி மேடைப் போல மாறிவிட்டது.

சரி இன்னொன்றையும் மிஷ்கின் கூறினார். அது சுய இன்பம் பற்றி.

ஆமாம் சுய இன்பம் நல்லதா ? கெட்டதா ?

நவீன மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள். அது ஒரு இயல்பான விஷயம். அதனைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.வித்து சக்தி எவ்வளவுதான் வெளியானாலும் மீண்டும் இரத்தம் போல் சுரந்துவிடும்.

எந்தத் தொலைக்காட்சியை திருப்பினாலும் கண்டிப்பான சித்தப்பா மனோபாவத்தில் பளபளப்பு விளக்கு வெளிச்சத்தில் ஒப்பனையோடு இருட்டு விவகாரங்களைத் திட்டும் இந்த சித்த வைத்தியர்கள் என்ன சொல்கிறார்கள்.

சுய இன்பம் தவறு !

சரி அறிவியல் மற்றும் உளவியல் என்ன சொல்கிறது.

நான் யோக பயிற்சி தர சென்றாலும் உளவியல் பயிற்சிக்குச் சென்றாலும் அங்கு வரும் பெரும்பாலானவர்களின் ( பெண்களும் தான் ) என்னிடம் கேட்கும் சந்தேகம் சுய இன்பம் பற்றியோ அல்லது பாலுணர்வு குறித்தோ இருக்கும். நேரிடையாக கேட்கமுடியாவிட்டாலும் கேள்வி ஒரு துண்டு சீட்டில் வந்து சேரும்.அவர்களின் உடல் மற்றும் மனோரீதியான பிரச்சனைகளுக்கு சுய இன்பம் தான் காரணம் என்ற குழப்பத்துடன் பேசுவார்கள்.

சரி சுய இன்பம் சரியா ? தவறா ?

ஒருவர் சுய இன்பத்தில் ஈடுப்படும் போது வித்து சக்தி வெளியேறி ஒரு பரவச நிலையைத் தருகிறது. ஆமாம்...! வித்து சக்தி என்றால் என்ன ? அது எப்படி உருவாகிறது ?

நம் உயிர் சக்தி அல்லது விந்து அணுவைத் தான் நாம் வித்து சக்தி என்கிறோம். நாம் சாப்பிடும் உணவு ஏழு விதமான தாதுக்களாக மாறுகிறது. அது இரசம்,இரத்தம்,மாமிசம்,கொழுப்பு, எலும்பு,மஜ்ஜை மற்றும் வித்துக் குழம்பு. இந்த வித்து குழம்பு தான் விந்து. இந்த வித்துக் குழம்பு நாளாக நாளாக நிறைந்து, வெளியேற யத்தனிக்கும்போது உடலில் ஒருவித தூண்டுதல் மற்றும் கிளர்ச்சி உண்டாகும்.

தாவணிகளை கண்டால் பட்டாம் பூச்சி பறக்கும். நீலப்படம் பார்க்க தூண்டும். பாடப் புத்தகங்களின் அட்டையில் நமீதாவையோ நயன்தாராவையோ ஒட்டச்சொல்லும். பெண்களுக்கு சூர்யாவுடனோ அல்லது ஆரியாவுடனோ கனவுக் காட்சியில் ஆடச் சொல்லும். ஆண்களுக்கு வித்து சக்தி உற்பத்தி அதிகரித்து திரவ நிலையில் நிறைந்து,எண்ணத்தில் ஒரு அழுத்தம் ஏற்பட இரவில் கனவில் ஏதோ நிகழ்ந்து நிஜத்தில் உங்கள் உள்ளாடை நனைக்கும். இது இயல்பாக எல்லோரும் எதிர்கொண்ட ஒரு அனுபவம் தான். இதில் யோகிகளும் விதிவிலக்கல்ல. இது இயல்பானது.

சரி ! இதற்கு மேல் இந்த அனுபவத்தில் ஒரு சுகத்தை உணர்ந்து அதனை செயற்கையாக செயல்படுத்தி பார்க்க தூண்டும் மனோபாவம்தான் சுய இன்பம்.

நவீன மருத்துவம் சொல்கிறது. இது இயல்பானது தான் என்று !

ஒரு துளி வித்து அணு உருவாக கோடானக் கோடி உயிர்சக்தி தேவைப்படும். இந்த சூழலில், செயற்கையாக வெளியேற்றும் போது உடனுக்குடன் உடல் வித்துக்குழம்பை வெளியேற்றும் அளவிற்கு உயிர் சக்தியை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.வித்தை தேவையின்றி வெளியேற்றுவது உயிர் சக்தியின் இருப்பை வீணாக்குவதுதான். !

ஒருவன் ஆரோக்கியமான உணவை உண்ணும்போது தான் இந்த ஆரோக்கியமான மாற்றம் நிகழும். உடன் மது,புகை போன்ற பழக்கம் இருந்தால், சாப்பிடும் உணவில் உற்பத்தியாகும் பாதி உயிர்ச் சக்தியில் மது,புகையால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கவே சரியாகும். மீது உயிர்சக்தி என்னதான் முயன்றாலும் வித்து சக்தி நீர்த்துபோன தன்மையிலேயே இருக்கும்.

வித்துசக்தி கெட்டியாக கெட்டியாக உடல் மற்றும் மனவலிமைக் கூடும்.வித்து குழம்புதான் ஆரோக்கியத்தின் அடிப்படை ஏன் ஆயுளின் அடிப்படையும் கூட. வித்து எந்த அளவிற்கு அதிகமாக உடம்பில் தங்குகிறதோ அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம்,சுறுசுறுப்பு, நினைவுத்திறன், மகிழ்ச்சி எல்லாம் நிகழும்.உங்களைச் சுற்றி ஒரு ஈர்ப்புத் தன்மை பரவும்.

வித்து சக்திக் குறையும் போது சோம்பல்,அடிக்கடி உடல் அசதி, நினைவு மறதி,உடல் நடுக்கம்,நரம்பு தளர்ச்சி, மனதில் குற்ற உணர்ச்சி, கவலை வரும், ஒரு காலத்தில் கவலை மிகுந்து அச்சம் ஏற்படும்.இந்த அச்சம் தான் இன்று லாட்ஜில் ரூம் போட்டு லேகிய விற்கும் மருத்துவர்களின் முதலீடு.

தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபடும் போது உயிர்சக்தி நீர்த்துப் போகும். அதாவது திரவத் தன்மை அதிகமாக இருக்கும்.ஆனால் அதில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும்.அந்த சூழலில் பிறக்கும் குழந்தைகள் கொஞ்சம் நோஞ்சானாக தான் பிறக்கும். மேலும் நீர்த்துப் போன நிலையில் வாழ்க்கைத் துணையுடன் உறவில் ஈடுபடும் போது விரைவில் வெளியாகி உங்களை அசடுவழியச் செய்யும்.ஹி..ஹி...!

இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் . சுய இன்பம் நல்லதா ? கெட்டதா ?.

அடடா ! உடனே குழம்பி போய் கவலையுடன் நிற்கவேண்டாம்.

இந்த உணர்வு இயல்பானது. எப்படி சிறுநீர்,மலம் கழிப்பது இயல்பானதோ, அதே போன்று பால் உணர்வும் இயற்கையின் தூண்டுதலே. அதனால் தான் ஆண்-பெண் நட்பை திருமண பந்தத்தில் இணைத்தார்கள். அவ்வாறு மிகும் கழிவை வெளியேற்ற,இல்லற பந்தம் உறுதுணை புரிகிறது. அதுவரை பொறுமை காத்தல் நலம்.

பொறுத்தார் பூமி ஆள்வர். பொறுமையிழந்தால் பொண்டாட்டியை கூட ஆளமுடியாது !

அது எப்படி?என் சூழலுக்கு நான் உடனடியாக திருமணம் செய்ய முடியாது.அதுவரை நான் எப்படி தாக்கு பிடிப்பது?

நான் சும்மா இருந்தால் கூட அது தூக்கத்தில் வெளியாகிவிடுகிறதே என்ன செய்வது ? உங்கள் செல்லச் சிணுங்கல் கேட்கிறது.

கவலைவேண்டாம். இது உங்களுக்கு மட்டும் பிரச்சனையல்ல. வீரத்துறவி விவேகானந்தருக்கே இது பிரச்சனையாக இருந்திருக்கிறது.பாலியல் தொந்தரவை கட்டுப்படுத்த முடியாமல் தன் உறுப்புகளை எரியும் நெருப்பில் பொசுக்கிவிட முயற்சித்தார் என்று அவர் வாழ்க்கை வரலாறு புத்தகம் சொல்கிறது. விவேகானந்தரை விடுங்கள், நம்ம நித்யானந்தா ரஞ்சிதா சமாச்சாரம் உலகிற்கே தெரியுமே. கேரளாவின் கன்னியஸ்திரிகள் கதைகள் இப்பொது நாவலாகவும் கிடைக்கின்றது.

இதில் இருந்து என்ன தெரிகிறது. பாலியல் உணர்வை கட்டுபடுத்த முடியாது. ஆனால் நெறிப்படுத்த முடியும்.

பாலுணர்வை நெறிபடுத்த ஒரே வழி. நம் மனதை எப்போது ஆரோக்கியமாக அத்தகைய சிந்தனைகளில் விழாமல் வைத்திருப்பது தான். அதற்கு பெரிதும் உதவுகிறது தியானம். அவரவர் விரும்பிய வகையில் ஏதேனும் ஒரு தியானத்தை கற்றுக்கொண்டு பயிற்சி செய்து வந்தால் மனம் ஒருமைப்படும்.

உணவுமுறையில் ஒழுக்கம்.உடல் கிளர்ச்சியைத் தூண்டும் உணவு வகைகளை அளவோடு எடுத்துக் கொள்வது அல்லது முற்றிலும் தவிர்த்தல் நலம்.(Alcohol Increase the Sexual Desire: But not the pleasure).முட்டை சார்ந்த உணவுகள் புரத நிறைந்துக் காணப்படுவதால் அது உண்ணும் போது தூண்டுதல் அதிகமாக இருக்கும்.விவேகானந்தர் புகைப்பதை விரும்பினார்.மீன் உணவிலும் பிரியம் கொண்டிருந்தார் என்கிறது அவரின் சரிதை. அதனால் கூட அவருக்கு உடலியல் தூண்டுதல் அதிகமாக இருந்திருக்கலாம்.

உணவிற்கு அடுத்தபடியாக தனிமையை தவிருங்கள்.பெரும்பாலும் தனிமையான சூழலில் தான் இத்தகைய எண்ணங்கள் ஏற்படும். முக்கியமாக கிளர்ச்சியூட்டும் படங்களைப் பார்ப்பதை தவிர்க்கலாம்.

எது என்னவென்றாலும், எண்ணத்தின் அடிப்படையில் தான் எல்லா செயல்களும் எழுகின்றன. உங்களுக்கு இச்செயல் குற்ற உணர்ச்சித் தரும் எனில் அதில் நீங்கள் ஏன் ஈடுபடவேண்டும்?
ஒரு சங்கல்பத்தை “இது என் உடலுக்கும் மனதிற்கும் ஒவ்வாத செயல் ; இதில் இருந்து விடுபடுவேன்,என் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் காப்பேன்” என்று தினந்தோறும் விழிக்கும்போது எடுத்துக்கொள்ளலாம். இது நாளடைவில் மனதினுள் ஒரு கட்டளையாகவே பதிந்து உங்களைக் காக்கும்.

இன்னொன்றும் இருக்கிறது. அது தான் காயகல்பம் என்றொரு யோகமுறை.

காயகல்ப யோகம் என்ற சித்தர் பயிற்சி உயிர்சக்தியை பாதுக்காப்பதில் உறுதுணைப்புரிகிறது.

சிவவாக்கியர் என்னும் சித்தர் காயகல்பத்தின் அற்புதத்தை இவ்வாறு சொல்கிறார்.

“உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தில் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரோ
விருத்தரும் பாலராவார் அருள் தரித்த
அம்மைப்பாதம் அய்யன் பாதம் உண்மையே “


காயகல்ப பயிற்சியின் மூலம் உயிர்சக்தி ஒஜஸ் பதங்களாக மாறும்போது மூப்பு வராது, என்றும் இளமையுடன் திகழ்வர், அதாவது கிழவனும் குமரனாவான் என்பது அதன் சாரம்சம்.

காயகல்பம் பிரம்மசாரிகளுக்கு மட்டுமல்ல இல்லற ஜோதிகளுக்கும் ஒரு வரப்பிரசாதம். வயக்கரா இல்லாமலே அதன் வேலையை காயகல்பம் செய்யும். அதே நேரம் காயகல்பத்தின் இன்னொரு யுக்தி பாலியல் உணர்வை கட்டுப்படுத்தி,வித்துசக்தியை கெட்டிபடுத்தி இளமை நோன்பு காக்கவும் உதவும். உடலில் வித்து சக்தி மிகும்போதெல்லாம் இந்த யுக்தியின் மூலம் கெட்டியாக்கி கொண்டே வரமுடியும். இதன் மூலம் வித்தில் நீர்ப்புத் தன்மை குறைந்து தூண்டுதல் சமன்படும்.

காயகல்பம் என்பது மருந்துகடைகளில் கிடைக்கும் மருந்தல்ல அது ஒரு பயிற்சி. எனக்குத் தெரிந்து உலகில் ஒரே ஒரு யோக மையத்தில் மட்டுமே அது பயிற்றுவிக்கப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள். அதுதான் வேதாத்ரி மகரிஷி குண்டலிணி யோக ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை. இணையம் : www.vethathiri.org.

தமிழ் படைப்பாளிகள் ஒரு வெற்றிக்கு பின்பு தங்களை உலகை காக்க வந்த ஆபத்பாந்தவனாக காட்டிக்கொள்ளும் மோகம் அதிகரித்துவருகிறது.தயிப் லவுச்சிச்சி ( Taib Louchichi ) என்றொரு துனிஷிய இயக்குனரை சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைத் திரைப்பட விழாவில் சந்தித்தேன். WIND DANCE என்ற அற்புதமான படத்தை கொடுத்தவர்.அவரிடம் கொஞ்சம் ஆர்வக்கோளாறில் நணபர்கள் மத்தியில் உரையாற்ற கேட்டபோது,அவரின் பதில் இது “ நீ ஒரு நல்ல படைப்பாளி என்றால் பேசாதே ! செய் ! படைப்பாளி பேசக்கூடாது. அவன் படம் மட்டும்தான் பேசவேண்டும். பேசும் நேரத்தில் இன்னொரு படம் பற்றி சிந்திக்கலாம்” என்றார்.

அண்ணன் மிஷ்கின் நந்தலாலா மூலம் பேசப்படும் படத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் பேசும் போதே இப்படி என்றால், பேசாமல் படைத்தால் எப்படி இருக்கும் ? அண்ணன் மிஷ்கின் அவர்களே உங்கள் மீதான விமர்சனங்களுக்கு நந்தலாலா நல்ல பதில்.

இனி நீங்கள் பேசாதீர்கள். உங்கள் படைப்புகளைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்.

2 comments:

  1. Hello sir vunga informations padichen usefulla irundadu . romba romba robma thanks.nan suya inbathal adikam pathikappattu tharkolai seithu kollum alavukku vanthuvitten.memry loss irukrathale ennale sariya work kude panna mudile .velai poivitum sulnilayil iruken.ingu manavalakkalai manram arukil illai .vungalukku siramam illayenral thayavu seithu antha kayakalpa yoga payirchi eppadi seivadu enpadu patri sollungal pls.intha madiri memory loss , ethilum aarvaminmai , virakthi ponra prachnaikalukku maruthuva sikichai patri ethavadu thakavalkal irundal kandipaka kodungal sir.enaku en life ku antha thakavalkal mika vuthaviyaka irukkum.oru velai neengal sonna intha thakavalkal 9 varudangalukku munbe kitaithirundal yen valkai veru madiri yirundirukkum .meendum voru murai vungalukku nanri sollikkolkiren sir.Mail -cbestudents1234@gmail.com )

    ReplyDelete
  2. சொன்ன புரியாது , செஞ்சா புரியும் ,
    உங்கள் படைப்புகளை பேசவிடுங்க அண்ணா ......

    ReplyDelete

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...